வெண்பூதியார்

வெண்பூதியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன.[1] பூதன் என்பது ஆண்பாற்பெயர். பூதி என்பது அதன் பெண்பாற்பெயர். இவர் பெண்புலவர்.

திருமணக் காலம் தள்ளிப்போகிறது. தலைவி வருந்தித் தன் தோழியிடம் சொல்கிறாள். நான் இங்கே இருக்கிறேன். என் உடல்நலம் அவர் வாழும் கானல் ஊருக்குப் போய் மிகவும் தொலைவில் உள்ளது. அவர் தம் ஊரில் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் உள்ள மறை இங்குள்ள ஊர்மன்றத்தில் இருக்கிறது. (என்ன செய்வேன்?) [2]

தலைவன் பிரிந்து செல்லவிருப்பதைத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள். அதற்குத் தலைவி சொல்லும் மாற்றந்தான் இந்தப் பாடல். அவர் செல்லும் வழியில் மழை இல்லை. கள்ளிக்காயே ஈரம் இல்லாமல் வெடிக்கிறது. அந்த ஒலியைக் கேட்டுப் புறா பறந்தோடுகிறது. இப்படிப்பட்ட வழியில் அவர் செல்கிறார். இதனை எண்ணிப் பார்த்தால், இந்த உலகில் வாழ்பவர்களுக்குப் பொருள் ஒன்றுதான் பொருள். அருளுக்குத் துணை ஆரும் இல்லை.[3]

அவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். அவனுக்குக் கேட்கும்படி தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். அவரை நினைந்து என் மேனி பசந்துகொண்டிருக்கிறது. நான் நயப்பவர் நெஞ்சில் நார்(=அன்பு) இல்லை. என்தாய் என்னை என் வீட்டில் செறித்து வைத்திருப்பதும் கடுமையாகிவிட்டது. இதற்கு இடையே என் நெஞ்சம் அவரிடம் சென்றுவிடலாம் என்கிறது. இது சும்மா சொல்லிக்கொண்டு இங்கேதான் இருக்கிறது. இப்படி என் நெஞ்சம் சேர்ப்பன் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. தோழி! இது நீர்மையோ? (=ஒழுங்கோ) [4]

அடிக்குறிப்புதொகு

  1. குறுந்தொகை 97, 174, 219
  2. குறுந்தொகைப் பாடல் 97 திணை - நெய்தல்
  3. குறுந்தொகைப் பாடல் 174 திணை - பாலை
  4. குறுந்தொகைப் பாடல் 219 திணை - நெய்தல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பூதியார்&oldid=2718235" இருந்து மீள்விக்கப்பட்டது