வெளிப்புற வெப்பக்காப்பு முடிப்பு முறைமை

வெளிப்புற வெப்பக்காப்பு முடிப்பு முறைமை (Exterior Insulation and Finishing System) என்பது, கட்டிடங்களின் வெளிப்புறத்தை முடிப்புச் செய்யும் ஒரு முறைமை ஆகும். இது வெப்பக்காப்பு, நீர்த்தடுப்பு, முடிப்பு ஆகியவற்றை ஒருங்கே வழங்கக்கூடிய ஒரு கூட்டுப் பொருள் தொகுதி ஆகும். கட்டிடங்களின் வெளிப்புறங்களை வெப்பக்காப்புச் செய்யும் முன்னைய முறைகளில் வெப்பக்காப்புப் பொருள்கள் இரட்டைச் சுவர்களுக்கு இடையில் பொருத்தப்பட்டன. அல்லது வெப்பக்காப்புப் பொருள்களைப் பொருத்திய பின் அதன்மேல் உலோகத் தகடுகள், கற்பலகைகள், கண்ணாடியிழை வலிதாக்கிய காங்கிறீட்டுப் படல்கள் போன்ற கடினமான பொருட்களால் போர்த்தப்பட்டன. ஆனால், 'வெளிப்புற வெப்பக்காப்பு முடிப்பு முறைமையில், வெப்பக்காப்புக்காக நுரைப்பலகைகளைப் பொருத்திய பின்னர் அதன் மீது நேரடியாகவே தடிப்புக் குறைந்த முடிப்புப் பூச்சுப் பூசப்படுகின்றது. வட அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இம்முறைமை பெருமளவில் பயன்பட்டு வந்தாலும், பிற நாடுகளில் இன்னும் பரவலான பயன்பாட்டில் இல்லை.

வெளிப்புற வெப்பக்காப்பு முடிப்பு முறைமையின் பிறப்பிடமான செருமனியில் இதனைப் பயன்படுத்திக் கட்டியுள்ள ஒரு வீடு

வரலாறு தொகு

இந்த முறைமை செருமனியில் முதன் முதலாக அறிமுகமானது. இரண்டாம் உலகப் போரின் போது செருமனியில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. அவற்றின் முகப்புக்களைத் திருத்தியமைப்பதில் உதவக்கூடிய ஒரு கட்டிடப்பொருளாக இது உருவானது. 1960 களின் பிற்பகுதியில் இது வட அமெரிக்காவில் அறிமுகமாகிப் பயன்பட்டது. டிரைவிட் என்னும் நிறுவனம் அமெரிக்காவில் முதன் முதலாக இதை உற்பத்தி செய்து விற்றது. மலிவானது என விளம்பரப்படுத்தியதால் இது பலராலும் விரும்பப்பட்டது. தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்த வணிகக் கட்டிடங்களில் ஏறத்தாழப் 10% மான கட்டிடங்கள் இம் முறைமையைப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது[1].

பயன்பாடு தொகு

 
வெளிப்புற வெப்பக்காப்பு முடிப்பு முறைமையில் அடங்கியுள்ள கூறுகள்

இம்முறையை வெப்பக்காப்புச் செய்ய வேண்டிய பலவிதமான கட்டிடங்களிலும் பயன்படுத்துகின்றனர். வெப்பக்காப்புப் பொருட்கள் எவ்வளவு செயற்றிறன் கொண்டவையாக இருந்தாலும் மொத்தமாகச் சுவர்த் தொகுதியைப் பார்க்கும்போது ஆங்காங்கே வெப்ப வழிகள் (அல்லது வெப்பப் பாலங்கள்) இருக்குமானால் சுவரின் வெப்பக்காப்புத் திறன் வெகுவாகக் குறைந்துவிடும். மாற்று முறைகள் பலவற்றில் வெப்பப் பாலங்கள் இல்லாமல் காப்புப் பொருட்களைப் பொருத்துவது கடினமானது. வெளிப்புற வெப்பக்காப்பு முடிப்பு முறைமை கட்டிடங்களுக்கு வெளியில் பொருத்தப்படுவதால் வெப்பப் பாலங்களை இலகுவாகத் தவிர்க்கக்கூடியதாக உள்ளது. முறையாகப் பொருத்தினால் பல்வேறு மாற்றுச் சுவர்க் கட்டிட முறைகளைக் காட்டிலும் இம்முறை கூடிய செயற்றிறன் கொண்டது எனவும், 20 - 30% வரை ஆற்றல் செலவை இவை குறைக்கும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன. இம்முறைமையில் முக்கியமான பகுதி வெப்பக்காப்புப் பொருளான விரிவடைந்த பாலிஎசுட்டைரீன் பலகைகள் ஆகும். இவற்றைச் சுலபமாகப் பல்வேறு வடிவங்களில் வார்க்கவும், வெட்டவும் பொருத்தவும் முடியும் என்பதால் இம்முடிப்பைப் பல்வேறு வடிவங்களைக் கொண்ட கட்டிடக்கூறுகள் மீது பொருத்துவது இலகு. அத்துடன் பல்வேறு அலங்கார வடிவங்களையும் இலகுவாக உருவாக்கலாம். இது மிகவும் நிறை குறைந்தது அதனால் கட்டிட அமைப்பில் கூடுதலான சுமையை ஏற்றாது. மாற்றுச் சுவர்க் கட்டுமானங்களுடன் ஒப்பிடும்போது தடிப்புக் குறைந்ததாகையால் இடச் சேமிப்பும் இதன் பயன்களில் ஒன்றாகும்.

பிரச்சினைகள் தொகு

இதனைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இதில் பல பாதகமான அம்சங்களும் உள்ளன. முக்கியமாகப் பல பிரச்சினைகள் பொருத்துவதில் ஏற்படுவன என்று கூறப்படுகின்றது. வெப்பக்காப்புப் பலகைக்கும், அதைத் தாங்கியுள்ள பின்புலப் பொருளுக்கும் இடையில் ஈரத்தன்மை புகுவது இதனால் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. பயிற்சி பெற்ற தொழிலாளர்களே இம் முறைமையைப் பொருத்துவதில் ஈடுபடவேண்டும் எனவும், கட்டிடங்களைக் கட்டுபவர்கள் பயிற்சி பெறாத தொழிலாளர்களைக் கொண்டு இதனைப் பொருத்துவதால் இம்முறைமை ஒழுங்காகச் செயல்படத் தவறிவிடுகிறது என்பது இம்முறைமையை உற்பத்தி செய்பவர்களின் கருத்து. அதே வேளை உற்பத்தி செய்யும்போது இவ்வாறான நடைமுறைச் சிக்கல்களை உற்பத்தியாளர்கள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

குறிப்புக்கள் தொகு