வே. செந்தில்பாலாஜி

தமிழக அரசியல்வாதி

வே. செந்தில்பாலாஜி (V. Senthilbalaji, பிறப்பு: அக்டோபர் 21, 1975) அரசியல்வாதியும், தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார். இவர் கரூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

வே. செந்தில்பாலாஜி
மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
7 மே 2021 – 16 சூன் 2023
போக்குவரத்து துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
15 மே 2011 –  27 சூலை 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 21, 1975 (1975-10-21) (அகவை 48)
ராமேஸ்வரப்பட்டி, கரூர், தமிழ்நாடுஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
பிற அரசியல்
தொடர்புகள்
அஇஅதிமுக (2000-2017)
துணைவர்மேகலா செந்தில்பாலாஜி
பிள்ளைகள்எஸ். நந்தினி (மகள்)
பெற்றோர்
 • பி.வேலுசாமி (தந்தை)

2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாவது முறையாக கரூர் சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக  அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

திமுக கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், 14 திசம்பர் 2018 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[2] கட்சியில் சேர்ந்தவுடன் இவருக்கு கரூர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அரவக்குறிச்சி தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 23 மே 2019 அன்று சட்டமன்ற உறுப்பினராக நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்ற பிறகு இவர் டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். முதல்வரை மாற்றுமாறு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்துக்கு மனு அளித்ததற்காக 18 செப்டம்பர் 2017 அன்று சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

2011-ல் நடந்த 14வது சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவர் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[3]. 2006ஆம் ஆண்டுத் தேர்தலிலும் இவர் அதிமுக கட்சியில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இளமைக் காலம் தொகு

வே. செந்தில்குமார் என்னும் இயற்பெயரை உடைய வே. செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தார்.

கல்வி தொகு

கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்புத் தேறிய அவர், கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். அரசியல் ஆர்வத்தின் காரணமாக அப்படிப்பை 16.4.1995ம் நாள் இடைநிறுத்தம் செய்துவிட்டார்.

குற்றச்சாட்டு தொகு

ஆனால் தான் பி.காம் பெற்றதாக தனது கட்சியின் தலைமைக்கு தெரியாமல் மறைத்தார் என்றும் சட்டசபை ஆவணங்களில் பி.காம் தேறியதாக பதிந்தார் என்றும் இவர் மீது குற்றச்சாட்டு உண்டு. ஆனால் 2011ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலின்பொழுது தனது வேட்புமனுவில் படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

அரசியல் வாழ்க்கை தொகு

பட்டப்படிப்பை 1995ஆம் ஆண்டில் இடைநிறுத்தம் செய்த செந்தில்பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 2000மார்ச் 13ஆம் நாள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் மாவட்ட செயலாளர் போன்ற பொறுப்புகளைப் பெற்றார். இதன்பிறகு தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பிலிருந்தும் 27 சூலை 2015இல் நீக்கம் செய்யப்பட்டார்.[4] ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் டி. டி. வி. தினகரன் ஆதரவாளராக இருந்த இவர். 2018 திசம்பர் 14 அன்று திமுகவில் இணைந்தார்.[5]

வகித்த பதவிகள் தொகு

கட்சிப் பதவிகள் தொகு

 • 2000 செப்டம்பரில் அ.தி.மு.க.வின் கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
 • 2004ஆம் ஆண்டு அதே கட்சியின் கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆனார்.
 • 2007 மார்ச் 11ஆம் நாள் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆனார்.
 • 2007 மார்ச் 21ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆனார்.
 • 2015 சூலை 27ஆம் நாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[6]

அரசாங்கப் பதவிகள் தொகு

 • 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
 • 2011 மே 16ஆம் நாள் முதல் 27 சூலை 2015 முடிய தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியில் இருந்தார்.
 • 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, திமுக  அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

வழக்கும், கைதும் தொகு

வேலைக்கு இலஞ்சம் தொகு

2011-2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். சூலை 2015ல் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார். இவர் அமைச்சராக இருந்த போது 2014-15ம் ஆண்டில் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர்கள் உட்பட 81 பதவிகளுக்கு பணி நியமனம் செய்ய தனது தம்பி அசோக் குமார் மற்றும் நேர்முக உதவியாளர் சண்முகம் மூலம் ரூபாய் 1.62 கோடி கையூட்டுப் பணம் பெற்றார். தேவசகாயம் என்பவரின் மகனுக்கு பேருந்து நடத்துனர் பணிக்காக ரூபாய் 2,60,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. பாதிக்கப்பட்ட மற்றொருவர் 2016ஆம் ஆண்டு அளித்த புகாரின்படி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார் மற்றும் மைத்துனர் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ரூபாய் 2.31 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. ஏப்ரல் 2019ல் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வேலை வாங்கி தருவதாக 40 இலட்சம் ரூபாய் வசூலித்ததாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2021ல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் வேலைக்கு லஞ்சமாக பணம் வாங்கியது தொடர்பான சர்ச்சையை சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர். சமரசம் மற்றும் சண்முகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் 30 சூலை 2022 அன்று செந்தில் பாலாஜி மீதான குற்ற வழக்கை ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 1 டிசம்பர் 2022 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் தனக்கு அரசு வேலை வழங்காமல், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க தகுதிப் பட்டியலில் சேர்த்திருந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் அமைச்சரின் தனி உதவியாளர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட ஊழல் வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தலைமை நீதிபதி என். வி. இரமணா, நீதிபதிகள் அ. சோ. போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி, 2023ல் விசாரித்தது.[7] இவ்வழக்கை இரண்டு மாதங்களுக்குள் முதலிருந்து விசாரிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டடது.

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்து கொள்ள நீதிமன்றத்தில் மனு செய்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. அமலாக்கத் துறை, உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து செப்டம்பர், 2022ல் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறை விசாரிக்க அனுமதி பெற்றது.[8]

அமலாக்கத்துறையின் சோதனை, கைது & விசாரணை தொகு

13 சூன் 2023 அன்று பண மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு, ஆவணங்கள் கைப்பற்றினர்.[9] 14 சூன் 2023 அன்று அதிகாலையில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜியை கைது செய்யப்பட்டவுடன், நெஞ்சு வலியால் அவதிபட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[10][11] மருத்துவ சிகிச்சை முடிந்த பின் 17 சூலை 2023 அன்று செந்தில் பாலாஜியை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.[12] 55 நாள் நீதிமன்றக் காவலில் இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 7 ஆகஸ்டு 2023 அன்று 5 நாள் விசாரணைக்கு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.[13][14]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
 2. DIN (2018-12-14). "18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார் செந்தில் பாலாஜி". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-04-08.
 3. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
 4. http://www.dinamalar.com/news_detail.asp?id=1305743
 5. "அரசியல் எதிரிகளை பழிவாங்க திமுகவில் இணைந்தாரா செந்தில்பாலாஜி?". கட்டுரை. இந்து தமிழ். 15 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2018.
 6. த இந்து மின்னிதழ் 2015 சூலை 27
 7. செந்தில் பாலாஜியை விடாமல் விரட்டும் பண மோசடி வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது?
 8. The job-for-cash scam case that brought ED to Senthil Balaji's door
 9. ED raids TN electricity minister V Senthil Balaji in money laundering probe
 10. Senthil Balaji's arrest by ED, judicial custody legal: Madras High Court
 11. How Senthil Balaji’s arrest unleashed controversy and conspiracy theories
 12. அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்
 13. 55 days after his arrest, Tamil Nadu minister Senthil Balaji sent to 5-day ED custody
 14. அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக காவலில் எடுத்தது அமலாக்கத் துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._செந்தில்பாலாஜி&oldid=3944171" இலிருந்து மீள்விக்கப்பட்டது