ஹர் கோவிந்த் கொரானா

மூலக்கூற்று உயிரியலாளர்

அர்கோபிந்த் குரானா, அல்லது ஹர் கோவிந்த் குரானா (Har Gobind Khorana, இந்தி: हरगोविंद खुराना, சனவரி 9, 1922 - நவம்பர் 9, 2011[1]) ஓர் இந்திய அமெரிக்க மூலக்கூற்று உயிரியல் அறிவியலாளர் ஆவார். மரபுக்குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் மரபு குறியீட்டின் பங்கு குறித்த ஆராய்விற்காக 1968ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினை மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து பெற்றவர்[2]. 1966ஆம் ஆண்டு அமெரிக்காவின் இயல்பான குடிமகனான இவருக்கு தேசிய அறிவியல் பதக்கம் கொடுக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்சில் கான்கார்ட் நகரில் இவர் வசித்து வந்தார்.

மரு. அர்கோபிந்த் குரானா
அர்கோபிந்த் குரானா
பிறப்புசனவரி 9, 1922 (1922-01-09) (அகவை 102)
ராய்பூர், முல்தான், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்புநவம்பர் 9, 2011(2011-11-09) (அகவை 89)
கான்கார்ட், மாசசூசெட்ஸ், ஐஅ
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைமூலக்கூற்று உயிரியல்
பணியிடங்கள்எம்.ஐ.டி(1970 - )
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)(1960-70)
பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகம்(1952-60)
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(1950-52)
ஸ்விஸ் கூட்டமைப்பு தொழில்நுட்பக் கழகம்,சூரிக் (1948-49)
கல்வி கற்ற இடங்கள்லிவர்பூல் பல்கலைக்கழகம்(Ph.D.)
பஞ்சாப் பல்கலைக்கழகம்(B.S.)(M.S.)
அறியப்படுவதுமுதன்முதலாக செயற்கை புரத உற்பத்தியில் நியூக்கிளியோதயிட்டுகளின் பங்கினை நிலைநாட்டியவர்.
விருதுகள்மருத்துவத்துக்கான நோபல் பரிசு (1968)

இளமை

தொகு

தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ராய்பூர் கிராமத்தில் 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் கிராமத்தில் வரி வசூலிப்பவராக பணியாற்றி வந்தார். இவருடைய குடும்பம் வறுமையில் வாடிய போதும், பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் தந்தை மிகுந்த ஆர்வம் காட்டினார். சுமார் 100 குடும்பங்கள் கொண்ட அவரது கிராமத்தில் குரானாவின் குடும்பம் மட்டுமே எழுத்தறிவு பெற்று விளங்கியது. குரானாவின் தொடக்கக் கல்வி கிராமப் பள்ளியில் மரத்தடியின் கீழ்தான் துவங்கியது. இளவயது முதலே அவர் படிப்பில் சிறந்து விளங்கினார்.

தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள மூல்டான் என்ற ஊரில் அமைந்திருந்த டி.ஏ.வி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 'இரத்தன்லால்' என்ற ஆசிரியர் இவரைக் கவர்ந்தவராக விளங்கினார். பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்த இவர் லாகூரில் அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பி.எஸ்சி பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். இங்கு பேராசிரியரும் சிறந்த ஆய்வாளருமான 'மதன்சிங்' என்பவரின் மேற்பார்வையில் 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
1945- இல் இந்திய அரசின் உதவித்தொகை கிடைக்கப்பெற்று இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். இங்கு 'ரோஜெர் ஜே.எஸ்.பீர்' என்பவர் இவருக்கு வழிகாட்டியாய் விளங்கினார். இங்கு வந்த பிறகு மேலைநாட்டுக் கலாச்சார வழியைப் பின்பற்ற ஆரம்பித்தார்.
1948-49 களில் சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார். விலாடிமிர் பிரிலாக் என்ற பேராசிரியர் இவருடைய முன்னேற்றத்திற்கும் அறிவியல் ஆர்வம், பணியில் ஈடுபாடு, அதற்கேற்ற திறன்களை வளர்ப்பது ஆகியவற்றின் வழிகாட்டியாக விளங்கினார்.1952-ல் கனடா சென்ற குரானா, அங்கு சுவிஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மகள் எஸ்தர் எலிசபெத் சிப்லர் என்ற மங்கையின் நட்பு கிடைத்தது. பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர்.

பணிகள்

தொகு

1949 இறுதியில் இந்தியா இந்தியா திரும்பினார். இந்தியாவில் பல மாதங்கள் வேலையின்றி வாடிய குரானா மேற்கொண்டு ஆய்வு செய்யும் எண்ணத்தோடு மீண்டும் இங்கிலாந்து சென்றார். முனைவர் ஜி.டபிள்யூ.கென்னெர், நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சர் அலெக்சாண்டர் டாட் என்பவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1950-52 ஆண்டிகளில் புரதங்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். 1952-ல் பிரித்தானிய கொலம்பியா ஆய்வகத்தில் முனைவர் கோர்டன் எம்.ஷ்ரம் என்பவரின் அழைப்பின் பேரில் ஆய்வாளராகப் பணியேற்றுக் கொண்டார். முனைவர் ஷ்ரம் அவர்கள் அளித்த உற்சாகத்தினாலும் முனைவர் ஜேக் கெம்பெல் அவர்களின் ஆலோசனையுடன் பாஸ்பேட் எஸ்டர்கள், நியூக்ளிக் அமிலங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவருடன் மேலும் பலரும் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்த போதும் 'முனைவர் கோர்டன் எம். டெனெர்' என்பவர், குழுவின் ஆய்வு முன்னேற்றதிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் விளங்கினார்.
1960-ல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் இணைந்து அனைத்து ஆய்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். அப்பொழுது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. 1962 முதல் 1970 வரை, உயிர்வேதியல் பேராசிரியராகவும் அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றினார்.

ஆய்வுகள்

தொகு

அவர் 1959இல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாததான இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்தார். அடுத்த ஆண்டில் குரானா அமெரிக்கா சென்று விஸ்கான்சின் பல்கலைக்கழக நொதி ஆய்வு நிறுவனத்தில் தமது நோபல் பரிசு சக ஆய்வாளர் மார்சல் நோரென்பர்க் உடன் சேர்ந்து செயற்கை உயிர் உற்பத்தித் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அங்கு அவர்களின் ஆய்வின் பயனாக மரபுவழிப்பட்ட நோய்கள் சிலவற்றைக் குணமாக்க இயலும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்புக்காக 1968இல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு குரானா, நோரென்பர்க், ஹாலி (Holley) ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் 1970இல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவி, குரானாவுக்கு அளிக்கப்பட்டது. அங்கு மரபுக் குறியம் (genetic code) பற்றி அவர் ஆற்றிய பணி உலகப் புகழ் பெற்றது.

எஸ்கிரிஷியா கோலி ([Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகள் (bacteria) மனித மற்றும் விலங்கினங்களின் குடற் பகுதியில் இருப்பது. கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே அதன் கட்டமைப்பைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். குரானாவும் அவருடைய குழுவினரும் இந்நுண்ணுயிரியின் மரபணு உருவாக்கத்தில் ஈடுபட்டனர். படிப்படியாக முயன்று இந்நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். பின்னர் 1976 ஆகஸ்டில் இச்செயற்கை மரபணுவை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரியில் செருக, அது இயற்கை மரபணு போன்றே பணியாற்றியது. இச்சாதனையை உலகமே வியந்து பாராட்டியது. தமது ஆய்வை வெற்றிகரமாக நிறைவேற்ற குரானாவுக்கும் அவருடைய குழுவிலிருந்த 24 உதவியாளர்களுக்கும் சுமார் ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டன.

சிறப்புகள்

தொகு

நோபல் பரிசுடன் கூட கொரானா மேலும் பல பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்.

  • 1969ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.
  • 1968 - ஹாவாயில் ஹோனலூலுவில் அமைந்துள்ள வாட்டுமுல் அமைப்பு 'சிறப்பு மிக்கச் சேவைக்கான விருதை' இவருக்கு அளித்துச் சிறப்பித்தது.
  • 1971-ல் பென்சில்வேனியாவில் பிலடெல்பியாவில் அமைந்துள்ள அமெரிக்கக் கழகத்தின் 'செயல்வெற்றிச் சாதனைக்கான விருதை' (American Academy of Achievement Award)அளித்தது.
  • 1972-ல் கொல்கொத்தாவில் உள்ள போஸ் நிறுவனம் 'ஜே.சி. போஸ்' பதக்கத்தை அளித்தது.
  • 1973-74 ஆண்டுக்கான அமெரிக்க வேதியல் பிரிவின் சிகாகோ பிரிவு வில்லர்ட் கிப்ஸ் பதக்கத்தை இவருக்கு வழங்கியது.
  • 'கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது', 'லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு' ,'ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான விருது' முதலிய விருதுகளை கொரானா பெற்றுள்ளார்.
  • அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம் முதலியவற்றில் இவர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
  • 1971-ல் ரஷ்யாவின் அறிவியல் கழகதில் அயல் நாட்டு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
  • 1974 -ல் இந்திய வேதியல் கழகத்தில் கௌரவ ஆய்வு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
  • ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆளுநர்கள் குழுவில் இவர் ஓர் உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.

கொரானா நிகழ்வு

தொகு

விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத்துறை, இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு ஆகியவை இணைந்து 2007-ல் கொரானா நிகழ்வு (Khorana Program) என்ற அமைப்பை உருவாக்கியது. இது கொரானாவின் பெயரில் தொடர்ந்து ஆய்வை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்திய மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல அறிவியல் அறிஞர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பங்கெடுத்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை, மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரின் ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு முதலியவற்றில் முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. 2009 -ல் கொரானாவை இந்நிகழ்வுக்கு வரவழைத்து அவரைப் பெருமைப்படுத்தினார்கள்.

மறைவு

தொகு

கொரானா 2011 நவம்பர் மாதம் 9 ஆம் நாள் மாசசூசெட்ஸ் கன்கார்ட் என்ற இடத்தில் தன்னுடைய 89 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

உசாத்துணை

தொகு

அறிவியல் ஒளி, டிசம்பர் 2011 இதழ்

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ""H. Gobind Khorana - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""H. Gobind Khorana - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்_கோவிந்த்_கொரானா&oldid=3925761" இலிருந்து மீள்விக்கப்பட்டது