24 மனை தெலுங்கு செட்டியார் ஈமச்சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார் ஈமச்சடங்குகள் என்பது 24 மனை தெலுங்கு செட்டியார் சாதியினரில், இறந்தோருக்காகச் செய்யப்படும் ஈமச்சடங்குகள் (இறப்புச் சடங்குகள், ஈமக் கிரியைகள்) ஆகும்.

இறந்தவுடன் செய்யும் சடங்குகள்

தொகு

இச்சாதியினரில் ஒருவர் இறந்தவுடன் அவருடைய துணியை அப்புறப்படுத்துவர். பிணத்துக்கு துணி மாற்றி, திருநீறு, குங்குமம் அல்லது திருமண் இட்டு, கைக்கட்டு, கால்க்கட்டு கட்டி, மூக்கில் பஞ்சு வைத்து, தெற்குப்பக்கம் தலையும், வடக்குப் பக்கம் கால் நீட்டியவாறு இருக்கும்படி படுக்க வைப்பார்கள். பின்பு மாலை அணிவித்து தேங்காய் உடைத்து, ஊதுபத்தி கொளுத்தி விளக்கேற்றி வணங்குவார்கள். இந்த வணக்கத்தில் இறந்தவரது குடும்பத்தார் மற்றும் அவருடைய குலத்தைச் சேர்ந்த பங்காளிகள் மட்டும் பங்கேற்று சாமி கும்பிடுவார்கள். இறந்தவருடைய ஆண் வாரிசுகள் உடன் இருப்பர். இறந்தவரின் உயிர் ஒளியாக - சோதியாக மாறியுள்ளது என்பதைக் குறியீடாய் இச்செயல் உணர்த்துகிறது.

உறவினர்களுக்குத் தகவல் அனுப்பிய பின்னர் பச்சைப் பந்தல் போடப்படுகிறது. நகரங்களில் இக்காலத்தில் சாமியானா எனும் துணிப் பந்தல் போடுகிறார்கள். இறந்தவர் வீட்டில் கருமாதி வரை அடுப்பு எரியாது. வெட்டியான், நாவிதன், வண்ணான் போன்ற இனத்தவர்கள் இறப்பு நிகழ்ந்த வீடுகளில் மரபு சார்ந்த சடங்குகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள். பறைமேளம் அடிக்கும் கலைஞர்கள், சங்கு சேகண்டி அடித்தவாறு பாட்டிசைக்கும் கலைஞர்கள், ஒப்பாரி பாடும் பெண்கள் எல்லாம் சேர்ந்து உறவினர்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். உறவினர்கள் பிணம் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேதத்துக்கு (சாவுக்கு) வந்த பங்காளிகளுக்குத் தேவையான உணவைத் (சலுப்பச் சோறு) தயாரிக்க ஒரு தொகையை நிர்ணயித்து, அதை மாமன் மச்சான்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனை சலுப்பச் சோறு (சலிப்பாற்றும் சோறு) என்கிறார்கள்.

நீர்மாலை

தொகு

பிணத்தைக் குளிப்பாட்ட அருகில் உள்ள குளம், கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளிலிருந்து நீர் எடுத்து வரும் சடங்கு நீர்மாலை எடுத்து வருதல் என்றழைக்கப்படுகிறது. இறந்தவரின் மாமன் மச்சான் உறவுகளும் பங்காளி உறவுகளும் குடம் மற்றும் செம்பு போன்ற பாத்திரங்களுடன் நீர் நிலைக்குச் செல்கின்றனர். நீர் நிரப்பிய செம்பு, குடம் போன்றவற்றின் கழுத்துப் பகுதியில் கதம்ப மாலை சுற்றப்படுகின்றது. நீரின் மேலாக கதம்பப் பூக்களும் போடப்பட்டு திருநீறு பூசப்படுகிறது . இந்தச் சடங்கு தெய்வ நிலையை அடைந்துவிட்ட பிணத்தைக் குளிப்பாட்டக் கொண்டு வரப்படும் நீர்மாலை நீரும், செம்பும் புனிதமானதாக மாறிவிட்டதை உணர்த்துவதற்காக நடத்தப்படுகிறது. வெள்ளைத் துணியை பந்தல் போல் அமைத்துப் பிடித்தபடி சங்கு சேகண்டி மற்றும் பறைமேளம் முழங்க வருவார்கள். பங்காளிகளும், மாமன்மார்களும் தனித் தனியே கோடி கொண்டு வருகிறார்கள்.

வீட்டின் முன்னர் வீதியில் பிணத்தை படுக்க வைத்து தலையில் எண்ணெயும் சிகைக்காயும் உறவினர்களின் (மகன், மகள், பேரன், பேத்தி, பங்காளிகள், மாமன் மச்சான்) இடது கைகளால் தொட்டு வைக்கப்படுகின்றது. சில குடும்பங்களில் இறந்தவர் மனைவி மீதும் எண்ணெய், சிகைக்காய் தொட்டு வைப்பதுண்டு. நீர்மாலை எடுத்து வந்த புனித நீரைக் கொண்டு பிணத்தைக் குளிப்பாட்டுகிறார்கள்.

சீதேவி மூதேவி வாங்கும் சடங்கு

தொகு

பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னர் வீட்டு வாசலில் பச்சைப் பந்தலின் கீழ் வைத்து சீதேவி மூதேவி வாங்கும் சடங்கு நடத்தப்படுகின்றது. இறந்தவரின் மகனும் மருமகளும் பச்சைப் பந்தலை மூன்று முறை சுற்றி வந்து பிணத்தின் முன்பாக வணங்குகின்றனர். பின்னர் பசுஞ்சாணியை நெல்லில் தோய்த்து உருண்டை பிடித்து பிணத்தின் கையில் வைத்து மூதேவி போயி சீதேவி வா என மூன்று முறை கூறியபடி மருமகளின் முந்தானையில் போடப்படுகின்றது.

சீதேவி மூதேவி வாங்கும் சடங்கு இறந்தவரின் வளமை முழுவதும் மருமக்களுக்கு வந்து சேர்வதற்காகவே இந்தச் சடங்கைச் செய்கிறார்கள; வளமை முழுவதும் வரும் என்று நம்புகின்றனர். பின்னர் சாணி உருண்டையை வீட்டினுள் பிணம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரில் அப்பி வைக்கின்றனர். கருமாதிச் சடங்கு நடைபெறும் நாள் வரைத் தினந்தோறும் நீர்த் தெளித்து அதனைப் பாதுகாக்கின்றனர். சாணியில் வளரும் நெல்லின் திறனைப் பொறுத்து குடும்பம் சிறக்கும் அல்லது தீங்கு நேரும் என நம்புகின்றனர்.

கோடி போடுதல்

தொகு

இறந்தவரின் மாமன் மச்சான் உறவுகளும் பங்காளி உறவுகளும் கோடித்துணி (புது வேட்டி, சேலை போன்றவற்றைச் கோடி என்று சொல்வர்) கொண்டு வருகின்றனர்.[1] இறந்தவர் பெண் என்றால் இரண்டு வகை கோடிகள் உண்டு; இவற்றைப் பிறந்த இடத்துக் கோடி (தாய் வீடு) மற்றும் புகுந்த இடத்துக் கோடி (வாழ்க்கைப்பட்ட வீடு) என்கிறார்கள். இறந்தவர் ஆண் என்றால் அவர் மனைவிக்கும் கோடி போடப்படுகிறது.

பேரன்கள் மற்றும் பேத்திகள் நெய்ப்பந்தம் பிடிக்கிறார்கள். பிணத்தின் மீது பின்னைப்பூ போடுகிறார்கள். இறந்தவர் சொர்க்கத்துக்குப் போக நெய்ப்பந்தம் வழிகாட்டும் என்பது நம்பிக்கை. வாய்க்கரிசியை (மஞ்சள் தொய்த்த பச்சரிசியை) பிணத்தின் வாயில் மூன்று முறைப் போடுகின்றனர்.

தேர்க் கட்டுதல்

தொகு

இறந்தவரை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாடை வெட்டியானால் (பச்சை ஓலை பின்னி, பச்சை மூங்கில்களால்) தயாரிக்கப்படுகிறது. இது மேலும் பூக்களால் ஒரு தேர் போல அலங்கரிக்கப்படுகிறது. இது போல தேர் அமைக்கும் செலவை இறந்தவருடைய பெண் வாரிசுகள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனைத் தேர்க் கட்டுதல் என்கிறார்கள்.

பிணம் எடுக்க உகந்த நேரம்

தொகு

பிணம் இடுகாடு செல்லும் நேரம் குளிகையாக இருக்கக்கூடாது. அன்று சனிக்கிழமையாயிருந்தால் ஒற்றைப் பாடை தனியே செல்லக்கூடாது (சனிப் பிணம் தனியே போகாது) என்பதால் கோழிக்குஞ்சு ஒன்றினை பாடையோடு இணைத்துக் கட்டிவிடுவர்.

பிணம் இடுகாடு போதல்

தொகு

பிணத்தை பங்காளிகள் மற்றும் உறவினர்கள் சுமக்கின்றனர். இந்த சமயம் கோவிந்தா, கோவிந்தா என்று குரல் எழுப்புகின்றனர். கோவிந்தனாகிய திருமால் மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் என்பது நம்பிக்கை . பிணம் இடுகாடு போகும்போது வீட்டைப் பார்த்தபடியே செல்ல வேண்டும் என்பது மரபு. வீட்டின் அருகே உள்ள முச்சந்தியில் மூன்று முறை சுற்றிக் காட்டைப் பார்த்தபடி செல்ல வேண்டும். இறந்தவரின் வீட்டுப் பெண்கள் முச்சந்தி வரை வந்து ஒப்பாரியிட்டு அழுவர். பின்பு இவர்கள் திரும்பிப் பாராது வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

இடுகாட்டில் சடங்குகள்

தொகு

24 மனை தெலுங்குச் செட்டியார் இனத்தில், பெரும்பாலும் பிணத்தைப் புதைப்பது மரபு. இறந்தவரின் வாரிசுகளில் தலைமகன் தாய்க்கும், கடைமகன் தகப்பனுக்கும் கொள்ளியிட வேண்டும் என்பது மரபு. இதன்படி கொள்ளியிடுபவர் தீச்சட்டி ஏந்தி பிணத்துக்கு முன் இடுகாடு செல்வார். இடுகாட்டில் பாடை சுடுகாடு நோக்கித் திருப்பி இறக்கி வைக்கப்படுகின்றது.

இடுகாட்டில் இறந்தவரின் ஆண் வாரிசுகள் இடது தோளில் நீர் நிரம்பிய மண் கலயத்தை வைத்து மூன்று முறை பாடையைச் சுற்றச் செய்வர். ஒவ்வொரு முறை சுற்றும் பொழுதும் நாவிதன் அரிவாள் நுனியால் மண்குடத்தைத் துளையிடுகின்றார். இறுதியாக மண் குடத்தை வல பக்கம் கீழே போட்டு உடைகிறார். இது போல மண்குடம் உடைத்தல் என்ற சடங்கு இந்த உலகத்தில் வாரிசுகளுக்கும் இறந்தவருக்கும் இடையேயான உறவு குடம் உடைத்தலோடு முடிந்துவிடுவதாக நம்புகிறார்கள். மண் குடம் என்பது இருப்பவருக்கும் இறந்தவருக்கும் இடையே நிலவிய ஒரு உறவின் அடையாளம்.

குழியில் பிணத்தை இறக்கி வானத்தைப் பார்த்தவாறு அமைத்து தீச்சட்டி ஏந்தியவர் இடது கையால் மண் தள்ளுகிறார். பிறகு குழி மண்ணால் நிரப்பி மூடப்படுகிறது.

பிணம் எடுத்தவுடன் வீட்டைச் சுத்தம் செய்து குளித்து முடித்த பின்பு பெண்கள் விளக்கேற்றி வைக்கிறார்கள். இடுகாடு சென்று திரும்பும் ஆண்கள் மீண்டும் இறந்தவரின் வீட்டுக்கு வந்து கைகால் கழுவி விளக்கை வணங்கிய பின்பே கலைந்து செல்ல வேண்டும்.

காடாற்றுதல்

தொகு

மறுநாள் காலையில் குழி மண் தள்ளியவர், பங்காளிகள் மற்ற உறவினர் அனைவரும் காடாற்றும் சடங்கினை முடிக்க இடுகாடு செல்கிறார்கள். இறந்தவரைப் புதைத்த குழிமேட்டை நீர் தெளித்து மொழுகுகின்றனர். இதை குழி மொழுகுதல் என்கிறார்கள். பின்னர் குழிமேட்டின் தலைப் பகுதியில், சிறிது பால் ஊற்றிவிட்டு திருநீறு குங்குமம் தூவி / பூசி போட்டு வைத்து ஊதுபத்தி ஏற்றி வணங்குகிறார்கள்.

கருமாதி சடங்குகள்

தொகு

கருமாதிச்சடங்குகள் 16 ஆம் நாள் நிகழும். உறவினர்களின் வசதி கருதி மூன்றாம் நாளிலோ அல்லது ஐந்தாம் நாளிலோ கூட இது நடைபெறுவது தற்போது நடைமுறையாகி வருகிறது. மண் தள்ளியவர் மொட்டை போட்டுகொள்கிறார். மற்ற உடன் பங்காளிகள் சவரம் செய்து கொள்கிறார்கள்.

ஐந்தாம் நாள் ஏழாம் நாள் கருமாதிச் சோறு வீட்டு வாசலில் மண் அடுப்பில், மண்பானையில் சமைக்கப்படுகிறது. கருமாதியன்று ஆண், பெண் இரு பாலரும் இடுகாடு செல்கிறார்கள். ஒரு ஆவாரம் செடியின் அடியில் ஒன்பது கல்லை அமைத்து, திருநீறு மற்றும் பொட்டு இட்டு சூடம் ஏற்றி வணங்குவர். இறந்தவருக்குப் பிடித்தமான பலகாரம், பீடி, சுருட்டு போன்றவை படைக்கப்படுகின்றன. படைத்த சோறு சிறு இலைகளில் இடப்பட்டு ஒவ்வொருவராலும் காகத்திற்கு வைக்கப்படுகிறது. யார் வைத்த சோற்றை காகம் எடுக்கிறதோ அவர் மேல் இறந்தவருக்கு அன்பு அதிகம் என்று கொள்ளப்படுகிறது.

அன்று மதியம் அல்லது இரவு நேரம் ஈமச்சடங்கு செய்தவருக்கு மாமன் மச்சான்கள் புதுத்துணி கொடுத்து உரிமைப்பட்டவர் உருமால் (தலைப்பாகை) கட்டுகிறார். பங்காளிகள் இறந்தவரை நினைத்து சாமி கும்பிடுகிறார்கள். அன்று மாமன் மச்சான்கள் பங்காளிகளுக்கு அசைவ விருந்தளிக்கிறார்கள். நள்ளிரவில் கறியும் சோறும் ஒவ்வொருவராலும் கூரை மேல் வீசப்பட்டு நீர் இறைக்கப்படுகிறது.

30 ஆம் நாள் படையல்

தொகு

இறந்த 30 ஆம் நாள் இறந்தவரை வீட்டிற்கு அழைப்பது போன்ற ஒரு நிகழ்வு நடத்தப் பெறுகிறது. இந்நிகழ்வில் இறந்தவருக்கு விருப்பமான பலகாரம், சாப்பாடு, சுருட்டு போன்றவை படைக்கப்பட்டு அவரை வணங்கும் முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "இறப்புச் சடங்கு் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.

மேலும் பார்க்க

தொகு