தொல்காப்பியத்தில் தமிழிசை

தொல்காப்பியத்தில் தமிழிசை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இது தொல்காப்பியர் என்பவரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற தமிழ் இலக்கணம் கூறும் நூல் இது. இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்கு கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப் பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும். இருவகை இசை, இசைக் கருவிகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒன்று தொழிலிசை, மற்றையது இன்ப இசை. தொழிலிசைக் கருவி பறை என்றும், இன்ப இசைக் கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தொழிலிசை, இன்ப இசை பற்றியும் இது குறிப்பிடுகிறது.[1]

இசை பற்றிய குறிப்புகள் தொகு

இசைப்பு என்பது யாழ் போன்ற இசைக்கருவிகளை இசைத்தல் ஆகும் என்பது இந்நூற்பாவின் பொருள்.

இசையொடு பொருந்திய யாழ் நூலில் இசையிலே எழுத்து ஒலிகள் அளவுகடந்து ஒலித்தலும், ஒற்றுக்கள் நீண்டு ஒலித்தலும் உண்டு என்று அறிஞர் கூறுவர் என்பது இதன் பொருள்.

இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.

இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.

யாழ் தொகு

தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

பறை தொகு

தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

ஐந்துதிணைக்குரிய பண்களும், அதற்குரிய காலமும் தொகு

நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.[6]

நிலம் இசைத்த பண் இசைத்த யாழ் முழக்கிய பறை தொழுத தெய்வம் பண்ணிற்குரிய சிறுபொழுது
குறிஞ்சி குறிஞ்சிப்பண்

படுமாலைப்பாலை

குறிஞ்சி யாழ் வெறியாட்டுப் பறை,
தொண்டகப் பறை
சேயோன் என்னும்முருகன் யாமம் அல்லது நள்ளிரவு
முல்லை முல்லைப்பண்

செம்பாலை

முல்லை யாழ் ஏறுகோட்பறை மாயோன் என்றதிருமால் மாலை
மருதம் மருதப்பண்

கோடிப்பாலை

மருத யாழ் நெல்லரி, மணமுழவு வேந்தன் என்றஇந்திரன் விடியல்
நெய்தல் நெய்தல் பண்

விளரிப்பாலை

நெய்தல் யாழ் மீன் கோட் பறை வருணன் ஏற்பாடு
பாலை பாலைப்பண்

அரும்பாலை

பாலை யாழ் துடி கொற்றவை நண்பகல்

இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார். இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது இசைப்பா என பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. பி. டி. செல்லத்துரை. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம். பக்கம்: 194.
  2. தொல்காப்பியம். நூற்பா எண் - 1268
  3. தொல்காப்பியம். நூற்பா எண் -793
  4. தொல்காப்பியம். நூற்பா எண் - 33
  5. தொல். அகத்திணையியல் - 18
  6. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்