கொச்சி திருமலைக் கோயில்

கேரளத்தின் கொச்சியில் உள்ள கோயில்

கோஸ்ரிபுரம் அல்லது கொச்சி திருமலை தேவஸ்வம் (Cochin Thirumala Devaswom) என்று அழைக்கபடுவது இந்தியாவின் கேரளத்தின் கவுட சாரஸ்வத் பிராமணர்களின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான சமூக-சமய நிறுவனமாகும். இந்தக் கோயில் கொச்சியின் மட்டாஞ்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள செர்லையில் அமைந்துள்ளது. இது கேரளத்தின் கவுட சாரஸ்வத் பிராமணர்களின் ஆரம்பகால குடியேற்றங்களில் ஒன்றாகும். 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தக் கோயில் நிறுவப்பட்டது. கேரளத்தில் உள்ள கவுட சாரஸ்வத் பிராமணர்களின் வரலாறு இந்த கோயிலுடனும் அதன் வெங்கடேசுவர்ர் சிலையுடனும் பின்னிப் பிணைந்துள்ளது.

கொச்சி திருமலைக் கோயில்
கோயிலின் இராச கோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:எர்ணாகுளம்
அமைவு:மட்டாஞ்சேரி
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலையிலிருந்து வேறுப்படது (கேரளக் கட்டிடக்கலை)
இணையதளம்:http://gosripuram.org/

கோயில் அமைப்பு தொகு

வெங்கடேசுவரரின் இருபுறமும், அவரது மனைவிகளான, சிறீதேவி, பூதேவி ஆகியோர் இருக்க வெங்கடேசர் சிம்மாசனத்தின் உச்சியில் உள்ளார். நடுப்படியில் துணைவிகளுடனான உற்சவர் மூர்த்தியும், கீழ்ப்படியில் உற்சவர் லட்சுமியும், அதற்கும் கீழ்ப் படியில் சாளக்கிராமமும் உள்ளன்ன.

கோவில் வளாகத்தில் நான்கு சிற்றாலயங்கள் அல்லது சன்னதிகள் உள்ளன. அவை மகாலட்சுமி, அனுமன், கருடன், விக்னேசுவரருக்கு அமைக்கபட்டுள்ளன. சுக்ரதீந்திர தீர்த்த சுவாமிகளின் (சமாதி 1949, காசி மடத்தின் 19வது மடாதிபதி) பிருந்தாவனம் இங்கு அமைந்துள்ளது. விக்னேசுவரர் கோயிலுக்கு அடுத்தபடியாக முதன்மைக் கோயிலின் தென்மேற்கு மூலையில் நாகயட்சி பீடம் உள்ளது.

கோவில் முற்றத்திற்கு வெளியே, விஜயநகர மன்னர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் மற்றும் கும்பகோண மடத்தின் சுவாமி விஜயேந்திர தீர்த்தரின் சிலைகளும், கோவிலுக்கு வெளியே கோவில் குளமும் அமைந்துள்ளன. கோவிலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் பெரிய வெண்கல மணி உள்ளது. இந்த மணி சுமார் நான்கு அடி விட்டமும், ஆறு அடி உயரமும் கொண்டது. கடந்த நூற்றாண்டுகளில், கோயிலில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் கூட மணியின் ஓசை கேட்பதாக இருந்தது.

இந்த உபகோவில்கள் தவிர, கொச்சி திருமலைக் கோயிலின் கீழ் வேறு சில கோவில்களும் செயல்படுகின்றன. அவை -

  1. மஞ்ச பகவதி கோயில், இது சிந்தூர பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது மகிசாசுர மர்தினி தேவிக்கு அமைக்கபட்டது கோயில். இக்கோயிலின் முன் பக்தர்கள் உப்பை சமர்ப்பிப்பதால், இக்கோயில் 'உப்பு' பகவதி கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இங்கு உப்பும், மிளகும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கடுமையான நோய்களை விரைவில் குணமாகும் என்று நம்பப்படுகிறது. [1]
  2. கொச்சி திருமலைக் கோயிலின் வடகிழக்கு மூலையில் சிவபெருமானுக்கு அமைக்கபட்ட உத்யனேசுவரர் கோயில் உள்ளது. [2]
  3. கொச்சி திருமலைக் கோயிலின் வடகிழக்கு மூலையில் நவகிரக கோயில் அமைந்துள்ளது. [3]
  4. கொச்சி திருமலைக் கோயிலின் வடமேற்கு மூலையில் குலதேவதை மகாலட்சுமி கோயில் அமைந்துள்ளது. [4]
  5. சிறீ வெங்கடாசலபதி கோவில், கர்ணகோடம், எர்ணாகுளம் மாவட்டத்தின் மையப்பகுதியில், கொச்சியின் பன்னாட்டு விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. [5]

வரலாறு தொகு

இங்குள்ள மூலவர் வெங்கடாசலபதி ஆவார். 1568 ஆம் ஆண்டில், விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி மற்றும் போர்த்துகீசியர்களால் கிறித்தவ சமயத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுதல் போன்றவற்றால், கவுட சரஸ்வத பிராமணர்கள் கோவாவிலிருந்து கொச்சிக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் குடிபெயர்ந்த போது, கும்பகோண மடத்தின் சுவாமி விஜயேந்திர தீர்த்தர் வெங்கடாசலபதியின் சிலையை கொச்சிக்கு கொண்டு வந்தார். கோவிலை சுற்றி வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள் கவுட சரஸ்வத பிராமணர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

1599 ஆம் ஆண்டில், இக்கோயில் பல முறை கொள்ளையடிக்கப்பட்டது. போர்த்துகீசியர்கள் 1662 இல் கோயிலை அழித்தனர். ஆனால் அது டச்சு ஆட்சியின் போது 1663 இல் கோயில் புனரமைக்கப்பட்டது. 1719 ஆம் ஆண்டில், சிலை மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. நெதர்லாந்து ஆளுநரின் இல்லத்தில் சிறிது காலம் வைக்கப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

1791-இல் மீண்டும் கோயில் கொள்ளையடிக்கப்பட்டதும், பல ஆண்டுகள் ஆலப்புழைவில் சிலை வைக்கப்பட்டிருந்தது. 1853-இல் மீண்டும் கோயிலுக்கு சிலை கொண்டுவரப்பட்டது.

கவுடா சரஸ்வத பிராமணர்கள் (உள்ளூரில் கொங்கனிகள் என்று அழைக்கப்படுகிறனர்) அவர்களின் முன்னோர்கள் கி.பி 1560 இல் கோவாவிலிருந்து கொச்சிக்கு வந்து குடியேறினர். அங்கு போர்த்துகீசியர்களால் கட்டய மதமாற்றம் செய்யப்படுவதற்கு அஞ்சி இடம்பெயர்ந்து வந்தனர்.

சிலையின் கதை தொகு

 
வெங்கடாசலபதி

கொச்சி கோவிலில் நிறுவப்பட்டுள்ள வெங்கடேசப் பெருமானின் சிலையானது, செவிவழிக் கதைகளின் படி, முதலில் விஜயநகர ஆட்சியாளரான சாளுவ நரசிம்ம தேவ ராயருக்கு சொந்தமானதாக இருந்தது. அவர் கி.பி. 1472 இல் அரியணை ஏறினார். திருமலையில் உள்ள வெங்கடேசப் பெருமானின் பக்தரான இவர், அடிக்கடி திருப்பதிக்கு வந்து வழிபட்டார். ஆனால் தினமும் அவரை தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருந்தினார். ஒரு நாள் இரவு அரசன் கனவில் தரிசனத்தில் தோன்றி, தன்னைப் பார்க்க சிரமப்பட வேண்டியதில்லை என்றும், ஆண்டவரே அவரது தலைநகருக்கு வருவதாக கூறினார். மேலும் அரசரிடம் ஒரு சிற்பத்தை வார்ப்பதற்கான அழைப்பு வரும் என்றும், அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அரசர் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும் திருவுருவம் திருமலை இறைவனின் உருவமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அரசர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

கனவை நனவாக்கும் விதமாக, ஒரு சிற்பி அரசர் முன் தோன்றி, சிலையைச் செய்வதற்குத் தேவையான பொருட்களைப் பெற்று, ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் சிற்பி வெளியே வராததால், அரசர் அறைக் கதவை உடைத்து திறந்தார். உள்ளே ஏழுமலையானின் சிற்பத் திருவுருவைக் கண்டு வியந்தார். வந்தது வேறு யாருமல்ல விஸ்வகர்மா என்று அரசன் யூகித்தார். இதனால் அந்தச் சிலை "ஸ்வயம்பூ" அதாவது சுயமாக உருவானது என்று அறியப்பட்டது.

விரைவில், அரசர் சிலையை நிறுவ ஒரு கோயிலைக் கட்டினார். சிலை பிரதிட்டைக்கு முன், இறைவன் மீண்டும் மன்னரின் கனவில் மீண்டும் தோன்றி, துந்துபி (பறை) அடித்து சமிக்ஞை கொடுக்கப்படும்போது பிரதிட்டை நடைபெற வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினார். விதிமுறையின்படி, சமிக்ஞை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், சில காகங்கள் மரக்கிளைகளுடன் துந்துபியின் மீது பறந்தன, அந்த மரக்கிளைகள் காகங்களின் படியில் இருந்து நழுவி தற்செயலாக துந்துபியின் மீது விழுந்தது. இது இறைவன் கொடுத்த சமிக்ஞை என்று தவறாகப் புரிந்துகொண்டது. இதன் பிறகு சிலை நிறுவப்பட்டது. ஆனால் அதன் பின்னர் சரியான நேரத்தில் பறை ஒலித்ததைக் கேட்ட பின்பே, பிரதிட்டை செய்த நேரம் அசுபமான நேரம் என்று மன்னர் உணர்ந்தார். ஏமாற்றமடைந்த அரசர் படுக்கையில் ஓய்வெடுத்தார், ஆனால் அவர் கனவில் வந்த இறைவன் அவரை சமாதானப்படுத்தும் விதமாக, அவர் இறக்கும் வரை எப்போதும் அவருடன் இருப்பதாக கூறினார். அவர் சிலையை அசுபமான நேரத்தின் நிறுவியதன் காரணமாக, நகரத்தை விட்டு வெளியேறி கோஸ்ரிபுரம் செல்வேண்டும் என்றும் இறைவன் கூறினார் (பின்னர் இந்த பெயர் கொச்சி ஆனது).

கொச்சியில் முதல் பிரதிட்டை தொகு

கும்பகோணம் மடத்தைச் சேர்ந்த சுவாமி விஜயேந்திர தீர்த்தர், தலங்களுக்கு புனித யாத்திரை செல்லும்போது, வெங்கடேசப் பெருமான் சிலை கிடக்கும் பாழடைந்த கிணற்றின் அருகே நின்றார். சுவாமிகளின் "சந்தியா வந்தனம்" முடிவடையும் நேரத்தில், அங்கே ஒரு பாம்பு வந்தது. அது தன்னை அவர் பின்தொடரவேண்டும் என்ற குறிப்பை உணர்த்தியது. சுவாமிகளும் பாம்பைப் பின்தொடர்ந்து சென்றார். சிறிது தூரம் ஊர்ந்து சென்ற பாம்பு பாழ்கிணற்றை அடைந்து அங்கிருந்து இறங்கி மறைந்தது. சுவாமிகள் பாழுங்கிணற்றின் அடிப்பகுதியை எட்டிப் பார்த்தார். அங்கே வெங்கடேசுவரர் சிலை கிடப்பதைக் கண்டார். சுவாமிகள் அதை தாம் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு எடுத்துச் சென்று சிலைக்கு சில பூசைகள் செய்தார். பின்னர் சுவாமிகள் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ஒரு சிறிய கிராமத்தை அடைந்து அங்கே தங்கினார். சுவாமிகளின் கனவில் தோன்றிய இறைவன் கோஸ்ரிபுராவுக்குச் (கொச்சி) செல்லும்படி கூறினார். அங்கு தனது சிலையை நிரந்தரமாக நிறுவ வேண்டும் என்று இறைவன் விரும்பம் தெரிவித்தார்.

தனது கனவில் வந்தபடி சுவாமிகள் கோஸ்ரிபுரத்துக்குச் சென்றார். அங்கு அவரை கொச்சி மகாஜனங்களின் தலைவரான மாலா பாய் வரவேற்றார். மகாஜனங்களுக்காக இங்குள்ள கோஸ்ரீபுரத்தில் உள்ள குலதெய்வத்தை வழிபடுவதற்காக வெங்கடேசுவரரின் சிலையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாலா பாய் சுவாமிகளிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

சுவாமிகள் தேவிக்கு தங்கக் காசுகளில் அபிசேகம் செய்ய விரும்பினார். பெரும் பணக்காரராக இருந்த மாலா பாய், சுவாமிகளின் விருப்பமான தங்கக் காசு அபிசேகத்தை நிறைவேற்றுவதாகக் கூறினார். தங்கக் காசுகளினால் அபிசேகம் செய்தனர் ஆனால் சிலையின் கிரீடத்தின் மேல் பகுதி இன்னும் தங்கக் காசுகளால் நிரப்பப்படாமல் இருந்தது. சோதிடர்களை ஆலோசித்ததில், கொச்சியில் வசிக்கும் 360 குடும்பங்களின் பங்களிப்பின் மூலம் அபிசேகத்திற்கான தங்கக் காசுகள் பெறப்பட வேண்டும் என்று இறைவன் மூலம் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. மாலா பாய், கொச்சியில் வசிக்கும் பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று, அபிசேகத்துக்கு பங்களித்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொண்டார். பலரும் நன்கொடைகளை அளித்த பிறகும் வெங்கடேசரை முழுமையாக தங்கக் காசுகளால் மூழ்கடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், கோவிலுக்குச் செல்வதற்கு உடுத்த நல்ல உடைகள் கூட இல்லாத, திருவிழாவுக்கு எந்த பங்களிப்பையும் வழங்க முடியாத வயதான பிராமணராவார். மாலா பாய் அவரது வீட்டிற்குச் சென்று அவரின் பங்களிப்பைக் கோரினார், ஏழையாக இருந்தாலும் அவர் மிக்க் குறைந்த மதிப்பிலான "பணம்" என்ற சிறிய நாணயத்தை மாலா பாயிடம் கொடுத்தார். விக்கிரகத்தின் உச்சியில் அந்தப் பணத்தை சுவாமிகள் வைத்தார். சிலை உடனே தங்க நாணயங்களால் மூடப்பட்டது. சோதிடர் விசாரித்ததில், தனது ஒரே ஒரு சம்பாத்தியத்தையும் இறைவனுக்குக் கொடுத்த ஏழை பிராமணனின் பக்தியைக் கண்டு இறைவன் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறினார். ஏழை முதியவர் "தரித்திர நாராயண்ன்" என்று அழைக்கப்பட்டார். பின்னர் சுவாமிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டது. கும்பகோணம் மடத்தைச் சேர்ந்த சுவாமி சுதீந்திர தீர்த்தர் (விஜயேந்திர தீர்த்தரின் வாரிசு) கொச்சியில் வெங்கடேசப் பெருமானின் முதல் பிரதிட்டையை கி.பி. 1599 இல் செய்தார். முதல் பிரதிட்டையின் நினைவாக, ஆறாட்டு (உற்சவம்) என்ற 8 நாள் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவிலின் அழிவும், அதன் இரண்டாவது பிரதிட்டையும் தொகு

1662ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி போர்த்துகீசியர்களால் கோயில் அழிக்கப்பட்டது. கொங்கனியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன, சந்தைகள் சூறையாடப்பட்டன. இதனால் கொங்கனியர் சமூகம் வெங்கடேசுவரரின் சிலையுடன் உதயபேரூருக்கு அருகில் உள்ள திரிபுனித்துறைக்கு தப்பிச் சென்றது. கிட்டத்தட்ட 10 மாதங்கள் அங்கேயே இருந்தார்கள். அவர்கள் உதயபேரூரில் தஞ்சம் புகுந்தபோது, திருவிதாங்கூர் இராச்சியத்தில் எட்டு இடங்களிலும், கொச்சின் இராச்சியத்தில் எட்டு என மொத்தம் பதினாறு இடங்களில் திருமலை தேவஸ்தானங்களைக் கட்டி, ஒவ்வொரு இடத்தையும் "கிராமம்" என்று அழைப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இவ்வாறு பதினாறு கிராமம் அல்லது திருமலை தேவஸ்வங்கள் உள்ளன. கொச்சிக்கு வந்த டச்சுக்காரர்கள் 6 ஜனவரி 1663 இல் போர்ச்சுகீசியர்களை போரில் தோற்கடித்து, அவர்களின் ஆட்சியை கோச்சிக் கோட்டை வளாகத்தில் நிறுவினர். அதன் பிறகு கொங்கனி சமூகம் மீண்டும் கொச்சிக்கு சிலையுடன் வந்து, டச்சுக்காரர்களின் உதவியுடன் கொச்சியில் தங்கள் குடியேற்றத்தை மீண்டும் நிறுவியது. இறைவனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டது. இந்த இரண்டாவது பிரதிட்டையை சிறீ ஸ்வாமி தேவேந்திர தீர்த்தர் செய்தார். கிபி 1719 இல் செய்தார்.

அரசருடனான சண்டையும் இதன் மூன்றாவது பிரதிட்டையும் தொகு

1791 ஆம் ஆண்டு அரசர் ஒன்பதாம் ராம வர்மாவால் ( சக்தன் தம்புரான் ) கொங்கனியர்கள் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாயினர். கொச்சியின் மன்னர் 1791 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தேவரேசா கினி உட்பட ஏராளமான கொங்கனி வணிகர்களை படுகொலை செய்தார். திருமலை தேவஸ்வம் கோயிலுக்குச் சொந்தமான பொக்கிசங்களில் எதையும் கொடுக்க மறுத்ததால், கோயிலின் பாதுகாவலர்கள் மூவரை தூக்கிலிட அரசர் உத்தரவிட்டார். பின்னர் சக்தன் தம்புரான் கொங்கனி வணிகர்களின் சொத்துக்களை வண்டிகளில் அபகரித்தார். பின்னர் கடைகளைக் கொள்ளையடித்து, கோயிலை சூறையாடி கொள்ளையடித்தார். கோயிலில் இருந்து மட்டும் 1.6 லட்சத்துக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது.

துன்புறுத்தப்பட்ட கொங்கனியர்கள் பின்னர் வெங்கடேசுவரரின் மூர்த்தியுடன் திருவிதாங்கூர் (திருவிதாங்கூர்) இராச்சியத்தில் உள்ள துறவூர் மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளுக்கு தெற்கு நோக்கி தப்பி ஓடினர். ஆலப்புழாவில், தர்மராஜா பாதுகாப்பளிக்கப்பதாக உறுதியளித்ததலால் அவர்கள், ஆலப்புழா கால்வாயின் கரையில் ஒரு கோயிலைக் கட்டினார்கள். சக்தன் தம்புரானும், பின்னர் அவரது வாரிசுகளும், தெய்வத்தை மீண்டும் கொச்சிக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் மூர்த்தியும், கொங்கனி வணிகர்களும் இருப்பதன் காரணமாக தங்கள் இராச்சியம் செழித்தோங்கியதாக நம்பிய திருவிதாங்கூர் மன்னரால் அவர்கள் விரட்டப்பட்டனர். 1853 இல், நான்காம் கேரள வர்மா கொச்சியை ஆட்சி செய்தபோது, கொங்கனி சமூகம் இறுதியாக அங்கு திரும்பி வர ஒப்புக்கொண்டது. அதன்படி 7 பிப்ரவரி 1853 அன்று மூர்த்தியை மீண்டும் கொண்டு வந்தது.

தற்போது புனரமைக்கப்பட்ட கோவிலில் உள்ள வெங்கடேசுவரரின் விக்ரகத்தின் மூன்றாவது பிரதிட்டை 1881 ஆம் ஆண்டு [6] சுவாமி புவனேந்திர தீர்த்தர் மற்றும் அவரது வாரிசாக நியமிக்கபட்ட சுவாமி வரதேந்திர தீர்த்தர் ஆகியோரால் செய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Manja Bhagavathi Temple". பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  2. "Udyaneswar temple". பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  3. "Navagraha Temple". பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  4. "Kuladevatha Makalakshmi Temple". பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  5. "Sri Venkatachalapathi Temple". பார்க்கப்பட்ட நாள் 4 September 2022.
  6. "History – Cochin Thirumala Devaswom".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_திருமலைக்_கோயில்&oldid=3872601" இலிருந்து மீள்விக்கப்பட்டது