முடக்குக் காய்ச்சல்
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
முடக்குக் காய்ச்சல், முடக்கம்மை, டெங்குக் காய்ச்சல் (Dengue fever), அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.[1][2]
டெங்குக் காய்ச்சல் | |
---|---|
டெங்குக் காய்ச்சலில் ஏற்படும் தோல் சினைப்பு (சிவப்புப் புள்ளிகளைக் காண்க) | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectious diseases |
ஐ.சி.டி.-10 | A90. |
ஐ.சி.டி.-9 | 061 |
நோய்களின் தரவுத்தளம் | 3564 |
மெரிசின்பிளசு | 001374 |
ஈமெடிசின் | med/528 |
பேசியண்ட் ஐ.இ | முடக்குக் காய்ச்சல் |
ம.பா.த | C02.782.417.214 |
வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.
நோய்க் காரணி
தீநுண்மவியல்
முடக்கம்மை (டெங்குக்) காய்ச்சலின் நோய்க்காரணி ஒரு தீநுண்மம் (வைரசு) ஆகும். இது ஒரு ஆர்.என்.ஏ தீநுண்மம் ஆகும். இது மஞ்சட் தீநுண்மக் குடும்பம், மஞ்சள் தீநுண்மப் பேரினத்தைச் (இலங்கை வழக்கு: இனம்) சார்ந்தது. மஞ்சள் காய்ச்சல் தீநுண்மம், மேற்கு நைல் தீநுண்மம், யப்பானிய மூளையழற்சித் தீநுண்மம் போன்றனவும் மஞ்சள் தீநுண்மப் பேரினத்தில் அடங்குகின்றன. இவை நோய்க்காவிகளால் காவப்பட்டு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரப்பப்படுகின்றது. பெரும்பாலும் கணுக்காலிகளால் (கொசுக்கள் அல்லது தெள்ளுகள்) காவப்படுகின்றன, எனவே கணுக்காலிகள் காவும் தீநுண்மங்கள் எனும் ஆங்கிலப் பெயரைச் சுருக்கியதன் மூலம் உருவான (arbo: arthropod-borne viruses) ஆர்போ எனும் பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றன.[3]
டெங்குத் தீநுண்மத்தின் மரபணுத்தொகை 11,000 நியூக்கிளியோட்டைடு அடிக்கூறுகளைக் கொண்டுள்ளது, இவை மூன்று வெவ்வேறு புரத மூலக்கூறுக்களை (C, prM, E) உருவாக்குவதில் மரபணுக்குறியாகப் பயன்படுகின்றன, இப்புரத மூலக்கூறுகளே தீநுண்மத் துகளை உருவாக்குகின்றன. ஏனைய ஏழு வகையான புரத மூலக்கூறுகள் (NS1, NS2a, NS2b, NS3, NS4a, NS4b, NS5) தொற்றுநோய்க்கு உட்பட்டவரின் உயிரணுக்களில் தீநுண்மத்தின் பெருக்கத்துக்குத் தேவைப்படுகின்றது.[4][5]
டெங்குத் தீநுண்மத்தின் இனத்தில் நான்குவகையான குருதிப்பாய (serotype) வகைகள் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) உள்ளன[6]. இந்த நான்கு வகையும் தனித்தனியே முழு அளவிலான நோயை ஏற்படுத்த வல்லன.[4] ஒரு குறிப்பிட்ட குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் முழுவதும் அக்குருதிப்பாய வகையிலிருந்து நோயெதிர்ப்பு கிடைக்கின்றது, ஏனைய மூன்று வகையில் இருந்தும் நோயெதிர்ப்பு உருவான போதிலும் அவை குறுகிய காலத்துக்கே நீடிக்கின்றன. டெங்குத் தீநுண்மத்திலிருந்து முற்றுமுழுதாக நோயெதிர்ப்பு உருவாக வேண்டுமெனின் குறித்த நபர் ஒருவருக்கு இந்நான்கு குருதிப்பாய வகைத் தீநுண்மங்களும் நோயை உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் இரண்டாம் முறை தொற்று ஏற்படுவது நோயாளிக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். DENV-1 குருதிப்பாய வகையால் தொற்று ஏற்பட்டு மீண்டும் DENV-2 அல்லது DENV-3 யால் தொற்று ஏற்படல், DENV-3யால் முதலில் தொற்று ஏற்பட்டு பின்னர் DENV-2யால் ஏற்படல் போன்றவற்றில் கடுமையான விளைவுகள் ஏற்படும்.[2][6][7]
நோய்க்காவி
ஏடிசு எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது.
[6] இக்கொசுவை இலகுவில் அடையாளம் காணக்கூடிய சிறப்பம்சமாகக் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பொதுவாகப் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.[8] டெங்குத் தீநுண்மம் காவும் வேறு ஏடிசு இனங்களாவன: A. albopictus, A. polynesiensis, A. scutellaris[6]
மனிதனே முதன்மை வழங்கியாக இருப்பினும்,[3][6] குரங்கினத்தின் இடையேயும் தீநுண்மங்கள் சுற்றி வருகின்றன.[9] ஒரு தரம் கொசு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும்.[10] நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை இக்கொசு கடிக்குமாயின் தீநுண்மங்கள் பரவக்கூடும். இதைவிட, பெண் கொசு தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடமிருந்து பெற்ற பின்னர், கொசுவின் குடற்கலங்களை தீநுண்மங்கள் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து கொசுவின் ஏனைய இழையங்களுக்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இக்கொசுக்கள் கடிக்கும்போது தீநுண்மங்கள் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே கொசுவானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க்காவியாகத் தொழிற்படுகின்றது.[11]
இத்தீநுண்மங்கள் கொசுவுக்குக் கேடுதரும் விளைவுகள் ஏற்படுத்துவதில்லை, இவை கொசுவின் ஆயுட்காலம் ( பொதுவாக 21 நாட்கள்) முழுவதிலும் தொற்றி இருக்கின்றன.[11] மனிதனுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர்நிலைத் தேக்கங்களில் முட்டை இடுவதை ஏடிசு எகிப்திக் கொசுக்கள் விரும்புகின்றன, எனவே தமது குருதி உணவுஉணவைப் பெற்றுக்கொள்ள முடியும்.[12]
குருதி மாற்றீடு, உறுப்பு மாற்றீடு (Organ transplantation) போன்ற சந்தர்ப்பங்களிலும் நோய்த் தொற்றுள்ள குருதி மூலம் டெங்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன.[13][14]கர்ப்பிணித் தாயிலிருந்து சேய்க்கும் அல்லது பிறப்பின்போதும் பரவிய நிகழ்வுகள் அறியப்பட்டுள்ளன. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பெரும்பாலும் பரவுவதில்லை, எனினும் வழமைக்கு மாறாக அத்தகைய நிகழ்வுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.[11]
எளிதில் பாதிப்படைபவர்
குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது.[15]ஆண்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெண்கள் பாதிப்படைகின்றனர்.[5] நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய பாதிப்பை உண்டாக்கும்.[5]
நோயியல்
டெங்குத் தீநுண்மத்தைக் காவும் கொசு ஒருத்தரைக் கடிக்கும்போது அக்கொசுவின் உமிழ்நீருடன் தோற் பகுதிக்குத் தீநுண்மம் செல்கின்றது. பின்னர் வெண்குருதியணுக்களுடன் ஒட்டிக்கொண்டு அவற்றின் உள்ளே நுழைந்து இனம் பெருகுகின்றது. வெள்ளணுக்கள் இதற்கு மறுவினையாக, இனம்பெருகலைத் தடுப்பதற்குரிய இன்டெர்பெரோன் போன்ற சமிக்ஞைப் புரதங்களைத் தயாரிக்கின்றன, இதுவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதற்குக் காரணம் ஆகின்றது.[11]
கடுமையான தொற்றில் தீநுண்மத்தின் தன்பிரதி அமைத்தல் மிகையாகின்றது; கல்லீரல், என்புமச்சை போன்ற பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. குருதிக்குழாயிலிருந்து நீர்மங்கள் வெளியே கசியத் தொடங்கும். குருதிக்குழாய்ச் சுவரின் ஊடுபுகவிடு தன்மை கூடுவது இதற்குக் காரணமாகின்றது. இவற்றின் காரணமாகக் குருதிக்குழாய்களுள் குறைவான அளவு குருதி உடலில் சுற்றோட்டத்துக்கு உட்படுகின்றது, இதனால் குருதி அழுத்தம் குறைகின்றது, முக்கிய உறுப்புகளுக்குப் போதியளவு குருதி விநியோகம் கிடைப்பது தடைப்படுகின்றது. என்புமச்சையின் பாதிப்பால் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுகின்றது, எனவே குருதி உறைதலைக் கட்டுப்படுத்தும் தொழிற்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது, இதனால் குருதிப்பெருக்கு உண்டாகும் தீங்கு ஏற்படுகின்றது.
தீநுண்மம் தன்பிரதி அமைத்தல்
தோலின் உள்ளே வந்தடைந்த தீநுண்மம் இலங்ககான் உயிரணுக்களுடன் (தோலில் அமைந்துள்ள கிளையி உயிரணுக்கள் கூட்டம், இவை நோய்க் காரணியைக் கண்டறிகின்றன) பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன.[16] தீநுண்மங்களின் சூழ்உறையில் (envelope) உள்ள புரதங்கள் இலங்ககான் உயிரணுக்களில் உள்ள புரத ஏற்பிகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி உயிரணு உள்வாங்கல் (endocytosis) முறைமூலம் அவற்றுள் புகுகின்றன. இதன்போது தீநுண்மம் அகவுடல் (endosome) எனும் உருண்டை வடிவப் பகுதியால் சூழப்பட்டு குழியமுதலுருவை அடைகின்றது, அங்கே அமிலத்தன்மை கூடுகின்றது (pH குறைகின்றது), இதன்போது தீநுண்ம சூழ்உறைப்புரதம் தனது வடிவத்தை மாற்றுகின்றது, இச் செயற்பாடு அகவுடலிலிருந்து தீநுண்மம் வெளியேற உதவுகின்றது. இப்போது சூழ்உறை அகன்று, தீநுண்மம் புரத உறையுடன் (capsid) வெளியே வருகின்றது. புரத உறையும் உடைந்து அகன்றுவிட, தீநுண்மத்தின் ஆர்.என்.ஏ இழைகள் வெளியேறி அகக்கலவுருச் சிறுவலையை அடைகின்றது, அங்கே புதிய தீ நுண்மத்துக்கான புரதம் தொகுக்கப்படுகின்றது. முதிர்ச்சியடையாத தீ நுண்மத் துகள்கள் கொல்கிச் சிக்கலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இறுதியில் தொற்றுக்குட்படுத்தப்பட்ட உயிரணுவிலிருந்து உயிரணு வெளித்தள்ளல் (exocytosis) முறைமூலம் முதிர்ந்த பல தீநுண்மங்கள் வெளியேறி வேறு உயிரணுக்களை (வெள்ளணுக்கள்) நாடுகின்றன.
சில தீநுண்ம குருதிப்பாய வகைகள் இன்டெர்பெரோன் உருவாகும் வேகத்தைக் குறைக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. இன்டெர்பெரோன்கள் நோயெதிர்ப்புத் தொகுதியை எச்சரிக்கை செய்யும் வேளையில் பிறபொருளெதிரிகள், T-உயிரணுக்கள் உருவாக்கப்படுகின்றன, இவை தீநுண்மம் உள்ள உயிரணுக்களைத் தாக்குவதற்கு செல்கின்றன. வெவ்வேறுபட்ட பிறபொருளெதிரிகள் உருவாக்குகின்றன; அவற்றுள் சில, தீநுண்மப் புரதங்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி அவற்றை தின்குழியங்களுக்கு அனுப்பி தின்குழியமை முறைமூலம் அகற்ற உதவுகின்றன. இம்முயற்சி சிலவேளை பிழைத்தால், தீநுண்மங்கள் தின்குழியங்களால் அழிக்கப்படுவதற்குப் பதிலாகத் தின்குழியங்கள் உள்ளேயே நுழைந்து பல்கிப் பெருகும்.
நோயின் அறி உணர்குறிகள்
முதன்முதலில் நோயின் தொற்றுக்குள்ளானவர் பெரும்பாலும் ( 50 – 90%) அறி உணர்குறிகளின்றிக் காணப்படுவர், அல்லது கேடில்லாத காய்ச்சல் மட்டுமே இருக்கும்,[1][6][17] ஏனையோர் டெங்குவின் மரபார்ந்த அறிகுறிகளைக் கொண்டிருப்பர், அவையாவன: திடீரென அதிகரித்துச் செல்லும் மிகையான காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதி வலி, உடல்வலி (தசை, எலும்பு வலி), களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், சுவையில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல். இவர்களுள் சிறிய பகுதியினர் (5%) நோய் கடுமையாகிக் காணப்படுவர்.[1][17] ஏற்கனவே ஒரு குருதிப்பாய வகை தீநுண்மத்தால் பாதிப்புற்ற சிறிய வீதமான மக்களில் மீண்டும் பிறிதொரு குருதிப்பாய வகைத் தொற்று ஏற்படின் குருதிக்குழாய்களில் சிதைவு ஏற்பட்டு குருதிப்போக்கு உண்டாகும் தீவிளைவு உண்டு, இத்தகைய நிலைமை டெங்குக் குருதிப்போக்குக் காய்ச்சல் எனப்படும்.
நோயரும்பு காலம் (கொசு தீநுண்மத்தை செலுத்தியதிலிருந்து அறிகுறிகள் தோன்றும் காலம்) 3 – 14 நாட்களாகும், சராசரியாக 4 – 7 நாட்கள். எனவே அயனமண்டலப் பகுதிகளிலிருந்து வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்பவர், அங்கு வருகை தந்து 14 – 16 நாட்களுக்கும் மேற்பட்டால் டெங்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பில்லை.[15] அதேவேளையில் அக்குறிப்பிட்ட காலப்பகுதியில் அறிகுறிகள் தென்படின் டெங்குக் காய்ச்சலாக இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியமானது.[18]
நோயின் பருவங்கள்
நோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்: காய்ச்சல், கடுமையான பருவம், மீள்நிலைப் பருவம்.
நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °C (104 °F)க்கு மேற்செல்லும், இதனுடன் கடுமையான தலைவலி, குறிப்பாகக் கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். பொதுவாகக் காய்ச்சல் இரண்டு தொடக்கம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும்.[2][19] வெகு அரிதாக ஆனால் சிறார்களில் பொதுவாக, இக் காய்ச்சல் 2 – 5 நாட்களுக்கு நீடித்து, பின்னர் ஓரிரு நாட்களுக்கு இராது, மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குத் தோன்றும், பின்னர் அறவே நிற்கும். பத்து நாட்களுக்கு மேலே காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு.[3][11][20]
இப்பருவத்திலே ஏனைய அறிகுறிகள் காணப்படும். அவையாவன:
- தலைவலி
- கண் பின்புற வலி
- பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
- குமட்டலும் வாந்தியும்
- வயிற்றுக்கடுப்பு
- தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
- பசியின்மை
- தொண்டைப்புண்
- மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்—petechiae)[21]
- நிணநீர்க்கணு வீக்கம்
- வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்
காய்ச்சல் தொடங்கியுள்ள காலப்பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும்.[2][22] முதல் அல்லது இரண்டாம் நாள் (காய்ச்சல் மற்றும் மற்றைய அறிகுறிகள் தோன்றியதிலிருந்து) தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் சினைப்பைப் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும். முதலில் உடலிலும் பின்னர் முகத்திலும் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதி நுண் குழாயில் (குருதி மயிர்த்துளைக்குழாய்) கசிவு ஏற்பட்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளில் சிறியளவிலான குருதிப்போக்கு உண்டாகாலாம்.
சிலருக்கு இந்நோய் கடுமையான பருவத்தைக் கொண்டிருக்கும். காய்ச்சல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் இப்பருவம் ஓரிரு நாட்கள் நீடிக்கும். இப்பருவத்தில் உடலில் நீர்மத்தேக்கம் ஏற்படும். குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து கசிவு ஏற்படலால் நெஞ்சறை, வயிற்றுப் பகுதிகளில் நீர்மத்தேக்கம் உண்டாகின்றது.[11] இதனால் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல் ஏற்படும். இப்பருவத்தில் உறுப்புகள் செயலிழப்பு, கடும் குருதிப்போக்கு (முக்கியமாக, இரையகக் குடலியத் தொகுதியில்) என்பன ஏற்படும். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது அடுத்த கட்ட நிலையான டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறிக்குச் செல்லும். வயிற்று வலி, வாந்தி, அமைதியின்மை போன்றவற்றுடன் பொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளும் இதன்போது ஏற்படும். டெங்கு தொற்றுக்குட்பட்டவருள் 5% மானவரிலேயே இக்கடுமையான அறிகுறிகள் தோன்றுகின்றது, ஏற்கனவே டெங்கு தீநுண்மத்தின் பிறிதொரு குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்டோருக்கு இவ்வறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும்.[11]
அடுத்ததாக மெதுவாக நிகழும் மீள்நிலைப் பருவம், இதில் குருதிக்குழாய்க்கு வெளியே கசிந்த நீர்மம் குருதிக்குழாய்க்குள் இழுக்கப்பட்டு குருதியை அடையும். இது இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இந்நிலையின்போது நமைச்சல், தாழ் இதயத் துடிப்பு போன்றன காணப்படலாம், மேலும் நீர்ம அதிகரிப்பு இந்நிலையில் ஏற்பட்டால் மூளையைப் பாதித்துச் சுயநினைவு இழத்தல், வலிப்பு போன்றவற்றை உண்டாக்கலாம்.[11][15][19] நோயின் பின்விளைவுகளில் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். இது டெங்கு கல்லீரல் அழற்சி எனப்படும்.
அறுதியிடல்
நோய்த்தொற்று பரவியுள்ள ஊர்ப்பகுதிகளில் நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவரின் பரிசோதனையும் வைத்து அறுதியிடப்படுகின்றது, எனினும் ஆரம்பகட்ட நோய்ப் பருவத்தை ஏனைய தீநுண்ம நோய்களிலிருந்து வேறுபடுத்தி அறிவது சுலபமாக இராது. சரியான அறுதியிடலுக்கு, காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளில் குறைந்த பட்சம் இரண்டேனும் இருத்தல் வேண்டும்: குமட்டலும் வாந்தியும், தோல் சினைப்பு, உடல் வலி, குறைவான வெண்குருதியணுக்கள், நேரான குருதியடக்குவடப் பரிசோதனை, அல்லது அட்டவணையில் காட்டப்பட்டுள்ள ஏதாவது எச்சரிக்கைக் குறிகள். எச்சரிக்கைக் குறிகள் கடுமையான நோய் உருவாக முன்னர் தோன்றும்.[1]
எச்சரிக்கைக் குறிகள்
| ||||
வயிற்று வலி | ||||
வாந்தி எடுத்துக் கொண்டிருத்தல் | ||||
கல்லீரல் வீக்கம் | ||||
மென்சவ்வுக் குருதிப்போக்கு (மூக்கு, வாய்) | ||||
உயர் சிவப்பணுக் கனவளவு வீதம், தாழ் குருதிச் சிறுதட்டுகள் | ||||
சோர்வு |
குருதியடக்குவடப் பரிசோதனை உடனடியாக நோயைக் கண்டறிய துணைபோகின்றது.[19] குருதியழுத்தமானியின் குருதியடக்குவடத்தை ஏறத்தாழ 100 மில்லிமீட்டர் இரசம் அழுத்தத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேற்கையில் வைத்திருக்க வேண்டும், பின்னர் அவ்விடத்தில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுகின்றனவா என்பதை அவதானிக்க வேண்டும், அதிக எண்ணிக்கையிலான புள்ளிகள் தோன்றின் குருதியடக்குவடப் பரிசோதனை நேரானது, அதாவது டெங்கு குறித்த நபருக்கு இருக்கலாம் என்று அறியலாம். சிக்குன்குனியா நோயிலிருந்து டெங்குவை வேறுபடுத்தலில் சிக்கல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுகூடப் பரிசோதனை
ஆய்வுகூடப் பரிசோதனையில் முழுமையான குருதியணுக்கள் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும், நோயின் ஆரம்பகாலத்தில் வெண்குருதியணுக்கள் குறைவடைவதை அவதானிக்கலாம், அதன் பின்னர் குருதிச் சிறுதட்டுகள் குறைவது (< 100 x 109/லீட்டர்) தோன்றும்.[15] அசுபார்ட்டேட் அமினோட்ரான்சுபெரேசு, அலனின் அமினோட்ரான்சுபெரேசு போன்ற நொதிகளின் அளவுகள் மிகையாகும். இவை ஆரம்ப காலத்தில் உயர்வடையத் தொடங்கி இரண்டு வாரத்தில் உச்ச நிலையை அடையும்.[11]
நோயின் கடுமை கூடும்போது, குருதிப்பாயம் குறைவதால் குருதியின் அடர்த்தி கூடும், இதைச் சிவப்பணுக் கனவளவு வீதம் (hematocrit) கூடி இருப்பதை வைத்து உறுதி செய்யலாம். அல்புமின் புரதம் குருதியில் குறைந்துள்ளதும் இங்கு அவதானிக்கலாம்.[11] மருத்துவரின் நேரடிப் பரிசோதனைமூலம் பெரிதளவில் ஏற்பட்டுள்ள நுரையீரல் உறை நீரேற்றம் மற்றும் வயிற்றில் நீர்க் கோர்ப்பு என்பவற்றை அறியலாம், எனினும் மீயொலி நோட்டம் மூலம் துவக்கத்திலேயே அறியலாம், இது அதிர்ச்சி வருவதை முற்கூட்டியே அறிய வழிவகுக்கின்றது.
சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீருடன் குருதி சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம். சிறுநீர், குருதி, மூளை தண்டுவடத் திரவம் போன்றவற்றை நுண்ணுயிரியல் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு அனுப்புதல் வேறு நோய்களுடன் இருந்து வேறுபடுத்திக்கொள்ள உதவுகின்றது. நெஞ்சறை எக்சு-கதிர்ப் படம்மூலம் நுரையீரல் உறை நீரேற்றம் உள்ளதென்பது உறுதிப்படுத்தப்படும்.[11]
நுண்ணுயிரியல் ஆய்வுகூடப் பரிசோதனை
ஆய்வுகூடத்தில் தீநுண்மத்தை வேறுபடுத்தி அவதானிக்கலாம், இதற்கு உயிரணுவில் தீநுண்மம் வளர்த்தல், கருவமில ஆய்வு, தீநுண்ம பிறபொருளெதிரியாக்கியை அல்லது பிறபொருளெதிரிகளைக் கண்டறிதல் துணைபோகின்றது.[11] ஆனால் இத்தகைய பரிசோதனைகள் மிகவும் செலவு கூடிய காரணத்தால் எல்லா இடங்களிலும் நடத்தப்படுவதில்லை.
பண்டுவ (மருத்துவ) முறை
நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும். மருத்துவமனையில் செய்யும் சிரைமூல நீர்ம ஈடு, குருதிப்பரிமாற்றம் போன்றவை நோயைக் கட்டுப்படுத்துகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கலாமா இல்லையா என்பது ‘எச்சரிக்கைக் குறிகளை’ வைத்துத் தீர்மானிக்கப்படுகின்றது.
காய்ச்சலுக்கு பரசிட்டமோல் பயன்படுத்தப்படுகின்றது. அஸ்பிரின், இயக்க ஊக்கி மருந்துகள் (corticosteroids), அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் அறவே பயன்படுத்தல் கூடாது, ஏனெனில் இவை குருதிப்போக்கை மேலும் மிகையாக்கிவிடும். மேலும் தசை வழியே ஊசி போடுதல் போன்ற குருதிப்பெருக்கை ஏற்படுத்தவல்ல மருத்துவ முறைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.[11]
நோயின் மீள் நிலைப் பருவத்தில் சிரைவழியான நீர்மம் செலுத்துதல் நிறுத்தல் அவசியமாகின்றது, ஏனெனில் இப்பருவத்தில் நீர்ம அதிகரிப்பு நிலை உண்டாகும்.
சித்த மருத்துவம்
பாதிக்கப்பட்ட நோயாளி நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை காலை, மாலை ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கபடுவதாகச் சித்த மருத்துவம் கூறுகின்றது[23].
தடுப்பு முறைகள்
டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் தீ நுண்மத்தில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும்.[8][24]
கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.[8] சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.
வரலாறு
டெங்குவாக இருக்கக்கூடிய காய்ச்சல் நோய் ஒன்று முதன்முதலில் சீன மருத்துவ அறிகுறிகள் என்சைகிளோபீடியாவில் சின் பேரரசுக் காலத்தில் (265 – 420 கி.பி) பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.[11]
டெங்குவாகக் கருதக்கூடிய காய்ச்சலுடன் கூடிய பரந்த தொற்று நிகழ்வு ஒன்று முதன்முதலில் 1635இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடந்ததாகப் பதியப்பட்டுள்ளது.
1779–1780 ஆண்டுப் பகுதியில் முதலாவது டெங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நிகழ்வு ஆசியா, வட அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. 1789 இல் அமெரிக்க மருத்துவர் பெஞ்சமின் ரஷ் 1780 ஆம் ஆண்டு பிலாடெல்பியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய டெங்கு தொற்று நிகழ்வுபற்றிக் குறிப்பிட்டுள்ளார், இவர் அதன் அறிகுறிகளை வைத்து ‘எலும்பு முறிப்பு நோய்’ என்று பெயரிட்டார்.[11]
1820 இன் முற்பகுதிகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் டெங்குவாக இருக்கக்கூடிய தொற்று நிகழ்வு நிகழ்ந்தது. இதனை சுவாகிலி மொழியில் கெட்ட ஆவியால் திடீரென உண்டாகுமெனப் பொருள்படும் ‘கி டெங்கா பெபோ’ (ki denga pepo) என்று அழைத்தனர். 1827–28 இல் கரிபியனில் நிகழ்ந்த தொற்று நிகழ்வின் பின்னர் இசுப்பானிய கரிபியர்களால் டெங்கு என அழைக்கப்பட்டது. 1906 இல் ஏடிசுக் கொசுவால் இது காவப்படுகின்றது என்பது அறியப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும்படியான தொற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன. இந்த மீன் கொசுவின் குடம்பிகளைத் தின்னும் [11] இக்காய்ச்சலின் காரணமாக இந்திய மாநிலமான தமிழகத்தில் மட்டும் 2015 ஆம் ஆண்டில் 4484 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.[25]
ஆராய்ச்சிகள்
டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்கப் பல ஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, தீநுண்மத்துக்கான (வைரசுக்கான) தடுப்பு மருந்து உருவாக்கம், வைரசுக்கெதிரான மருந்துகள் கண்டுபிடிப்பு எனப் பல வழிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
கப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளதென அறியப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை அமைப்பு
டெங்குக் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பைச் சுமார் 16 வாரங்களுக்கு முன்பாகவே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை விடுப்பதற்கான அமைப்பைச் சிங்கப்பூரைச் சேர்ந்த யின் லிங் ஹி வடிவமைத்து வருகிறார். வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகும் கிருமிகளின் நிலையை அறிய முடியும் என்பதே அவரது முக்கிய கண்டுபிடிப்பு.[26]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Whitehorn J, Farrar J (2010). "Dengue". Br. Med. Bull. 95: 161–73. doi:10.1093/bmb/ldq019. பப்மெட்:20616106.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Chen LH, Wilson ME (October 2010). "Dengue and chikungunya infections in travelers". Curr. Opin. Infect. Dis. 23 (5): 438–44. doi:10.1097/QCO.0b013e32833c1d16. பப்மெட்:20581669.
- ↑ 3.0 3.1 3.2 Gould EA, Solomon T (February 2008). "Pathogenic flaviviruses". The Lancet 371 (9611): 500–9. doi:10.1016/S0140-6736(08)60238-X. பப்மெட்:18262042.
- ↑ 4.0 4.1 Rodenhuis-Zybert IA, Wilschut J, Smit JM (August 2010). "Dengue virus life cycle: viral and host factors modulating infectivity". Cell. Mol. Life Sci. 67 (16): 2773–86. doi:10.1007/s00018-010-0357-z. பப்மெட்:20372965.
- ↑ 5.0 5.1 5.2 Guzman MG, Halstead SB, Artsob H, et al. (December 2010). "Dengue: a continuing global threat". Nat. Rev. Microbiol. 8 (12 Suppl): S7–S16. doi:10.1038/nrmicro2460. பப்மெட்:21079655. http://www.nature.com/nrmicro/journal/v8/n12_supp/full/nrmicro2460.html.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 WHO (2009), pp. 14–16.
- ↑ C. Dale, David (2003). "34 VIRAL ZOONOSES". Infectious Diseases: The Clinician's Guide to Diagnosis, Treatment, and Prevention.
- ↑ 8.0 8.1 8.2 WHO (2009), pp. 59–60.
- ↑ "Vector-borne viral infections". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 17 January 2011.
- ↑ Center for Disease Control and Prevention. "Chapter 5 – dengue fever (DF) and dengue hemorrhagic fever (DHF)". 2010 Yellow Book. பார்க்கப்பட்ட நாள் 2010-12-23.
- ↑ 11.00 11.01 11.02 11.03 11.04 11.05 11.06 11.07 11.08 11.09 11.10 11.11 11.12 11.13 11.14 11.15 Suzanne Moore Shepherd, MD, MS, DTM&H, FACEP, FAAEM; Chief Editor: Burke A Cunha, MD. "Dengue Clinical Presentation". 2012 medscape. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.
{{cite web}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Gubler (2010), pp. 377–78.
- ↑ Wilder-Smith A, Chen LH, Massad E, Wilson ME (January 2009). "Threat of dengue to blood safety in dengue-endemic countries". Emerg. Infect. Dis. 15 (1): 8–11. doi:10.3201/eid1501.071097. பப்மெட்:19116042. பப்மெட் சென்ட்ரல்:2660677. http://www.cdc.gov/eid/content/15/1/8.htm.
- ↑ Stramer SL, Hollinger FB, Katz LM, et al. (August 2009). "Emerging infectious disease agents and their potential threat to transfusion safety". Transfusion 49 Suppl 2: 1S–29S. doi:10.1111/j.1537-2995.2009.02279.x. பப்மெட்:19686562.
- ↑ 15.0 15.1 15.2 15.3 Ranjit S, Kissoon N (July 2010). "Dengue hemorrhagic fever and shock syndromes". Pediatr. Crit. Care Med. 12 (1): 90–100. doi:10.1097/PCC.0b013e3181e911a7. பப்மெட்:20639791.
- ↑ Martina BE, Koraka P, Osterhaus AD (October 2009). "Dengue virus pathogenesis: an integrated view". Clin. Microbiol. Rev. 22 (4): 564–81. doi:10.1128/CMR.00035-09. பப்மெட்:19822889. பப்மெட் சென்ட்ரல்:2772360. http://cmr.asm.org/cgi/content/full/22/4/564. பார்த்த நாள்: 2012-06-17.
- ↑ 17.0 17.1 Reiter P (2010-03-11). "Yellow fever and dengue: a threat to Europe?". Euro Surveill 15 (10): 19509. பப்மெட்:20403310. http://www.eurosurveillance.org/ViewArticle.aspx?ArticleId=19509.
- ↑ Gubler (2010), p. 379.
- ↑ 19.0 19.1 19.2 WHO (2009), pp. 25–27.
- ↑ Knoop KJ, Stack LB, Storrow A, Thurman RJ (eds.) (2010). "Tropical medicine". Atlas of emergency medicine (3rd ed.). New York: McGraw-Hill Professional. pp. 658–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-149618-1.
{{cite book}}
:|author=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ CDC
- ↑ Wolff K, Johnson RA (eds.) (2009). "Viral infections of skin and mucosa". Fitzpatrick's color atlas and synopsis of clinical dermatology (6th ed.). New York: McGraw-Hill Medical. pp. 810–2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-159975-7.
{{cite book}}
:|author=
has generic name (help) - ↑ டெங்கு நோயாளிகளுக்கு சித்த மருந்து கசாயம் தினமணி
- ↑ WHO (2009), p. 137.
- ↑ 2015-ல் டெங்குவால் 4,484 பேர் பாதிப்பு தி இந்து தமிழ் 23 சனவரி 2016
- ↑ முன்னெச்சரிக்கை அமைப்பு
வெளி இணைப்புகள்
- முடக்குக் காய்ச்சல் குர்லியில்
- "Dengue". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 27 June 2011.
- "Dengue". U.S. Centers for Disease Control and Prevention. பார்க்கப்பட்ட நாள் 27 June 2011.
- "Dengue fever". UK Health Protection Agency. பார்க்கப்பட்ட நாள் 27 June 2011.
- "DengueMap". U.S. Centers for Disease Control and Prevention/HealthMap. பார்க்கப்பட்ட நாள் 27 June 2011.
- பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்