மகா மாணிக்கியா

திரிபுராவின் ஆட்சியாளர்

மகா மாணிக்கியா (Maha Manikya) (இறப்பு 1431), செங்துங் ஃபா என்றும் அழைக்கப்படும் இவர், சுமார் 1400 முதல் 1431 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். ஆரம்பகால வரலாறுகள் வழங்கிய கதைகளுக்கு மாறாக, 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அண்டை பழங்குடியினர் மீது ஆதிக்கம் செலுத்திய மகா மாணிக்கியா ராச்சியத்தை நிறுவியவர் என்பதை சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அண்டை நாடான வங்காள சுல்தானகத்தின் மீதான வரலாற்று வெற்றியை அங்கீகரிப்பதற்காக எடுக்கப்பட்ட "மாணிக்கியா" என்ற பட்டத்தின் முதல் உரிமையாளராகவும் இவர் கருதப்படுகிறார். இவர் நிறுவிய வம்சம் 1949 இல் திரிபுரா இந்தியாவுடன் இணையும் வரை இந்த பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தது [1]

மகா மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்அண். 1400–1431
பின்னையவர்முதலாம் தர்ம மாணிக்கியா
இறப்பு1431
Consortதிரிபுர சுந்தரி
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் தர்ம மாணிக்கியா
ககன் பா
உட்பட மேலும் மூவர்
மரபுமாணிக்கிய வம்சம்

காலவரிசையும், பெயரும் தொகு

மகா மாணிக்கியா, 1400 முதல் 1431 வரை ஆட்சி செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. திரிபுராவின் அரச வரலாற்றான ராஜ்மாலா, இவரது வாழ்க்கை பற்றிய சிறிய தகவல்களைக் கொண்டுள்ளது. அங்கு, இவர் முகுத் மாணிக்கியாவின் மகன் என்று விவரிக்கப்படுகிறார். இவர் புராண சந்திர வம்சத்தின் வழித்தோன்றல் என்றும் வம்சத்தின் நிறுவனர் என்று கூறப்படும் முதலாம் ரத்ன மாணிக்கியாவின் மகன் என்றும் அது கூறுகிறது.[2][3] அரியணை ஏறியதும், தன்னை ஒரு நல்லொழுக்கமுள்ள ஆட்சியாளராகவும், சிறந்த அறிஞராகவும் நிரூபித்ததாகக் கூறப்படுகிறது. இவருடைய ஆட்சியின் போது நடந்த இராணுவ ஈடுபாடுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.[4] இருப்பினும் ராஜ்மாலா வழங்கிய விவரணையில் சந்தேகம் ஏற்படுவதற்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன.[5] 1489ஆம் ஆண்டு தான் இவர் தனது ஆட்சியைத் தொடங்கியதால், இவர் முகுத் மாணிக்கியாவின் மகனாக இருந்திருக்க முடியாது என்பதை நாணயவியல் சான்றுகள் நிரூபிக்கின்றன. ரத்ன மாணிக்கியாவை விட அறிவாளியாகவும், அவர் இறந்த பிறகு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்ததாகவும் ஆதாரங்கள் காட்டுகின்றன.[6]

இவரது மகன் முதலாம் தர்ம மாணிக்கியா ராஜ்மாலாவில் "தங்கர் ஃபா" என்று[7] அடையாளம் காணப்பட்டதால், மகா மாணிக்கியாவை "செங்துங் ஃபா" என்ற பெயருடன் ஒப்பிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.[note 1] இவர் முதலில் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் "மகா மாணிக்கியா" மிகவும் அசாதாரணமான தனிப்பட்ட பெயராக இருக்கிறது.[note 2] குறிப்பாக "மகா" என்பது ஒரு முன்னொட்டு மட்டுமே என்பதைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்ட பெயராக அர்த்தமற்றது.[8][10]

ஆட்சி தொகு

செங்துங் ஃபா (பின்னர் மகா மாணிக்கியா) திரிபுரியின் தலைவர் என்று நம்பப்படுகிறது. இவர் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அண்டை பழங்குடியினரான குக்கிகள், ஜமாத்தியாக்கள் மற்றும் ரியாங்குகள் போன்றவர்களின் பகுதிகளைக் கைப்பற்றி திரிபுரா இராச்சியத்தை நிறுவினார். சில்ஹெட் மற்றும் சிட்டகொங்கிற்கு இடையில் அமைந்திருக்கும் வங்காளத்தின் எல்லையில் உள்ள உற்பத்தி மற்றும் வளமான பள்ளத்தாக்குகளில் வசிப்பதால், திரிபுரி மிகப்பெரிய பழங்குடி மக்களைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமானது.[11][5] இந்த நிகழ்வுகள் வங்காள சுல்தானின் செல்வாக்கு பலவீனமாக இருந்தபோது, ராஜா கணேசன் வங்காளத்தின் மீது தற்காலிக இறையாண்மையை நிறுவிய காலத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. [12]

ராஜ்மாலாவின் கூற்றுப்படி, செங்துங் ஃபா பின்னர் வங்காளத்தின் அடையாளம் தெரியாத ஆட்சியாளரின் கோபத்திற்கு ஆளானார். திரிபுரா வழியாகச் செல்லும் போது சுல்தானுக்குப் பரிசாக வழங்கப்ப்ட்ட ஒரு பொருள் திருடப்பட்டது. இதற்காக தனக்கு எதிராக ஒரு பெரிய இராணுவம் அனுப்பப்பட்டதை அறிந்ததும், செங்துங் ஃபா அமைதியைத் தொடரத் தயாராக இருந்தார். ஆனால் இவரது ராணி திரிபுர சுந்தரியால் தடுக்கப்பட்டார். அடிபணிவதை ஒரு கோழைத்தனமான செயல் என்று அறிவித்து, தன் கணவனை போரிடச் சம்மதிக்க வைத்தாள். படைவீரர்களுக்குத் தாமே தலைமை தாங்கி அவர்களை வங்காளத்தின் மீது வெற்றிக்கு அழைத்துச் சென்றாள்.[8][13][14] இந்த ஈர்க்கக்கூடிய வெற்றியின் விளைவாக செங்துங் ஃபா "மகா மாணிக்கியா" என்ற பட்டத்தைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. "மாணிக்கியா" பின்னொட்டு இவரது வாரிசுகளால் தொடரப்பட்டது.[8] இருப்பினும், சுல்தான் ஜலாலுதீன் முகமது ஷா மற்றும் பிற்கால திரிபுரா ஆட்சியாளரின் நாணயங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை காரணமாக, மகாவின் ஆட்சியின் போது இராச்சியத்தின் ஒரு பகுதி வங்காளத்திற்கு அடிபணிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.[note 3] இருப்பினும் இது வரலாற்றாசிரியர்களிடையே சர்ச்சைக்குரியது.[12][4]

இறப்பு தொகு

மகா மாணிக்கியா 1431 இல் இறந்தார். பின்னர், இவரது வாரிசுகள் மற்றும் தளபதிகளிடையே ஏற்பட்ட ஒரு குறுகிய போராட்டத்தைத் தொடர்ந்து, இவருக்குப் பிறகு இவரது மூத்த மகன் முதலாம் தர்ம மாணிக்கியா அரியணை ஏறினார்.[15] பின்னர், கச்சு ஃபா ககன் ஃபாவின் வழித்தோன்றலான கல்யாண் மாணிக்கியாவுடன் தொடங்கி, பிற்கால நூற்றாண்டுகளில் அரியணையைப் பெற்றனர். [16][17]

குறிப்புகள் தொகு

  1. ராஜ்மாலா வழங்கிய காலவரிசைப்படி செங்துங் ஃபா மற்றும் தங்கர் ஃபா இடையே வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு ஆட்சியாளர்களான அச்சாங் ஃபா மற்றும் கிச்சிங் ஃபா ஆகியோர் இந்த சூழ்நிலையில் நிராகரிக்கப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்களைப் பற்றி உரையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அவர்களைப் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இது அவர்களின் இருப்பு கேள்விக்குரியது என்ற முடிவுக்கு வழிவகுக்கிறது.[8]
  2. "மாணிக்கியா" என்பது சிவப்புக் கல் அல்லது மாணிக்கம் என்பதைக் குறிக்கிறது.[9]
  3. ஜலாலுதீன் முகமது ஷாவின் நாணயம் மற்றும் முதலாம் ரத்ன மாணிக்கியாவின் நாணயம் இரண்டும் பாதத்தை தூக்கி நின்று கொண்டிருக்கும் சிங்கத்தை பகிர்ந்து கொள்கின்றன.[4]

சான்றுகள் தொகு

  1. Bhattacharjee (2010), ப. 33.
  2. Sarma (1987), ப. 38–39.
  3. Durlabhendra, Sukheshwar & Baneshwar (1999), ப. 60.
  4. 4.0 4.1 4.2 Sarma (1987), ப. 39.
  5. 5.0 5.1 Roychoudhury (1983), ப. 14.
  6. Sarma (1987), ப. 38.
  7. Gan-Chaudhuri (1980), ப. 20.
  8. 8.0 8.1 8.2 8.3 Lahiri (1999), ப. 53.
  9. Singh (1999), ப. 8.
  10. Saha (1986), ப. 168.
  11. Momin, Mawlong & Qādrī (2006), ப. 81.
  12. 12.0 12.1 Ganguly (1985), ப. 155.
  13. Raatan (2008), ப. 145.
  14. Roychoudhury (1983), ப. 3.
  15. Sarma (1987), ப. 39–40.
  16. Sarma (1987), ப. 96.
  17. Choudhury (2000), ப. 501–02.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_மாணிக்கியா&oldid=3801902" இலிருந்து மீள்விக்கப்பட்டது