வலைவாசல்:அறிவியல்/சிறப்புக் கட்டுரை/9

விண்மீன்கள் உருவாக்கம் என்பது அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் சுருங்கி அடர்த்தியாகி மின்மப் பந்து போன்ற ஒரு அமைப்பைப் பெறுதல் ஆகும். நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வாயுக்கள் என்பன மூலக்கூற்று முகில்களில் காணப்படுகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய விண்மீன்கள் குறைந்த ஆயுட்காலமும் பெரிய விண்மீன்கள் கூடிய ஆயுட்காலமும் கொண்டுள்ளன. சுருள் விண்மீன் திரள் போன்ற பால் வழியில் விண்மீன்கள், விண்மீன் துகள்கள், கூறுகள் போன்றவை காணப்படுகின்றன. இவைகளுக்கு இடையே உள்ள முகில்கள் தம்மகத்தே ஐதரசன், ஈலியம் போன்ற வளிமங்களைக் கொண்டுள்ளன, மிகவும் அடர்த்தியாக உள்ள இத்தகைய நிலை வான்புகையுரு என அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே விண்மீன்கள் உருவாகுகின்றன. இங்கு பெரும்பான்மையான ஐதரசன் மூலக்கூற்றுவடிவில் காணப்படுவதால் மூலக்கூற்று முகில்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சுழன்று கொண்டிருக்கும். எல்லா விண்மீன்களும் மூலக்கூற்று முகில்களில் இருந்தே தோன்றுகின்றன.