அகத்திய விண்மீன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகத்திய நட்சத்திரம் அல்லது அகத்திய விண்மீன் என்றழைக்கப்படும் கனோபசு (canopus) தென்திசையிலுள்ள கரைனா, அர்கோ நவீசு என்ற விண்மீன் தொகுதியின் பொலிவுமிக்க விண்மீன் ஆகும் (α Carinae); வானில் தெரியும் விண்மீன்கள் அனைத்திலும் மிருகவியாதரை அடுத்து இரண்டாவது பொலிவுமிக்க விண்மீன் இதுவே. இதன் தோற்ற ஒளியளவு -0.72 ஆகவும் தனி ஒளியளவு -5.53 ஆகவும் உள்ளது.
இது F வகை நிறமாலை வரிசையிலுள்ள மஞ்சள்-வெள்ளை விண்மீனாகும்; ஆனால் காண்பதற்கு வெண்ணிறமாகவே தெரியும். வானத்தின் தொலை-தென் பகுதியில் −52° 42' (2000) விலக்கத்தில் இது தெரியும். தொலை-தென் பகுதியில் இது உள்ளதால், நிலநடுக்கோட்டிலிருந்து 37°18' -க்கு மேல் வடக்கே உள்ளவர்களுக்கு இது பெரும்பாலும் தெரியாது; ஆனால், வளிமண்டல ஒளிவிலகல் காரணமாக இன்னுமொரு பாகை வடக்கேயும் கூட இது சில தருணங்களில் தெரிவதுண்டு. சூரிய மண்டலத்திலிருந்து 310 ஒளியாண்டுகள் (96 பார்செக்குகள்) தொலைவில் கனோபசு உள்ளதாக இப்பார்கசு செயற்கைக்கோள் தொலைநோக்கியின் அளவீடு மூலம் தெரிகிறது.
ஞாயிற்றின் விட்டத்தை விட கனோபசின் விட்டம் 130 மடங்கு அதிகம். இதன் நிறை ஞாயிற்றின் நிறையை விட 8 1/2 மடங்கு அதிகம். மேலும், ஞாயிற்றை விட இதன் ஒளிவீசும் திறன் 13600 மடங்கு அதிகம்; இருப்பினும், அருகாமையிலுள்ள காரணத்தினால் தான் சிரியசு (புவிலிருந்து 8.6 ஒளியாண்டுகள்) கனோபசை விட பொலிவுமிக்கதாகத் தெரிகிறது.
கலைச்சொற்கள்தொகு
1. பொலிவுமிக்க - brightest 2. தோற்ற ஒளியளவு - visual magnitude 3. தனி ஒளியளவு - absolute magnitude 4. நிறமாலை வரிசை - spectral series 5. வளிமண்டல ஒளிவிலகல் - atmospheric refraction 6. நிலநடுக்கோடு - equator