அசுதோசு அருங்காட்சியகம்

அசுதோசு அருங்காட்சியகம் (Asutosh Museum of Indian Art) இந்தியக் கலைகளின் பல்வேறு காலகட்ட மாதிரிகளைச் சேகரித்துப் பாதுக்காக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட ஒரு கலை அருங்காட்சியகமாகும். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்நகரின் கல்லூரி சாலையிலுள்ள கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் 1937 ஆம் ஆண்டில் அசுதோசு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதன் முதலாக நிறுவப்பட்ட பொது அருங்காட்சியம் இதுவேயாகும்[1].

1906 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையிலும் 1921 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய சர் அசுதோசு முகர்சியின் பெயர் இந்தப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திற்குச் சூட்டப்பட்டது. குறிப்பாக வங்கக் கலைகளை சேகரித்து பாதுகாப்பது சிறப்பு நோக்கமாகக் கருதப்பட்டது[2].

ஆரம்ப கால சேகரிப்புகள் தொகு

அசுதோசு முகர்சி பல்கலைக்கழக கல்வியில் இந்திய கலை மற்றும் தொல்லியல் உள்ளிட்ட இந்தியவியல்ஆய்வை அறிமுகப்படுத்திய சிறந்த கல்வியாளர் என்ற பெயரைப் பெற்றவர் ஆவார். இந்த அருங்காட்சியகம் கிழக்கு இந்தியாவின் இந்திய கலை மற்றும் பழங்கால பொருட்களின் பாதுகாப்பு, விளக்கக்காட்சி ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. ஐந்து கலைப்பொருள்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், முதல் காப்பாட்சியரான ஸ்ரீ டி.பி. கோஷ் தொடங்கி பல நன்கொடையாளர்கள் மற்றும் தன்னலமற்ற பணியாளர்கள் அன்பளிப்பாகத் தந்த கலைப்பொருள்களின் காரணமாக இங்கு சிற்பங்கள், ஓவியங்கள், நாட்டுப்புற கலை பொருட்கள், ஜவுளி, சுடுமண் பொம்மைகள் போன்றவற்றை உள்ளடக்கிய 25,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் அசாதாரணமான பலவகைகளைப் பொருள்கள் தொகுப்பில் சேர்ந்தன. காலங்காலமாக இருந்து வருகின்ற மக்களின் பண்பாடு தொடர்பான ஒரு மேம்போக்கான கூறுகளை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. [3]

இடம் மாற்றம் தொகு

அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அதன் இருப்பிடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாற்ற வேண்டிய சூழல் எழுந்தது. ஆரம்பத்தில், சேகரிப்புகள் பழைய செனட் ஹாலின் பின்புறப் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அங்கு சிறிய அளவில் நகர்த்தக்கூடிய நிலையில் அமைந்த காட்சிப்பொருள்கள் கண்காட்சிகள் முர்ஷிதாபாத் இமாம்பாடாவுக்கு மாற்றப்பட்டன மேலும் பெரிய அளவில் அமைந்த கல் சிற்பங்கள் உள்ளிட்டவை இரண்டாம் உலகப் போரின்போது குண்டுவெடிப்பு அச்சுறுத்தல் காரணமாக 1942 ஆம் ஆண்டில் நிலத்தடியில் பாதுகாத்து வைக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவை அனைத்தும் மீண்டும் பழைய இடத்தில் கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டன. 1960 இல் மீண்டும் அதன் புதிய கட்டிடத்தில் இடம் மாற்றப்பட்டு காட்சியில் வைக்கப்பட்டன. ஏழு ஆண்டுகளாக ஒரு தற்காலிக இடத்தில் செயல்பட்டு வந்த இந்த அருங்காட்சியகம் 1967 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட நூற்றாண்டு கட்டிடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது. அங்கு மைதானம் மற்றும் முதல் தளங்கள் காட்சியகங்கள், பராமரிப்பு மற்றும் நிர்வாக அலுவலகம் ஆகியவற்றிற்கான இடங்கள் அமைந்திருந்தன. [3]

தேசிய முக்கியத்துவம் தொகு

இந்த அருங்காட்சியகம் அதன் பயன்பாடு மற்றும் நிலை போன்றவற்றிற்குத் தக்கபடியாக இடவசதியைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான அருங்காட்சியகமாகவும் புகழ் பெற்றது. நிறுவப்பட்ட பின்னர் இந்த உடனேயே, அருங்காட்சியகம் கலைப் பாராட்டுதல் தொடர்பான சான்றிதழ் படிப்பை நடத்தியது. அருங்காட்சியகத்தின் வெளியீடுகளில் பாதுகாப்பைப் பற்றிய பயனுள்ள புத்தகங்கள், அருங்காட்சியகத்தின் அகழாய்வு பற்றிய அறிக்கைகள் மற்றும் வங்காள சிற்பம், சுடுமண் சிற்பங்கள் மற்றும் அதன் சேகரிப்பில் உள்ள நாணயங்கள் பற்றிய கையேடுகள் ஆகியவை அடங்கும். வண்ணமயமான மற்றும் ஒரே வண்ணமுடைய அஞ்சல் அட்டைகளின் பல தொகுப்புகளும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். 1959 ஆம் ஆண்டில், கல்கத்தா பல்கலைக்கழகம் அருங்காட்சியகத்தில் முதுகலை டிப்ளோமா பாடத்தை இங்கு நடத்த ஏற்பாடு செய்தது. இந்த பாடத்திற்கான தளமாகவும் ஆய்வகமாகவும் அருங்காட்சியகம் செயல்பட்டது. [3]

காட்சிப்பொருள்கள் தொகு

அருங்காட்சியகத்தின் நுழைவாயிலுக்கு அடுத்தபடியாக உள்ள விரிவான தரைத்தளத்தைக் கொண்டு அமைந்துள்ள முதன்மை மண்டபத்தில் அதிக எண்ணிக்கையிலான கல் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான சிற்பங்கள் வங்காளம், ஒரிசா மற்றும் பீகார் மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை ஆகும். சுடுமண் சிற்பங்கள் மற்றும் நாணயங்கள், முத்திரைகள், மணிகள் மற்றும் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பிற தொல்பொருட்களின் பொருள்களும் காணப்படுகின்றன. நுழைவாயிலின் வலதுபுறத்தில் காலவரிசைப்படி, கி.மு.முதல் நூற்றாண்டு முதல் சமீபத்திய காலங்கள் வரையிலான காலத்தைச் சேர்ந்த, காட்சிப்பொருள்கள் காட்சியில் உள்ளன. எவ்வாறாயினும், சிற்பங்களின் பெரும்பகுதி பாலா-சேனா காலத்திற்கு சொந்தமானவையாக உள்ளன. ஆரம்ப இடைக்காலத்தில் வங்காளம் மற்றும் பீகாரின் கலை வளர்ச்சியை இவற்றில் மூலமாகக் காணமுடியும். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Asutosh Museum of Indian Art". Museum. University of Calcutta. Archived from the original on 2007-02-04. பார்க்கப்பட்ட நாள் 2007-04-05.
  2. Goswami, Niranjan (2012). "Asutosh Museum of Indian Art". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Asutosh_Museum_of_Indian_Art. 
  3. 3.0 3.1 3.2 3.3 University of Calcutta Asutosh Museum of Art