அண்டார்க்டிக்கா கந்தகச் சுழற்சி நுண்ணுயிரி

அன்ட்டார்ட்டிக்கா கந்தகச் சுழற்சி நுண்ணுயிரி என்பது பூமியின் தென் பனிமுனையில் உள்ள அண்டார்க்டிக்கா கண்டத்தில் உள்ள டெய்லர் பனியாற்றில் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதுவகையான பாக்டீரியா வகை நுண்ணுயிரி. இவை வெண்பனி சூழ்ந்த அன்ட்டார்ட்டிக்காவில் டெய்லர் பனியாற்றின் அடியே இருந்து புறப்பட்டு எழுந்து வியப்பூட்டும் செம்பழுப்பு-சிவப்பு நிறத்தில் வழியும் குருதியருவி என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பனியாற்றின் அடியே 400 மீ ஆழத்தில் ஆக்சிசன் இல்லாத, ஒளிச்சேர்க்கை வசதி இல்லாத அடைபட்ட தனிச்சூழலில் கந்தகம், இரும்பு ஆகியவற்றின் துணையுடன் வாழும் புதுவகை பாக்டீரியாக்கள் ஆகும். இப் பாக்டீரியாக்கள் வெளியுறவு இல்லாமல் அடைபட்ட இச்சூழலை 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கும் கூடுதலான காலம் வாழிடமாகக் கொண்டு வாழ்ந்துள்ளதாக ஏப்ரல் 2009 இல் அறிவியலர் கண்டுபிடித்துள்ளார்கள்[1]

பனியாற்றுக்குக் கீழே 400 மீ ஆழத்தில் கடுங்குளிரான பகுதியில், ஒளிபுகமுடியாத இடத்தில், ஆக்சிசன் துணையும் இல்லாமல் இருக்கும் இத்தகு தனிச்சூழலில் மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகள் எவ்வாறு தன் இனம் பெருக்கி வாழும்படி அமைந்தது என்று ஆய்ந்து வருகின்றார்கள். இந்த வகையான நுண்ணுயிரிகள் இருந்ததை ஆர்வர்டு பல்கலைக்கழக அறிவியல் ஆய்வாளரான பெண்மனி சில் ஏ. மிக்குக்கி என்பாரும் அவருடைய துணை ஆய்வாளர்களும் கண்டுபிடித்து ஏப்ரல் 17, 2009 சயன்சு ஆய்விதழில் அறிவித்தனர்.

இப் பாக்டீரியாக்கள் மண்ணில் உள்ள வகைகளில் இருந்து வராமல், கடல்வாழ் இனங்களில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். மிகப் பழங்காலத்தில் இப்பொழுதுள்ள டெய்லர் பனியாற்றுக்குக் கீழே சிக்குண்ட சல்பேட்ட்டில் இருந்த கந்தகம் நிறைந்திருந்த கடல்நீரில் இவை வாழ்த்திருக்ககூடும் என்று கருதுகின்றனர். இரும்பு அணுக்கள் (Fe(III)) எதிர்மின்னியை பெறும் வகையில் வினையூக்கியாக தொழிற்பட்டு கந்தக சுழற்சி முறையில் இப் பாக்டீரியாக்கள் வாழ்ந்து வந்துள்ளன என்று கருதுகிறார்கள்

மேற்கோள்கள் தொகு

  1. Mikucki, Jill. A. et al., A Contemporary Microbially Maintained Subglacial Ferrous “Ocean”, SCIENCE VOL 324 17 APRIL 2009

வெளி இணைப்புகள் தொகு

டெய்லர் பனியாற்றில் குருதியருவிப் பகுதியில் காணப்பட்ட பாக்டீரியா பற்றி கனடிய அலைபரப்பு நிறுவனச் செய்தி