அண்ணாசாமி சேதுபதி

இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார்

அண்ணாசாமி சேதுபதி அல்லது முத்து விஜயரகுநாத சேதுபதி (பதவியில் 1812- மீண்டும் 1815 -1820) என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார் ஆவார். இவர் இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியாருக்கு அடுத்து ஜமீன்தார் பொறுப்புக்கு வந்தவராவார். இவர் இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியாரின் சுவிகாரப் புத்திரன் ஆவார்.

வாழ்கைக் குறிப்பு தொகு

இராணி சேதுபதி மங்கலேஸ்வரிநாச்சியாருக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால், அவரது கணவரான இராமசாமித் தேவரின் மருமகனான அண்ணாசாமி சேதுபதியை கி.பி. 1807-இல் சுவீகாரப் புத்திரனாக ஏற்றுக் கொண்டார். அண்ணாசாமி சிறுவனாக இருக்கும்போதே 1812 இல் இராணி மங்களேஸ்வரி நாச்சியார் காலமானதையடுத்து அண்ணாசாமி முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் ஜமீன்தார் பதவிக்கு வந்தார்

இவர் சிறு வயதினராக இருந்ததால், பிரதானி தியாகராஜ பிள்ளை நாட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் ஒரே மகளான சிவகாமி நாச்சியார் இராமநாதபுரம் சீமையைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டு வழக்குகளைத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் தீர்ப்பு சிவகாமி நாச்சியாருக்குச் சாதகமாய் அமைந்ததால் இராமநாதபுரம் ஜமீன்தாரி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கும்பெனியாருக்குச் செலுத்த வேண்டிய கப்பத் தொகையை வசூலித்து ஒழுங்காகச் செலுத்த முடியாததால் கும்பெனியார் ஜமீன்தாரியை கி.பி. 1815-ல் மீண்டும் அண்ணாசாமி சேதுபதியிடம் ஒப்படைத்தனர். இவர் 1820-இல் இறப்பதற்கு முன்னால் தனது மைத்துனர் இராமசாமித் தேவரைச் சுவீகார புத்திரனாக நியமித்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. அண்ணாசாமி சேதுபதி (கி.பி. 1812-1815) (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். பக். 96. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004058. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாசாமி_சேதுபதி&oldid=3581946" இருந்து மீள்விக்கப்பட்டது