அனகிலேத்துஸ் (திருத்தந்தை)

அனகிலேத்துஸ் (Anacletus) அல்லது கிலேத்துஸ் (Cletus) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாம் திருத்தந்தையாவார். அவருக்கு முன் திருத்தந்தையராக இருந்தவர்கள் முதலில் பேதுரு, அதன்பின் லைனஸ் ஆவர்[1]. இவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகக் கருதப்படுகிறார்

புனித அனகிலேத்துஸ்
Saint Anacletus
3ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்கிபி சுமார் 79
ஆட்சி முடிவுகிபி சுமார் 92
முன்னிருந்தவர்லைனஸ்
பின்வந்தவர்முதலாம் கிளமெண்ட்
பிற தகவல்கள்
இயற்பெயர்அனகிலேத்துஸ், அனென்கிலேத்துஸ் அல்லது கிலேத்துஸ்
பிறப்புதகவல் இல்லை
உரோமை, இத்தாலியா
இறப்புகிபி சுமார் 92
உரோமை, இத்தாலியா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாஏப்பிரல் 26

ஒருவரா, இருவரா?

தொகு

அனகிலேத்துஸ், கிலேத்துஸ் என்னும் இரு பெயர்கள் குறித்துநிற்பது ஒரே திருத்தந்தையையா அல்லது இருவரையா என்பது குறித்து ஐயம் நிலவி வந்துள்ளது. சில பண்டைய ஏடுகள் இரு பெயர்களும் இரு வேறு திருத்தந்தையரைக் குறிப்பதாகக் கூறுகின்றன. ஆனால் பெரும்பான்மையான ஏடுகள் தரும் சான்றின்படி, அனகிலேத்துஸ் என்னும் பெயரின் குறுகிய வடிவமே கிலேத்துஸ். எனவே அவ்விரு பெயர்களும் குறித்துநிற்பது ஒரே திருத்தந்தையைத் தான். அவர் புனித பேதுரு, லைனஸ் ஆகியோரின் வழியில் மூன்றாம் திருத்தந்தையாகப் பணியாற்றினார்.

கிலேத்துஸ் என்னும் கிரேக்கப் பெயருக்கு "அழைக்கப்பட்டவர்" என்று பொருள். அனகிலேத்துஸ் என்றால் "மீண்டும் அழைக்கப்பட்டவர்" எனப் பொருள்படும்.

பதவிக் காலம் பற்றிய செய்திகள்

தொகு

மரபுச் செய்திப்படி, அனகிலேத்துஸ் (கிலேத்துஸ்) உரோமையைச் சார்ந்தவர் என்றும் பன்னிரு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்றும் கூறப்படுகிறது. வத்திக்கான் வெளியிடுகின்ற "ஆண்டு ஏடு" (Annuario Pontificio), "முதல் இரு நூற்றாண்டுகளைப் பொறுத்தமட்டில், ஒரு குறிப்பிட்ட திருத்தந்தை எப்போது பதவி ஏற்றார், எப்போது அவரது பதவிக்காலம் முடிந்தது என்பது பற்றி உறுதியாகக் கூறுவது கடினம்" என்றுரைக்கிறது. அந்த ஏட்டின்படி, கிலேத்துஸ் (அதாவது, அனகிலேத்துஸ்) கி.பி. 80இலிருந்து 92 வரை பதவியிலிருந்தார். வேறு சில ஏடுகள் அப்பதவிக்காலம் 77-88 என்று கூறுகின்றன.

திருத்தந்தை அனகிலேத்துஸ் உரோமை மறைமாவட்டத்தை 25 பங்குத்தளங்களாகப் பிரித்தார் என்றும், ஒரு சிலரைக் குருக்களாகத் திருநிலைப்படுத்தினார் என்றும் சில பண்டைய ஏடுகள் கூறுகின்றன.

வத்திக்கானில் கல்லறை

தொகு

திருத்தந்தை அனகிலேத்துஸ் இன்றைய வத்திக்கான் நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பெருங்கோவிலில் அவருக்குமுன் பதவியிலிருந்த திருத்தந்தை லைனஸ் என்பவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். கிலேத்துஸ் என்னும் திருத்தந்தையின் பெயர் உரோமை வழிபாட்டு முறைத் திருப்பலியில் உள்ள நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் சேர்க்கப்பட்டுள்ளது.

திருவிழா

தொகு

கத்தோலிக்க திருச்சபையின் பழைய நாட்காட்டியாகிய "திரிதெந்தீன் நாட்காட்டியில்" ஏப்பிரல் 26ஆம் நாள் புனித கிலேத்துஸ் மற்றும் புனித மார்செல்லீனுஸ் ஆகியோரின் விழா கொண்டாடப் பணிக்கப்பட்டது. அந்நாட்காட்டியில் சூலை 13ஆம் நாள் புனித அனகிலேத்துஸ் திருவிழா அமைந்தது.

1960ஆம் ஆண்டில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் சூலை 13ஆம் நாளில் இருந்த விழாவை அகற்றினார். அதே நேரத்தில், ஏப்ரல் 26ஆம் நாள் புனித கிலேத்துஸ் விழாவாக அமையும் என்று பணித்தார். கிலேத்துஸ் என்னும் பெயர் உரோமை நற்கருணை வழிபாட்டு வேண்டுதலில் உள்ளது.

1969இலிருந்து ஏப்ரல் 26 விழா கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இல்லை. திருத்தந்தை அனகிலேத்துஸ் (கிலேத்துஸ்) எந்த நாளில் இறந்தார் என்பது உறுதியாகத் தெரியாவிட்டாலும், "உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) [2] என்னும் ஏடு அவர் ஏப்பிரல் 26ஆம் நாள் இறந்ததாகக் குறிபிடுகிறது.

ஆதாரங்கள்

தொகு

விக்கிமூலம்: இணைப்பு

தொகு

அனகிலேத்துஸ் - எழுத்துப் படையல்கள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

79–88
பின்னர்