அனிச்சைச் செயல்

அனிச்சைச் செயல் (Reflex) என்பது ஒருவரின் இச்சையோ, விருப்பமோ, சுய உணர்வோ இல்லாமல் ஒரு தூண்டுதலுக்கேற்ப தானாக நடைபெறும் செயல் ஆகும். ஒருவரின் சிந்தனையோ அதன் அடிப்படையில் ஏற்படும் முடிவோ எதுவுமே அனிச்சைச் செயலுக்குத் தேவைப்படுவதில்லை. தம்மையறியாமலே நொருவர் நிகழ்த்தும் செயலே அனிச்சைச் செயல்.

ஒருவர் வெறுங்காலால் நடக்கும்போது கூரிய முள்ளோ அல்லது கல்லோ குத்திவிடுகிறது. அவரையும் அறியாமல் காலை மடக்கி குத்திய பொருளை அகற்றுவார். கொசுவோ எறும்போ கடித்துவிட்டால் கை விரைந்து சென்று அவற்றை அகற்றி, கடித்தவிடத்தை தடவுகிறது. நெருப்புப்பொறி கைமீது பட்டவுடன் கை தானே வெடுக்கென்று இழுத்துக் கொள்கிது. இவையெல்லாம் அனிச்சைச் செயலுக்கு உதாரணங்களாகும்.

எந்த ஒரு செயலையும் சிந்தித்துப் பார்த்து, முடிவு எடுத்துச் செயல்படுத்தினால் அது இச்சைச் செயல் ஆகும். அதாவது நமது விருப்பத்தின் அடிப்படையில் நிகழும் செயலாகும். இச்சைச் செயலுக்கான கட்டளை பெரு மூளையிலிருந்து பிறப்பிக்கப்படுகிறது. ஆனால், அனிச்சைச் செயலுக்கான கட்டளை பெரு மூளையிலிருந்து பிறப்பிக்கப்படுவதில்லை. அது தண்டுவடப் பகுதியிலிருந்தும் மூளையில் மற்றப்பகுதியின் உதவியினாலும் பிறப்பிக்கப்படுகிறது.

நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென வெளிப்புறத்திலிருந்து ஏற்படும் நிகழ்வு உடலில் ஒருவிதத் தூண்டுதலாக அமைகிறது. அத்தூண்டுதல் உடனடியாக நரம்புச் செய்தியாக உருப்பெறுகிறது. இச்செய்தி உணர்வு நரம்புகள் மூலம் தண்டுவடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தண்டுவட நரம்பணுக்கள் இச்செய்தியைப் பெற்று, அதன் பொருளை உணர்ந்து, அதற்கேற்ற ஆணையை உடன் பிறப்பிக்கிறது. தண்டுவட நரம்பு இக்கட்டளையை உடலின் புறப்பகுதிக்கு எடுத்துச் செல்கிறது. இக்கட்டளையைப் புற உறுப்பு ஏற்று உரியமுறையில் செயல்படுத்துகிறது. இவ்வளவு செயல்களும் கண்மூடித் திறப்பதற்குள் மின்னல் வேகத்தில் விரைந்து நடந்து முடிந்து விடுகிறது.

முள் குத்தல் கடுமையாக இருப்பின் இச்செய்தி தண்டுவடக் கட்டளை நரம்பின் கிளை நரம்பு மூலம் மூளைப்பகுதியை அடைகிறது. அவ்வாறு சென்றடையும்போது நமக்கு வலி உணர்வு ஏற்படுகிறது. அனிச்சைச் செயலால் திடீரென ஏற்படும் பாதிப்பு மேலும் தொடராமல் தடுக்கப்படுகிறது.

அனிச்சைச் செயல்கள் இருவகைப்படும். சில அனிச்சைச் செயல்கள் எல்லோரிடமும் பொதுவாக அமைந்துள்ளது. முள் குத்தியவுடனே வெடுக்கென காலை எடுப்பது போன்ற செயல்கள். இவை பிறப்பு முதல் இறப்புவரை செயல்பட்டுக் கொண்டிருப்பனவாகும்.

மற்றொரு வகை அனிச்சைச் செயல்களும் உள்ளன. அவை அனுபவத்தினாலும் பழக்க வழக்கங்களாலும் உருவாக்கப்படுபவைகளாகும். இவை உடன் பிறவா அல்லது அனுபவ அனிச்சைச் செயல்கள் ஆகும். அனுபவம் இல்லாதவர்களிடம் இத்தகைய அனிச்சைச் செயல்கள் காணப்படுவதில்லை.

மனிதர்களுக்கோ அல்லது பிராணிகளுக்கோ உணவைப் பார்த்த மாத்திரத்திலேயே வாயில் உமிழ் நீர் சுரக்கும். இது இயல்பான உடன் பிறந்த அனிச்சைச் செயலாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மணியடித்து உணவு தரும் பழக்கத்தை ஒரு நாய்க்கு சில நாட்கள் தொடர்ந்து ஏற்படுத்தினால், அது அதற்குப் பழக்கமாக ஆகிவிடுகின்றது. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மணி அடித்த உடனேயே உணவைக் கண்ணால் காணாமலே நாய்க்கு வாயில் உமிழ் நீர் சுரக்கும், மணி அடித்தால் சோறு கிடைக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்திருப்பதே இதற்குக் காரணம். மணியோசை அதன் அனுபவம். இவ்வாறு பல முறை மணியடித்து உணவு வழங்காமல் விட்டு விட்டால் இந்த அனுபவ உணர்வும் அந்நாயை விட்டு நீங்கிவிடும். இதிலிருந்து இயல்பு அனிச்சைச் செயல் நிலையானது என்பதையும் அனுபவ அனிச்சைச் செயல் நிலையில்லாதது என்பதையும் உணர முடிகிறது.

நம் அன்றாட வாழ்வில் எண்ணற்ற அனிச்சைச் செயல்களைச் செய்கிறோம். சூழ்நிலை, தொடர்ச்சியான அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய அனிச்சைச் செயல்களைச் செய்கிறோம்.[1]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிச்சைச்_செயல்&oldid=3050422" இலிருந்து மீள்விக்கப்பட்டது