அனைத்துலக உயிர்ப்பல்வகைமை ஆண்டு

2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 2010 ஆம் ஆண்டை உயிர்ப்பல்வகைமை அனைத்துலக ஆண்டு என அறிவித்தது. 2010 உயிர்ப்பல்வகைமை இலக்குடன் பொருந்தக்கூடிய வகையில் இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகளின் 61 ஆவது அமர்வு வெளியிட்டது. உயிர்ப்பல்வகைமை பற்றியும், புவியில் வாழ்க்கைக்கு இதன் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2010 ஆம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

உயிர்ப்பல்வகைமை அனைத்துலக ஆண்டுக்கான சின்னம்

பின்னணி தொகு

2002 ஆம் ஆண்டில், உயிரியல் பல்வகைமை தொடர்பான சாசனத்தின் பங்காளிகளும், யோகானசுபர்க்கில் இடம்பெற்ற பேண்தகு வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டில் நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்களும் 2010 க்கான உயிர்ப்பல்வகைமை இலக்கு ஒன்றை ஏற்றுக்கொண்டனர். இந்த இலக்குடன் பொருந்தும் வகையில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 61 ஆவது அமர்வில் தீர்மானம் 61/203 நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே உயிர்ப்பல்வகைமைக்கான அனைத்துலக ஆண்டு அறிவிக்கப்பட்டது.

கனடாவின் மொன்ட்றீலில் தனது செயலகத்தைக் கொண்டுள்ள உயிரியல் பல்வகைமைக்கான சாசனம், உயிர்ப்பல்வகைமை அனைத்துலக ஆண்டுக்கான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தது. உயிரியல் பல்வகைமைக்கான சாசனம், உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாத்துப் பேண்தகு முறையில் பயன்படுத்துவதற்கும், இதன் பல்வகைப் பயன்களை நியாயமான அடிப்படையில் பகிர்ந்து கொள்வதற்குமாக 1992 ஆம் ஆண்டில் ரியோ டி செனரோவில் நிகழ்ந்த புவி உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆகும். இதில் 193 நாடுகள் பங்காளிகளாக உள்ளனர்.

நோக்கங்கள் தொகு

உயிர்ப்பல்வகைமை அனைத்துலக ஆண்டின் நோக்கங்கள் பின்வருமாறு:

  • உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதன் இன்றியமையாமை, உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் என்பன குறித்த மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதல்.
  • அரசுகளினாலும் பிற சமூக அமைப்புக்களினாலும் ஏற்கெனவே உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதில் செய்யப்பட்ட சாதனைகள் தொடர்பான விழிப்புணர்வைக் கூட்டுதல்.
  • உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களைக் குறைப்பதற்கான புதுமையான தீர்வுகளை முன்னெடுத்தல்.
  • உயிர்ப்பல்வகைமை இழப்பைத் தடுப்பதற்கு உடனடியான நடவடிக்கைகளை எடுக்கும்படி தனியாட்களையும், அமைப்புக்களையும், அரசுகளையும் ஊக்குவித்தல்.
  • 2010க்குப் பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பங்காளர்களிடையே பேச்சுக்களைத் தொடக்குதல்.

இவற்றையும் பார்க்கவும் தொகு