அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் (Annai Poopathi Tamilsk Kultursenter) என்பது நோர்வே நாட்டில் இயங்கி வரும் தமிழ்க் கல்வி மையமாகும். இது நாட்டின் பல பாகங்களிலுமாக 14 வளாகங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதி நினைவாக அவரது பெயரில் இக்கல்வி நிலையம் விளங்கி வருகிறது.
வரலாறு
தொகுநோர்வே நாட்டிலே புலம் பெயர் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழிக் கல்வியின் தேவையினையும், அதற்கான ஒரு கல்விக்கூடத்தின் அவசியத்தினையும் உணர்ந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தை நிறுவினர். இது 1992 பெப்ரவரி 1 இல் 22 மாணவர்களுடன் Linderud Vidregående Skole இல் அருட்திரு அருளானந்தம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்பகாலத்திலே தமிழ்மொழியோடு, சைவசமயம், கிறித்தவம், இழை, நடனம், மிருதங்கம் ஆகிய பாடங்கள் போதிக்கப்பட்டன. 22 மாணவர்கள் ஆறு மாதங்களில் 90 மாணவர்களாக வளர்ச்சி கண்டபோது இரு இல்லங்களுக்கிடையே இல்லவிளையாட்டுப் போட்டி சிறப்பாக நடாத்தப்பட்டது. 1994 இல் இல் ”மழலைப்பூக்கள்”, ”மழலைப்பூங்கா”எனும் இரு சிறுவர் பாடல் ஒலி இழைகள் வெளியிடப்பட்டன. 1995 இல் ஞாயிறு உதவிப்பாடத்திட்ட வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதில் பிற மொழி பேசும் மாணவர்களும் இணைந்துகொண்டனர். 1996 இல் ”தமிழ் அமுது” எனும் தமிழ்ப் பாடநூல் வெளியிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்து செல்லும் மாணவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
1999 ஆம் ஆண்டில் ”Rommen” என்ற இடத்தில் சொந்தமாக ஒரு கட்டடத் தொகுதி இம் மையத்திற்காக வாங்கப்பட்டது. 09.11.2000 இல் நகர முதல்வர் Per Ditlev Simonsen இம்மையத்தைத் திறந்து வைத்தார். 2001 இல் தமிழ்க் கலைக்கூடத்தின் புதிய கிளை வளாகமாக தொய்யன் வளாகம் உருவானது. 2002 இல் லோறன்ன்ஸ்கூக் வளாகம், திறமன் வளாகம் ஆரம்பிக்கப்பட்டன. 2012 இல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட மொட்டன்ஸ்றூட் வளாகம் ஸ்ரேன் புறோத்தன் நோர்வேயிய பாடசாலையில் ஆரம்பமானது.