அமீன்பூர் ஏரி

அமீன்பூர் ஏரி (Ameenpur lake) என்பது தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாதில் உள்ள ஒரு செயற்கை ஏரி ஆகும். இந்த ஏரியைத் தெலுங்கானா அரசு ‘இந்தியாவின் முதல் பாரம்பரிய பல்லுயிரி அமைவிடம்’ என்று அறிவித்துள்ளது.[1] ஐதராபாத் நகரின் மேற்கில் நவீனக் குடியிருப்புகளின் சூழலில், தொழிற்சாலைகளாலும், கிராமத்தாலும் சூழப்பட்ட இடத்தில் பரந்து விரிந்த இந்த ஏரி காணப்படுகிறது. கோல்கொண்டாவை கி.பி. 1550 முதல் 1580 வரையில் ஆண்ட இப்ராஹிம் குதுப் ஷா காலத்தில் அமீன்பூர் ஏரி உருவாக்கப்பட்டது. தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சும் நோக்கத்தில் இந்த ஏரி வெட்டப்பட்டது. இந்த ஏரி இப்போது இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பெத்த அமீன்பூர் (பெரிய அமீன்பூர்), சின்ன செருவு (சிறிய ஏரி) என்று அவை அழைக்கப்படுகின்றன. பெத்த அமீன்பூர் ஏரி, சின்ன செருவைவிட சற்றே உயரமான இடத்தில் இருக்கிறது. இப்ராஹிம் குதுப் ஷா காலத்தில் இந்த ஏரியின் மொத்தப் பரப்பளவு 300 ஏக்கருக்கும் மேலாக இருந்தது. இப்போது ஆக்கிரமிப்புகளால் ஏரியானது வெறும் 93 ஏக்கர் அளவிற்குச் சுருங்கிவிட்டது.

அமீன்பூர் ஏரியின் ஒரு தோற்றம்

பல்லுயிர் வளம்

தொகு

இந்த ஏரி இப்போதும் மீன் வளத்துடன், பட்டைத்தலை வாத்துகள், நீர்க்காகங்கள், திகிரிப் புள்கள், சாம்பல் நாரைகள் போன்ற ஏராளமான பறவைகளுடனும், கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற நஞ்சற்ற ஆசிய தண்ணீர் பாம்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு பலவிதமான பறவைகள் வருகின்றன. இதனால் இந்த ஏரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிரித்துள்ளது. பறவை நோக்கர்களும், ஒளிப்படக்காரர்களும் இந்த ஏரிக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் படகுப் போட்டிகள் நடக்கின்றன. இந்த ஏரிக்கு 2015 இல் 171 பறவை இனங்கள் வலசை வந்தன. 2016 இல் இந்த எண்ணிக்கை 186 ஆக உயர்ந்தது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Share Article (2 திசம்பர் 2016). "Ameenpur lake declared Biodiversity Heritage Site". கட்டுரை. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2017.
  2. செரீஷ் நானிசெட்டி (8 சூன் 2017). "அழகுபெறும் அமீன்பூர் ஏரி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீன்பூர்_ஏரி&oldid=3846510" இலிருந்து மீள்விக்கப்பட்டது