அரமகளிர்
அரமகளிர் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் உள்ளன. இவற்றைத் தொகுத்து எண்ணிப் பார்க்கும்போது இக்காலத்து வழிபடப்படும் கன்னிமார் தெய்வம் நினைவுக்கு வருகிறது.
- சூர் அரமகளிர்
- மலையருவியில் நீராடும் சூரர மகளிரை அடைய முடியாது. [1]
- முருகன் குடிகொண்டுள்ள சோலையில் சூர்-அரமகளிர் ஆடினர். பலராக ஒன்றுகூடி ஆடினர். அவர்கள் தம் கால்களில் சிலம்பு அணிந்திருந்தனல். அவர்கள் ஆடும்போது எழுந்த சிலம்பொலி சோலையில் எதிரொலித்தது. "வெற்றி கண்ட கோழிக்கொடி வாழிய" எனப் பாடிக்கொண்டே ஆடினர். [2]
- தலைவன் தலைவியின் கையைப் பற்றிக்கொண்டு சூர்-அரமகளிர் கோயிலின் முன் நின்றுகொண்டு "பிரியேன்" எனச் சூளுரை செய்தான். [3]
- வான் அரமகளிர்
- திருச்சீர் அலைவாய் முருகனின் 12 கைகளில் ஒன்று வானர மகளிர்க்கு மாலை சூட்டிக்கொண்டிருக்கும். [4]
- இமயத்து உச்சியில் வாழும் வான் அரமகளிர் அன்னப்பறவையை விரும்புவர். [5]
- வரை அரமகளிர்
- வரையர மகளிர் இளமைக் கோலத்தினர். மென்மை, அரும்புமுலை, செவ்வாய், சுணங்கழ்ழகு கொண்ட மார்பகம் ஆகியவற்றைக் கொண்ட பருவப்பெண் ஒருத்தி, குன்றக் குரவனின் மகள், வரையர மகளிர் போன்றவள் எனக் குறிப்பிடப்படுகிறாள். [6]
- வரையர மகளிர் அணியாக நின்றுகொண்டு தலைவியை 'நல்லவள்' 'நல்லவள்' என வாழ்த்தினார்களாம். (தலைவன் திரும்பவும் வந்தது தன்னை மணந்துகொள்ளாமையால்) தலைவனுக்கு மட்டும் தலைவி தீயவள் ஆகிவிட்டாளாம். இவ்வாறு கூறுகிறாள் ஒரு தலைவி. [7]
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
நேர் கொள் நெடு வரைக் கவாஅன் (25)
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே.(அகநானூறு 162} - ↑ 'கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி (40)
சூரரமகளிர் ஆடும் சோலை, (திருமுருகாற்றுப்படை) - ↑ நேர் இறை முன்கை பற்றி,
சூரரமகளிரோடு உற்ற சூளே. (குறுந்தொகை 153) - ↑ ஒரு கை (115)
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை
வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட; (திருமுருகாற்றுப்படை) - ↑ நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் (5)
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் (நற்றிணை 356) - ↑ குன்றக் குறவன் காதல் மட மகள்
வரையர மகளிர்ப் புரையும் சாயலள்;
ஐயள்; அரும்பிய முலையள்;
செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே.(ஐங்குறுநூறு 255) - ↑ வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
நல்லள் நல்லள் என்ப; (5)
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே! (ஐங்குறுநூறு 204)