பாகவதம்

(அருளாளதாசர் பாகவதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பகவான் என்றும் அறியப்படும் கண்ணனின் வரலாற்றுக் கதையைச் சொல்லும் இலக்கியம் பாகவதம் ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வைணவ சமய இலக்கியம் ஆகும்.

வியாசர் பாகவதம்

தொகு
  • வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்தது. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
  • நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
  • ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர்.

தமிழில் பாகவதம்

தொகு

பாகவதம் என்னும் பெயர்கொண்ட நூல்கள் தமிழில் இரண்டு உள்ளன. இவை வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்கள்.

தமிழில் இதனை 16 ஆம் நூற்றாண்டில் செவ்வைச் சூடுவார், அருளாள தாசர் என்னும் இரண்டு பெருமக்கள் ‘பாகவதம்’ என்னும் பெயரால் இருவேறு நூல்கள் செய்துள்ளனர்.

பாகவதம் தமிழில் தோன்றக் காரணம்
திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடின. கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம்.

செவ்வைச்சூடுவார் பாகவதம்

தொகு

இவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர்.

  • இவர் செய்த பாகவதம் நூலுக்கு வழங்கப்படும் பெயர்கள்:

ஸ்ரீபாகவத புராணம், இதிகாச-பாகவதம், விண்டு-பாகவதம் என்பன.

  • நூல்

இதில் திருமாலின் நான்கு அவதாரங்கள் 4973 பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இவை 12 (ஸ்)கந்தங்களாக உள்ளன.

  • காலம்

இதன் காலம் 1500-1525.

  • பெயரில் பிறழ்வு

வைணவ-பண்டிதர் கோமளவல்லிபுரம் இராசகோபால பிள்ளை 1881-ல் இதனை அச்சிட்டார். அதில் இந்த நூலின் ஆசிரியர் குடந்தை ஆரியப்பப்பிள்ளை எனக் குறிப்பிட்டுள்ளார். இது பிறழ உணர்ந்த செய்தி. [1] வடமொழியில் கண்ணபிரான் கதை கூறும் 7 புராணங்களில் முதல் இரண்டு மட்டுமே தமிழில் செய்யப்பட்டுள்ளன என்பது ஆன்றோர் கருத்து. தமிழப் பல்கலைக்கழகத்தில் மூல ஓலைச்சுவடி உள்ளது.

அருளாளதாசர் பாகவதம்

தொகு
  • ஆசிரியர்

இவர் நெல்லிநகரின் தலைவர். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார் எனவும் அழைப்பர். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச் செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப் பெற்றிருந்தமையாலும் இவரை அருளாள தாசர் எனச் சிறப்பிக்கப் பெற்றிருந்தார்

  • ஊர்

பிறந்த ஊர் நெல்லிநகர். வாழ்ந்த ஊர் திருவரங்கம். இங்கு இவர் வரதராச ஐயங்கார் எனச் சிறப்பிக்கப்பட்டார்.

  • நூலின் பெயர்

இவர் செய்த பாகவதமானது மகாபாகவதம், புராண பாகவதம், வாசுதேவ-கதை, என்றும் சொல்லப்படுகிறது. இது 130 படலம், 9147 பாடல்கள் கொண்டது.

  • காலம் 1543
  • நூலமைதி

அருளாளதாசர் செய்த பாகவதப் புராணத்தில் 130 சருக்கங்களும், 9147 பாடல்களும் உள்ளன. இது வடமொழியிலுள்ள 18,000 சுலோகங்கள் கொண்ட பாகவதத்தில் சொல்லப்பட்ட செய்தி என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று கூறுகிறது. .

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள் நூல்கள்

தொகு
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. சுந்தரபாண்டியம் என்னும் புராணத்தைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றில் வரும் ‘மன்னாவலர் பரவும் வாயல் அனதாரியப்பன்’ என்பதை ‘மன்னாவலர் புடைசூழ் வாழ்குடந்தை மாரியப்பன்’ எனப் பிறழப் படித்ததே என்கிறார் மு. அருணாசலம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகவதம்&oldid=3950193" இலிருந்து மீள்விக்கப்பட்டது