அறிவித்தலும் விட்டுக்கொடுத்தலும்
துடுப்பாட்டத்தில் ஒரு அணித்தலைவர் தங்கள் அணியின் ஆட்டப்பகுதியை முடித்துக்கொள்வதாக அறிவிப்பது அறிவித்தல் (declaration) என்றும் தங்கள் அணியின் ஆட்டப்பகுதியை விளையாட மறுப்பது விட்டுக்கொடுத்தல் (forefeiture) என்றும் அழைக்கப்படுகின்றது. இவை துடுப்பாட்ட விதி 15இன் மூலம் வரையறுக்கப்படுகின்றன.[1] இந்த விதி வரையிட்ட நிறைவுகள் போட்டிகளுக்குப் பொருந்தாது.
அறிவித்தல்
தொகுஒருவேளை ஒரு அணித்தலைவர் இந்த ஆட்டப்பகுதியில் தங்கள் அணி எடுத்த ஓட்டங்கள் வெற்றி பெறப் போதுமானது என்று கருதினால் அறிவிப்பார். இதன்மூலம் அந்த அணியின் ஆட்டப்பகுதி முடிவடையும். ஒருவேளை அதிக ஓட்டங்கள் எடுத்த பிறகும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தால் போட்டி வெற்றி/தோல்வியின்றி முடிய வாய்ப்புள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க அறிவிப்பு உதவுகிறது. இதுதவிர வேறுசில உத்திகளுக்காகவும் அறிவிப்பு பயன்படுகிறது.
விட்டுக்கொடுத்தல்
தொகுஒரு அணித்தலைவர் தங்கள் ஆட்டப்பகுதி தொடங்குவதற்கு முன்பு விட்டுக்கொடுக்க முடிவெடுக்கலாம். தவிர ஒரு அணி தங்கள் ஆட்டப்பகுதியை விளையாட மறுத்தால் அது விட்டுக்கொடுத்ததாகக் கருதப்படும்.
தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஒரு அணி விருப்பத்துடன் தங்கள் ஆட்டப்பகுதியை விட்டுக்கொடுத்த நிகழ்வு ஒருமுறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. 18 சனவரி 2000இல் தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் பார்க்கில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் இறுதித் தேர்வுப் போட்டி நடைபெற்றது. இத்தொடரில் தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது (2 போட்டிகள் வெற்றி/தோல்வியின்றி முடிந்தன). ஐந்தாவது போட்டியின் முதல் நாளில் தென்னாப்பிரிக்கா 6 இழப்புகளுக்கு 156 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்த 3 நாட்களும் மழை காரணமாக போட்டி விளையாடப்படவில்லை. இறுதியாக 1 நாள் மட்டுமே மீதமிருந்ததால் போட்டி வெற்றி/தோல்வியின்றி முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்க அணித்தலைவர் ஹான்ஸி குரொன்யே இங்கிலாந்து அணித்தலைவர் நாசர் ஹுசைனுடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டார். அதன்படி முதல் ஆட்டப்பகுதியில் 248 எடுத்தவுடன் தென்னாப்பிரிக்க அணி அறிவித்தது. பிறகு இங்கிலாந்து தனது முதல் ஆட்டப்பகுதியையும் தென்னாப்பிரிக்கா தனது 2வது ஆட்டப்பகுதியையும் விட்டுக்கொடுப்பதாக அறிவித்தன. இதன்மூலம் இங்கிலாந்து அணி தங்கள் 2வது ஆட்டப்பகுதியில் 250 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. அன்றைய துடுப்பாட்ட விதிகளின் படி ஒரு அணி தங்கள் 2வது ஆட்டப்பகுதியை மட்டுமே விட்டுக்கொடுக்க இயலும்.[2] இதனால் இங்கிலாந்து அணி தங்கள் முதல் ஆட்டப்பகுதியை 0 பந்துகளில் 0 இழப்புகளுக்கு 0 ஓட்டங்கள் என்ற நிலையில் அறிவித்ததாகக் கருதப்பட்டது. 2வது ஆட்டப்பகுதியில் இங்கிலாந்து அணி 8 இழப்புகளுக்கு 251 ஓட்டங்கள் எடுத்து 2 இழப்புகளால் வெற்றி பெற்றது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "{% DocumentName %} Law | MCC". www.lords.org. Retrieved 2019-09-08.
- ↑ MCC (1980). "Law 14 – Declarations". Laws of Cricket 1980 Code. Cricinfo. Retrieved 2011-02-20.
- ↑ "Scorecard of 2000 RSA vs ENG Centurion Match in which Cronje & Hussein forfeited innings". Aus.cricinfo.com. Retrieved 2013-08-09.