அறுவகைப் பெயர்ச்சொற்கள்

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.[1][2][3]

அறுவகைப் பெயர்ச்சொற்கள்:

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. குணப்பெயர் (பண்புப்பெயர்)
  6. தொழிற்பெயர்

பொருட்பெயர்

தொகு

பொருளைக்குறிக்கும் பெயர் பொருட்பெயர். இது உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் என இருவகைப்படும்.

எடுத்துக்காட்டு:

  • உயிருள்ள பொருட்களைக் குறிக்கும் பெயர்கள்:
குமரன், தென்னை, செம்பருத்தி, வெள்ளாடு...முதலியன.
  • உயிரற்ற பொருட்களைக் குறிக்கும் பெயர்கள்:
நாற்காலி, அடுப்பு, தட்டு, மண், நீர், காற்று...முதலியன.

இடப்பெயர்

தொகு

ஓரிடத்தைக் குறிப்பது இடப்பெயர்.

எடுத்துக்காட்டு:

வீடு, தெரு, பள்ளி, கோவில், காடு, மலை...முதலியன.

காலப்பெயர்

தொகு

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர்.

எடுத்துக்காட்டு:

நொடி, மணி, கிழமை, வாரம், ஆண்டு...முதலியன.

சினைப்பெயர்

தொகு

முழுமையான ஒன்றின் பகுதிகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர். சினை என்றால் உறுப்பு என்று பொருள்.

எடுத்துக்காட்டு:

கண், விரல், இலை, கனி, விதை, கொம்பு...முதலியன.

குணப்பெயர்

தொகு

நிறம், அளவு, சுவை, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் பெயர் குணப்பெயர். இது பண்புகளைக் குறிப்பதால் பண்புப்பெயர் எனவும் வழங்கப்படும்.

எடுத்துக்காட்டு:

கருமை, வெண்மை, இனிப்பு, உவர்ப்பு, அன்பு, வட்டம், சதுரம், ...முதலியன.

தொழிற்பெயர்

தொகு

செய்யும் தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர்.

எடுத்துக்காட்டு:

எழுதுதல், ஆடல், படித்தல், கற்பித்தல்...முதலியன


மேற்கோள்கள்

தொகு
  1. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (2015). தமிழ்நாடு அரசுப் பாடநூல் ,ஏழாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் ,தமிழ். இலக்கணம்: தமிழ்நாடு அரசு , பள்ளிக்கல்வித் துறை. pp. 32, 33, 34.
  2. சொல்வகை-பெயர்ச்சொல், தமிழிணையக் கல்விக்கழகம்
  3. அறுவகைப் பெயர் சொற்கள், கூகுள் புக்சு