அல்டா கார்போர்க்
அல்டா கார்போர்க் (Hulda Garborg) ( இயற்பெயர் :பெர்கர்சன் ) (பிறப்பு: 1862 பிப்ரவரி 22 & இறப்பு: 1934 நவம்பர் 5) இவர் ஓர் நோர்வே எழுத்தாளரும், புதின ஆசிரியரும், நாடக ஆசிரியரும், கவிஞரும், நாட்டுப்புற நடனக் கலைஞரும் மற்றும் நாடக பயிற்றுவிப்பாளருமாவார். இவர் ஆர்னே கார்போர்க் என்பவரை மணந்தார். இவர் புனாட் எனப்படும் நாட்டுப்புற உடைகளின் பாரம்பரியத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக மிகவும் பிரபலமானவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅல்டா பெர்கெர்சன் கெட்மார்க்கின் எசுடேஞ்சில் உள்ள சாசுடாட் என்ற பண்ணையில் வழக்கறிஞர் கிறிஸ்டியன் ஃபிரடெரிக் பெர்கெர்சன் (1829-1873) மற்றும் அவரது மனைவி மேரி பெட்ரின் ஓல்சன் (1835-1888) ஆகியோருக்குப் பிறந்தார்.[1] இவருக்கு மார்த்தா மற்றும் சோஃபி என்ற இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். அல்டாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது இவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். மேலும் இவர் தனது தாயுடன் அமார் என்ற இடத்திற்குச் சென்றார். அல்டாவுக்கு பன்னிரண்டு வயதாக இருந்தபோது இவரது குடும்பம் பின்னர் கிறிஸ்டியானியாவுக்குச் சென்றது. இவர் தனது பதினேழு வயதிலிருந்தே ஒரு கடையில் வேலை செய்யத் தொடங்கி, குடும்பத்திற்கு உதவினார். இந்த காலகட்டத்தில் இவர் கிறிஸ்டியானியாவின் இளைஞர்களிடையே ஒரு தீவிர மைய நபராக இருந்தார். 1887 இல் இவர் எழுத்தாளர் ஆர்னே கார்போர்க் என்பவரை மணந்தார். [2]
கலாச்சாரப் பணி
தொகுகார்போர்க் நாடகம் மற்றும் நாட்டுப்புற நடனம், சமையல், புனாட் என்ற உடை பாரம்பரியம் மற்றும் பெண்கள் உரிமைகள் போன்ற துறைகளில் முன்னோடியாக இருந்தார்.
இவர் பாரம்பரிய சமையல் பற்றிய கட்டுரைகளை நீநொர்ஸ்க் என்ற செய்தித்தாள் டென் 17 டி மாயில் வெளியிட்டார். இந்த கட்டுரைகள் பின்னர் ஹைம்ஸ்டெல் (1899) என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டன.
இவர் ஒரு பேச்சாளர் மற்றும் கட்டுரை எழுத்தாளராக சமகால விவாதங்களில் பங்கேற்றார். சின்க் ஓக் செக்ன், எட்டா, சாம்டிடென், டென் 17 டி மை, டாக் பிளேட் மற்றும் வெர்டென்ஸ் கேங் போன்ற பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் இவர் தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதினார். இந்தப் புத்தகங்கள் பெண்களின் உரிமைகள் பற்றிய விவாதத்திற்கு பங்களித்தன.
இவரது முதல் புதினமான எட் ஃப்ரிட் ஃபோல்ட் 1892 இல் அநாமதேயமாக வெளியிடப்பட்டது. இவரது புதினமான எலி (1912) 1915இல் இடச்சு மொழியிலும், 1916 இல் சுவீடிய மொழியிலும், இடச்சுமொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மற்ற புதினங்கள் மோட் சோலன் (1915), காடென். ப்ரெஸ்டெடெட்டரென் எல்ஸ் மேரி லிண்டஸ் ஆப்டெக்னெல்சர் (1916), மென்ஸ் டேன்சன் கார் (1920), ஐ ஹல்ட்ரெஸ்காக் (1922), நார் ஹெகன் ப்ளோம்ஸ்ட்ரர் (1923), கிரகூபன் (1925), ட்ரோல்ஹைமன் (1927), ஹெலன்ஸ் வரலாறு (1929) மற்றும் ஹில்ட்ரிங் (1931) . கோர்ன்மோ (1930) மற்றும் சிம்ரா (1934) ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். [1]
இவர் தனது கணவர் ஆர்னே கார்போர்க்கின் நாட்குறிப்பினை திருத்தியுள்ளார். இது அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்டது. இவரது சொந்த நாட்குறிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்கள் 1962 இல் டாக்போக் 1903-1914 என வெளியிடப்பட்டன.
அல்டா கார்போர்க் அரசியலிலும் பங்கேற்றார். அஸ்கர் நகராட்சி மன்றத்தில் லிபரல் இடது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1932 ஆம் ஆண்டில் செயின்ட் ஓலாவின் ராயல் நோர்வே ஆணையின் முதல் வகுப்பான நைட்டாக நியமிக்கப்பட்டார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Døssland, Atle (2001). "Hulda Garborg". Norsk biografisk leksikon 3. Ed. Helle, Knut. Oslo: Kunnskapsforlaget. அணுகப்பட்டது 19 March 2009.
- ↑ "Hulda Garborg". Store norske leksikon. (2007). Ed. Henriksen, Petter. Oslo: Kunnskapsforlaget. அணுகப்பட்டது 19 March 2009.
வெளி இணைப்புகள்
தொகு- (in நார்வீஜிய மொழி) Hulda Garborg
- (Norwegian) Garborgsenteret