அல்-க்வாரிஸ்மி

முகமது இபின் மூசா அல்-க்வாரிஸ்மி கி.பி.750-இல் பாக்தாத் நகரில் பிறந்தார். கி.பி.850ல் காலமானார். இவர் கணிதவியல், புவியியல் மற்றும் வானியல் அறிஞர். 'அல்ஜீப்ரா' என்று அழைக்கப்படும் இயற்கணிதத்தின் தந்தை. இவர் பயன்படுத்திய 'அல்-ஜபார்' என்ற அரேபியச் சொல்லிலிருந்தே 'அல்-ஜீப்ரா' என்பது உருவானது. கணிதம் மற்றும் கணிப் பொறியியலில் பயன்படும் 'அல்காரிதம்' என்ற சொல், அல்-க்வாரிஸ்மி பெயரின் லத்தீன் மொழிபெயர்ப்பில் இருந்து உருவானதாகும்.

இவர் எழுதிய 'முழுமைப்படுத்துதல் மற்றும் சமப்படுத்துதல் நூல்' என்பதில் 'லீனியர்' மற்றும் 'குவாட்ரடிக் சமன்பாடுகளை' தீர்ப்பதற்கான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இவர் பயன்படுத்திய, 'ஒழுங்குமுறைப்படி அமைந்த, தர்க்கரீதியான வழிமுறைகளே' அல்ஜீப்ரா என்ற தனிப்பிரிவின் வளர்ச்சிக்கு வழிவகுத்தன.

இவர் எழுதிய இரண்டாவது நூலின் லத்தீன் மொழிபெயர்ப்பான, 'அல்காரிதமி டீ நியுமரோ இண்டோரம்' மூலம்தான் எண்முறை [இந்திய எண்கள்] ஐரோப்பாவுக்கு அறிமுகமாகியது. இடமுறைப்படி எண் மதிப்பைக் குறிக்கும் முறையும் இந்த நூலின் மூலமே ஐரோப்பாவிற்கு அறிமுகம் ஆகியது.

டாலமி என்ற அறிஞர் எழுதிய நூலை மேம்படுத்தி திருத்தப்பட்ட விவரங்களுடன் அல்-க்வாஸ்மி எழுதிய, 'கிதாப் சுரத் அல்-அர்டு' [தி இமேஜ் ஆஃப் எர்த்] என்பது மிகச் சிறந்த புவியியல் நூல். பாக்தாத் நகரில் வாழ்ந்த அல்-க்வாரிஸ்மி பற்றி போதுமான விவரங்கள் கிடைக்கவில்லை. இவரது பிறப்பு,இறப்பு பற்றிய விவரங்கள் தோராயமானவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-க்வாரிஸ்மி&oldid=2716472" இலிருந்து மீள்விக்கப்பட்டது