அல் கபோன்

அமெரிக்க குற்ற குழுத் தலைவர் மற்றும் தொழிலதிபர்

அல் கபோன் (Al Capone, 17 ஜனவரி 1899 – 25 ஜனவரி 1947) என்கிற அல்ஃ‌போன்ஸ் கபோன் ஒரு அமெரிக்க குற்றக் குழுத் தலைவர் (gangster) மற்றும் கடத்தல்காரர். இவர் ஓர் இத்தாலிய-அமெரிக்கர் ஆவார். இவர் பெருமளவில் மதுவைக் கடத்துதல் மற்றும் பதுக்கிவைத்தலில் ஈடுபட்டார். மேலும் விபசாரம் போன்ற மற்ற சட்டவிரோரதமான செயல்பாடுகளிலும் ஈடுபட்டார். இவற்றை சிகாகோ நகரில் 1920 முதல் 1931 வரை செய்தார்.

இவர் புரூக்ளின், நியூ யார்க் நகரில் ஓர் இத்தாலிய குடும்பத்தில் பிறந்தார். 14 வயதில் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து சட்ட விரோத செயல்கள் செய்யும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பல சட்ட விரோத காரியங்களை செய்ய ஆரம்பித்தார்[1]. தன்னுடைய இருபதுகளில் இவர் சிகாகோ நகருக்கு இடம் பெயர்ந்தார். அங்கு மதுவிலக்கு காலத்தில் சட்ட விரோதமாக மதுவைக் கடத்தி விற்று பெரும் பணம் பண்ணும் நோக்கில் சென்றார். அங்கு, மதுவைக் கடத்துவதைத் தவிர்த்து மற்ற சட்டவிரோத செயல்களான அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, விபசாரம் போன்ற செயல்களிலும் ஈடுபட்டார். இத்தகைய தவறான செயல்கள் செய்தும், அந்நகரில் இவர் முக்கிய நபராக உருவெடுத்தார். சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஈட்டிய பணத்தை பெருமளவில் தொண்டு நிறுவனங்களுக்கு கொடை அளித்தார். அதனால், பலரால் நவீன யுக "ராபின்ஹூட்"-ஆக தோற்றமளித்தார்[2].

ஆயினும் புனிதர் வேலண்டைன் நாளில் நடந்த படுகொலையில் அவரது எதிராளிகள் ஏழு பேரை கொன்றது அம்பலமானதும் அவரது பேரும் புகழும் பலத்த அடி வாங்கியது. பின்னர் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் அல்கட்ராஸ் சிறையிலும் இருந்துள்ளார். அவரது கடைசி காலத்தில், அவரது மன மற்றும் உடல் நலம் பெரும் பாதிப்புக்குள்ளானது. நரம்பு மண்டல கிரந்தி நோயால் (neurosyphilis) அவர் பாதிக்கப்பட்டதே நலக் குறைவுக்கு காரணமாகும். 1947 சனவரி 25 அன்று வலிப்பு வந்த பின்னர் மாரடைப்பால் காலமானார்.

உசாத்துணைகள்

தொகு
  1. "Notorious Crime Files: Al Capone". The Biography Channel. Biography.com. பார்க்கப்பட்ட நாள் 2010-11-12.
  2. "Al Capone at Alcatraz". Ocean View Publishing. 1992.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_கபோன்&oldid=3375846" இலிருந்து மீள்விக்கப்பட்டது