அ. சேப்பன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டாக்டர்.அ. சேப்பன் (17 ஆகத்து 1937 -31 ஆகத்து 2017) என்பவர் இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர், இதழாளர் மற்றும் தமிழ்நாட்டின் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ஆவார். அண்ணல் அம்பேத்கர் திருச்சபை என்ற ஓர் அமைப்பை உருவாக்கியவர்.
பிறப்பும் படிப்பும்
தொகுசேப்பன் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள ஆயக்காரன்புலம் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் சிங்கப்பூர் தோட்டத் தொழிலாளர் உரிமைப் போராளி அஞ்சப்பன், தங்கம்மாள் ஆவர். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த சேப்பன் 1975 ஆம் ஆண்டில் தமது மருத்துவக் கல்வியை முடித்தார். 1976 முதல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தனியாக மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். காங்கிரசில் சேர்ந்து லீக் முனுசாமி என்பவருடன் செயல்பட்டார். அம்பேத்கர் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட சேப்பன், இந்தியக் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். இந்தியக் குடியரசுக் கட்சியின் சென்னை மாவட்டத் தலைவராகப் பணியாற்றி, பின்னர் மாநிலத் தலைவர் ஆனார்.
இதழ்ப் பணிகள்
தொகு1981ஆம் ஆண்டில் உணர்வு என்ற மாதம் இரு முறை இதழைத் தொடங்கி பல ஆண்டுகள் நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டோரின் துன்பங்கள், சிக்கல்கள் முதலியவை பற்றிய செய்திகள் அந்த இதழில் இடம் பெற்றன. அம்பேத்கர் சிந்தனைகள் பற்றிய கட்டுரைகள், தலித்துகள் மீதான வன்முறைப் பதிவுகள், உள்ளூர் அளவிலான போராட்டங்கள், கட்சிக் கூட்டச் சொற்பொழிவுகளின் சாரம், தீர்மானங்கள், கவிதைகள் போன்றன உணர்வு இதழில் இடம்பெற்றன.
போராட்டங்கள்
தொகு1982 ஆம் ஆண்டு அரக்கோணம் அருகே உள்ள மின்னல் என்ற சிற்றூரில், சாதி மோதலில் நாட்டாண்மை சுப்பிரமணி என்பவர் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நடைப் பயணமொன்றை சேப்பனும் சக்திதாசன் என்பவரும் இணைந்து அரக்கோணம் தொடங்கி சென்னை கோட்டை வரை மார்ச் டூ மெட்ராஸ் என்று நடைபயணம் மேற்கொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து கட்சிப் பணியாற்றினார். பட்டியல் இன மக்களின் விடுதலை இயக்கத்தை ஒருங்கிணைத்தார். தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் கூட்டு அரசியல் நடவடிக்கை என்ற இயக்கத்தினை அல்லாஹ் பழனி பாபா வுடன் இனைந்து ஆரம்பித்தார். அதன் விளைவாக உயர்வகுப்பினரை போல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்துகொண்ட இஸ்லாமியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்கள். ஆதிதிராவிடர்கள் எங்கள் பூர்வீக உறவு என்று பழனிபாபா அறிவித்தார். பழனிபாபாவிடம் தனது உரிமை இதழை ஒப்படைத்தார் டாக்டர் சேப்பன். இப்போது அது இஸ்லாமிய இயக்க இதழாக வெளிவருகிறது
இதர செயல்பாடுகள்
தொகுதிருவள்ளுவர் உலகத் தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திச் செயல்பட்டார் 1981 இல் புத்த மதத்தைத் தழுவினார். 12 நூல்களை எழுதினார். அவற்றில் ‘விடுதலை பெறத் துடிப்பதேன்’, ‘பூரண விடுதலைப் பெற இஸ்லாம் மார்க்கமே’, ‘மண்டல கமிஷன் மீதான தீர்ப்பின் ஆபத்து’ ஆகியன அடங்கும்.
நட்புத் தலைவர்கள்
தொகுடாக்டர் சேப்பன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பிரமுகர்களுடன் நட்பு பாராட்டி வந்தார். இது குறித்து 'மறக்க முடியாத மாமனிதர்கள்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது முதல் தலைவராக கருப்பம்புலம் பி. வி. தேவர் வழியாக அவரது நட்பு மூலமாக தான் தனதுஅரசியல் பயணம் துவங்கியது என்று கூறியுள்ளார்.
மறைவு
தொகுஉடல் நலக்குறைவு காரணமாக 2017 ஆகஸ்ட் 31 ஆம் நாள் உயிரிழந்தார். அவரது உடல் கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்துவாகப் பிறந்து, பவுத்தம் தழுவினார். இஸ்லாமிய பெருமக்களுடன் இயக்கம் நடத்தி, இஸ்லாமிய தலித் கூட்டு எழுச்சியை ஏற்படுத்தினார். இறுதியில், கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
உசாத்துணை
தொகு- 'காலச்சுவடு' மாத இதழ், அக்டோபர் 2017 இதழ்