அ. மார்க்ஸ்

தமிழ்நாட்டு பேராசிரியர், குமுக செயற்பாட்டாளர்

அ. மார்க்ஸ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். மனித உரிமைப் பணிகளுக்காக களப்பணி ஆற்றி வருபவர். இலக்கியம், சமயம், அரச நிறுவனம், தேசியம் என ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியலை தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கவனப்படுத்தி வருபவர்.

அ.மார்க்ஸ்
தொழில்பேராசிரியர்
மொழிதமிழ்
தேசியம்இந்தியா
காலம்1949 - இன்று
இணையதளம்
http://www.amarx.in

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அந்தோணிசாமி,[1] அமலோற்பவ மேரி ஆகியோருக்கு மூத்த மகனாக மார்க்ஸ் பிறந்தார். தந்தை மலேசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களுள் ஒருவர். தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்த பின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர். தந்தையின் மூலமாக மார்க்சிற்கு சிறுவயது முதலே இடதுசாரி அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1975 நெருக்கடி கால அத்துமீறல்களின் விளைவாக தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்பு ”மக்கள் யுத்தக் குழு” என்னும் நக்சல்பாரி அமைப்பிலும் இணைந்து செயல்பட்டார். கட்சிகளின் இறுக்கமான நடைமுறைகள், புதியனவற்றிற்கு முகம் கொடுக்க இயலாத கொள்கைவாதங்கள் ஆகியவற்றுக்குள் பயணிக்க முடியாமல் அவற்றைவிட்டு விலகித் தனித்து இயங்கத் தொடங்கினார். கட்சிக்குள் இல்லாவிட்டாலும் இடதுசாரி அமைப்புகள் தலித்கள், சிறுபான்மையோர் முதலான ஒடுக்கப்படும் மக்களுக்கான இயக்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இலக்கிய அரசியல் கட்டுரைகள் தொகு

அடிப்படையில் தன்னை ஒரு மார்க்சியவாதி என்று சொல்லிக்கொண்டாலும் பெரியாரியம், காந்தியம், அம்பேத்கரியம், பின்நவீனச் சிந்தனைகள் எனப் பலதரப்பட்ட பார்வைகளையும் உள்ளடக்கியதாகவே மார்க்சின் இலக்கிய – அரசியல் பார்வைகள் அமைந்துள்ளன. தனக்கு முந்திய மார்க்ஸிய இலக்கிய விமர்சகர்களைப் போல அல்லாமல் இலக்கிய நவீனத்துவத்தை ஏற்றும் இலக்கியத் திருஉரு வழிபாட்டைக் கைவிட்டும் பல இலக்கியப் புனிதங்களை தன் எழுத்துகளின் மூலம் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். பின்நவீனத்துவத்தை மெய்யியல் வரலாற்றினூடாக தொட்டுக்காட்டினார். தமிழில் ‘விளிம்பு நிலை ஆய்வுகளை’ (subaltern studies) அறிமுகப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சிற்றிலக்கியங்கள், தமிழில் அச்சுப் பண்பாடு என நூல்களாக வெளிவந்தவை தவிர நாட்டுப்புறவியல், பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகியன குறித்த அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தும் கூரிய அவதானங்கள் முக்கியமானவை. கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், கே. டானியல், கரிச்சான் குஞ்சு, மௌனி, எம். வி. வெங்கட்ராம் முதலான சமகால எழுத்தாளர்கள் பற்றிய இவரது ஆய்வுகள் தமிழ்ச்சூழலில் விரிவாக விவாதிக்கப்பட்டவை. கல்வி மற்றும் மருத்துவக் கொள்கைகள் பற்றிய அவரது நூல்கள் பெரிய அளவில் தமிழ்ச் சூழலில் வாசிக்கப்பட்டவை. சமூக ஊடகங்களின் ஊடாக அவர் வெளிப்படுத்துகிற சமகாலப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களும் முக்கியமானவை.

ஆசிரிய இயக்கப் பணிகள் தொகு

37 ஆண்டுகள் அரசுக்கல்லூரிகளில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்திலும் தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றத்திலும் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்தவர். ஆசிரியர் சங்கத்தில் தீவிரப் பணியாற்றி பல்வேறு ஆசிரியப் போராட்டங்களை நடத்தியதால் 1986 – 96 காலகட்டத்தில் பத்து ஆண்டுகளில் ஆறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அரசு ஊழியர் விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு ஊதிய உயர்வு வெட்டுத் (Increment Cut) தண்டனையும் அளிக்கப்பட்டது. போராட்டங்களில் கலந்து கொண்டு சக ஆசிரியர் சங்கத்தினருடன் மும்முறை சிறை ஏகிய அனுபவங்களும் உண்டு.

மனித உரிமைப் பணிகள் தொகு

அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியோ பொருளாதார ஆதாரமோ இல்லாமல் சுயேச்சையாகவே மனித உரிமை அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். ”மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்” (People’s Union for Human Rights) என்பது இவரது அமைப்பு. 2013 இல் இருந்து “மனித உரிமை அமைப்புகளின் தேசியக்கூட்டமைப்பு” (National Confideration of Human Rights Organisation) என்ற அமைப்பின் தேசியத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சாதிக்கலவரங்கள், சிறுபான்மையினர், தலித்கள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழகத்திலும் இந்திய அளவிலும் குழுக்களை அமைத்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் பக்க நியாயங்களே போதுமானது என்ற அடிப்படையில் எதிர் அணியின் மீது குற்றங்களை இட்டுக்கட்டுவது அல்லது அவர்கள் பக்க உண்மைகளை மூடிமறைப்பது என்பதாக இல்லாமல் நடுநிலையோடு இருபக்க உண்மைகளையும் வெளிக்கொணருவதால் தமிழக அளவில் இவரது அமைப்பு ஒரு நம்பகத்தன்மையைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நூல்கள் தொகு

  1. புத்தம் சரணம், 2004

மேற்கோள்கள் தொகு

  1. Correspondent, Vikatan. ""மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!" - அ.மார்க்ஸ்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மார்க்ஸ்&oldid=3618103" இலிருந்து மீள்விக்கப்பட்டது