ஆக்சிகுளோரினேற்றம்

ஆக்சிகுளோரினேற்றம் (Oxychlorination) என்பது C-Cl பிணைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு கரிம வேதியியல் செயல்முறையாகும். நேரடியாக குளோரினைப் பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக ஆக்சிகுளோரினேற்ற வினையில் ஐதரசன் குளோரைடுடன் ஆக்சிசன் இணைத்து பயன்படுத்துகிறது [1]. ஐதரசன் குளோரைடும் குளோரின் வாயுவைக் காட்டிலும் விலை குறைவாக இருப்பதால் இந்த செயல்முறை தொழிற்சாலைகளால் மிகவும் விரும்பப்படுகிறது [2].

வினைவழிமுறை தொகு

இந்த வினை பொதுவாக தாமிர(II) குளோரைடு (CuCl2) வினையூக்கியால் ஆரம்பிக்கப்படுகிறது, 1,2-டைகுளோரோயீத்தேன் உற்பத்தியில் மிகப் பொதுவான ஊக்கியாகக் கருதப்படுகிறது. சில நிகழ்வுகளில் KCl, LaCl3 அல்லது AlCl3 இணைவினையூக்கி முன்னிலையில் CuCl2 சிலிக்காவின் ஆதரவோடு செயல்படுகிறது. நுரைக்கல் அல்லது ஈரணுப்பாசி மண், அலுமினா உள்ளிட்டவையும் சிலிக்காவுக்கு மாற்றாக இவ்வினையில் பயன்படுத்தப்படுகின்றன. 238 கிலோ யூல் அளவுள்ள உயர் ஆற்றலை வெளிவிடும் வினை என்பதால் வினையூக்கியை வெப்பச்சீரழிவிலிருந்து காக்க வினையின் வெப்பம் கண்காணிக்கப்படுகிறது. வினைக்கான சமன்பாடு கீழே தரப்பட்டுள்ளது.

CH2=CH2 + 2 CuCl2 → 2 CuCl + ClH2C-CH2Cl

குப்ரசு குளோரைடுடன் ஆக்சிசனும் பின்னர் ஐதரசன் குளோரைடும் சேர்க்கப்பட்டு அடுத்தடுத்த வினைகள் மூலம் தாமிர(II) குளோரைடு மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

½ O2 + 2 CuCl → CuOCuCl2
2 HCl + CuOCuCl2 → 2 CuCl2 + H2O

பயன்கள் தொகு

எத்திலீன் இவ்வினையின் மிகப்பொதுவான அடிமூலக்கூறாகக் கருதப்படுகிறது.

CH2=CH2 + 2 HCl + ½ O2 → ClCH2CH2Cl + H2O

1,2-டைகுளோரோயீத்தேன் உருவாக்கத்தில் ஆக்சிகுளோரினேற்ற வினைக்கு சிறப்பான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது பின்னர் வினைல் குளோரைடாக மாற்றப்படுகிறது. பின்வரும் வினையில் இதைக் காணலாம். இவ்வினையில் 1,2-டைகுளோரோயீத்தேன் பிளக்கப்படுகிறது.

ClCH2CH2Cl → CH2=CHCl + HCl
2 HCl + CH2=CH2 + ½ O2 → ClCH2CH2Cl + H2O

இப்பிளப்பு வினையில் கிடைக்கும் HCl ஆக்சிகுளோரினேற்றத்தால் மறுசுழற்சி செய்யப்படுகிறது. உண்மையில் இவ்வினைக்கான ஐதரசன் குளோரைடு தன்னிச்சையாகவே வழங்கப்படுவதால் நேரடி குளோரின் சேர்க்கையைக் காட்டிலும் தொழிற்சாலைகளில் ஐதரசன் குளோரைடு பயன்படுத்துவதை விரும்புகின்றன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. M. Rossberg et al. “Chlorinated Hydrocarbons” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_233.pub2
  2. Marshall, K. A. 2003. Chlorocarbons and Chlorohydrocarbons, Survey. Kirk-Othmer Encyclopedia of Chemical Technology
  3. "Oxy | Oxychlorination." Oxy | Oxychlorination. N.p., n.d. Web. 10 Oct. 2012. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிகுளோரினேற்றம்&oldid=2749835" இலிருந்து மீள்விக்கப்பட்டது