ஆசிரியத் தாழிசை
ஆசிரியத் தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. அளவொத்த அளவடிகள் (நாற்சீர் கொண்டவை) மூன்று கொண்டு, ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது ஆசிரியத் தாழிசை எனப்படும். சில இடங்களில் இது தனித்தும் வரும். ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவது ஆசிரிய ஒத்தாழிசை என்றும் அழைக்கப்படும். எனினும் சிறுகாக்கைபாடினியார் கருத்துப்படி இரண்டையும் தாழிசை எனக் குறிப்பிடலாம். [1] [2]
- எடுத்துக்காட்டு 1
வானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை
பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை
நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்
- -யாப்பருங்கலக்காரிகை உரைமேற்கோளில் தனித்து வரும் ஆசிரியத் தாழிசை
- எடுத்துக்காட்டு 2
கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி !
பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி !
கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லிநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி !
- -சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை 1, 2, 3; இது ஆசிரிய ஒத்தாழிசைக்கு எடுத்துக்காட்டு. ஒரே பொருள் (”கண்ணன் ஆயர்பாடிக்கு வந்தால் அவனிடம் புல்லாங்குழல் கேட்போம்” என மகளிர் சொல்வது) மூன்று தாழிசைகளில் அடுக்கி வருகிறது.