ஆனூர் அஸ்திரபுரீசுவரர் கோயில்

ஆனூர் அஸ்திரபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆனூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் கல்வெட்டுகளில் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் என்று பலவாறாக அழைக்கப்படுகின்றன.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 51 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°34'59.2"N, 79°58'22.7"E (அதாவது, 12.583113°N, 79.972977°E) ஆகும்.

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலின் மூலவராக அஸ்திரபுரீசுவரர் உள்ளார். இறைவி சௌந்தரவல்லி ஆவார். அர்ச்சுனர் சிவ அஸ்திரம் பெறுவதற்காக பல இடங்களில் தவமிருந்தார். அவ்விடங்களில் இத்தலமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வூரில் அருகே உள்ள மலையை அஸ்திர மலை என்றழைக்கின்றனர். அர்ச்சுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால் இங்குள்ள இறைவன் அஸ்திரபுரீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இக்கோயிலில் பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[1]

அமைப்பு

தொகு

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் முன்பாக குளம் உள்ளது. கோயிலில் பலி பீடமும், நந்தியும் காணப்படுகின்றன. தேவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வடக்குத் திருச்சுற்றில் சண்டிகேசுவரர் உள்ளார். கோயிலின் சுவரில் விநாயகர், ஜேஷ்டாதேவி சிற்பங்களைக் காணமுடிகிறது. [1]

வரலாறு

தொகு

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர் கோட்டத்தில் களத்தூர் நாட்டில் ஆனூர் ஆகிய சத்தியாசிரிய குல கால சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்று இவ்வூர் திகழ்ந்துள்ளது. இங்கிருந்த வேத பாட சாலையில் பயின்ற மாணவர்கள் வேதங்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சிவன் கோயில் திருவம்பங்காட்டு மகாதேவர் என்றும், பெருமாள் கோயில் சித்திரமேழி விண்ணகர் என்றும் அழைக்கப்பட்டது. கம்ப வர்ம பல்லவன், பராந்தக சோழன், ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன் ஆகியோர் இத்தல இறைவனைப் போற்றி வழிபாட்டிற்காக கொடை அளித்த செய்திகளைக் கூறுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு