ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு

ஐக்கிய நாடுகள் அவை 2011 ஆம் ஆண்டை ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு என அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே இந்த அறிவிப்பு வெளியானது. ஆப்பிரிக்க வம்சாவளி மக்களின் நலனுக்காக தேசிய மட்டத்திலான செயற்பாடுகளையும், பன்னாட்டு ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது இந்த ஆண்டின் அடிப்படைக் குறிக்கோள்.

நோக்கம்தொகு

ஆப்பிரிக்காவுக்கு வெளியே உலகின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும். ஆப்பிரிக்க வம்சாவளி மக்களின் பல்வேறுபட்ட மரபுகள், பண்பாடுகள் என்பவற்றுக்கு உரிய மதிப்பு அளிப்பதிலும், இவை குறித்த அறிவை மேம்படுத்துவதிலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் இந்த ஆண்டு உதவும் என்பதுடன், ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கு எதிரான இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான அரசியல் விருப்பை உருவாக்குவதற்குத் தேவையான உந்து சக்தியாகவும் இந்த ஆண்டின் செயற்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணிதொகு

கடந்த சில நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்க வம்சாவளியினர் பரவலாக இனவாதத்துக்கும், இனப் பாகுபாட்டுக்கும் உள்ளாகி வந்தனர். அடிமை வணிகம், குடியேற்றவாதம் என்பவற்றின் அடிப்படையாக அமைந்த இந்த இனப்பாகுபாட்டின் வெளிப்பாடுகள் இன்றும் இம்மக்களைப் பாதிக்கின்றன. பல வகைகளாகக் காணப்படும் இந்த இனவாதத்தின் வெளிப்பாடுகள் மனித உரிமைகளை மீறுவனவாகவே அமைகின்றன. 2001 ஆம் ஆண்டிலேயே இத்தகைய பிரச்சினைகளை ஆராயவும், ஆப்பிரிக்க வம்சாவளியினர் மீதான இனப்பாகுமாட்டை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும் ஒரு குழுமை ஐக்கிய நாடுகள் அவை அமைத்தது. உலகின் பல பகுதிகளிலும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, நலச் சேவைகள், வீட்டு வசதி போன்றவற்றில் பாகுபாடாக நடத்தப்படுவதாக இக் குழு கண்டறிந்தது[1].

2001 இல் இனவாதத்துக்கு எதிராக, தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட "டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும்" என்னும் ஆவணம், ஆப்பிரிக்க வழிவந்தோரை, இனப்பாகுபாட்டினால் இன்றும் பாதிக்கப்படும் ஒரு குழுவினராக ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம், எல்லா வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான சாசனம், பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டுச் சாசனம், சிறுவர் உரிமைகள் சாசனம், அனைத்துப் புலம்பெயர் வேலையாட்களதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகள் பாதுகாப்புப் பன்னாட்டுச் சாசனம் போன்றவை உட்படப் பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்பவற்றுக்கு இணங்கவும் ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டது[2].

குறிப்புக்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு