ஆர் (மலர்)
சேர சோழ பாண்டியர் போரின் போது அடையாளம் தெரிவதற்காகச் சூடிக் கொள்ளும் பூ போந்தை, ஆர், வேம்பு. [1][2]
இவற்றில் சோழர் அணிந்து கொள்ளும் பூ ‘ஆர்’. [3]
இந்த ஆர் என்னும் பூ ‘ஆத்திப் பூ’ என்பதில் கருத்து மாறுபாடு இல்லை.
ஆத்திப் பூ என்பதை அடையாளம் காட்டுவதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.
‘ஆத்தி சூடி’ என அறநூல் பாடிய பிற்கால ஔவையார் குறிப்பிடுகிறார்.
பூவரசம்பூ போன்ற அமைப்புடன், ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு அளவினதாக வெள்ளை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் பூக்கும் மலரினை இக்காலத்தில் அறிஞர்கள் ஆத்தி எனக் காட்டுகின்றனர்.
சோழர் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிற்காலத்தில் தோன்றிய கருத்தென்றுச் சிலர் சொல்வர். இந்தக் கருத்தில்கூடச் சோழன் சிவபெருமானின் குலம் என்று கொள்ளப்படவில்லை.
இவ்வாறு தமிழர்களின் சமயங்களில் ஒன்றான சைவ சமயத்தின் இறைவன் சிவபெருமான் ஆத்தி மலரை விரும்பிச் சூடுவதாக ஒரு கருத்தும் உள்ளது
தாமற்பல் கண்ணனார் என்னும் புலவர், சோழன் மாவளத்தானோடு சூதாடிய பொழுது தாமற்பல் கண்ணனார் சூதாட்டத்தில் வட்டை மறைத்துவைத்துத் தன்னை ஏமாற்றியதாக எண்ணிய சோழன் சினமுற்று, அவ்வட்டை அவர் மீது எறிந்தான். அதனால், கோபமுற்ற தாமற்பல் கண்ணனார், மாவளத்தானைப் பார்த்து மன்னா உன் செய்கையைப் பார்த்தால், நீ சோழ மன்னனுக்குப் பிறந்தவனாக எனக்குத் தோன்றவில்லையே, ஆத்திமாலை சூடிய உன் முன்னோரெல்லாம் பார்ப்பனர்கள் நோவுமாறு எந்தச் செயலையும் செய்யமாட்டர்களே என்று இகழ்கிறார்.[4]
கோவூர் கிழார் என்னும் புலவர், தங்களுக்குள் இருந்த பகை காரணமாக சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்ட பொழுது, சோழனே உன்னுடைய மாலை ஆத்திப் பூக்களால் தொடுக்கப்பட்டது, உன்னோடு போர் புரிபவனின் மாலையும் ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்டதுதான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடிதான் எனவே போரைத் தவிர்க்க என்று இருவருக்கும் அறிவுரை கூறுகிறார்.[5]
சாத்தந்தையார் என்னும் புலவர் சோழ மன்னன் கோப்பெரு நற்கிள்ளி நாரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும் இரவலர்க்கு ஈகை செய்துவிடும் கவிந்த கையை உடைய வீரன் என்று குறிப்பிடுகிறார்.[6]
மேலும் அவர், ஆத்தி மாலை சூடிய பெரியோன் கோப்பெரு நற்கிள்ளி ஊரைத் தன்வசமாக்கிக்கொள்ள வந்த மற்போர் வீரனுடன் போர் நடத்தினான் என்றும் குறிப்பிடுகிறார்.[7]
சோழன் சூடும் ‘ஆத்தி’ எது – என்பதை நற்றிணைப் பாடல் ஒன்று நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆர் என்பது ஆத்தி-மலர். தமாலம் என்பது வெற்றிலைக் கொடி. அது படர்ந்த மரம் 'ஆர்'. வெற்றிலையைக் கொடிக்காலில் ஆத்தி மரத்தில் படரவிடுகின்றனர்.
தமாலம் கொடி வெற்றிலைக் கொடி எனச் கொள்வதற்குச் சிலப்பதிகார அடிகளும் துணை நிற்கின்றன. [11]
இவற்றையும் பாருங்கள்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மாபெரும் தானையல் மலைந்த பூவும் - தொல்காப்பியம் 3-63-4
- ↑
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் வரினும், தன் தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் (புறநானூறு - 338) - ↑ நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே - புறநானூறு 45
- ↑
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்...(புறநானூறு - 43) - ↑
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே (புறநானூறு - 45) - ↑
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே? (புறநானூறு - 81) - ↑
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்று
உற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே! (புறநானூறு - 82) - ↑ பசுமை நிறமும் நறுமணமும் கொண்ட தமாலம் நீண்டு குளுமையாக வளரும் ஆர் மரத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. ஆர் மரத்தில் தொடுத்திருந்த தேனை எடுப்பதற்காக ஆர் மரத்தை வளைத்தனர். அப்போது ஆர் மரத்தைப் பற்றியிருந்த தமாலக்கொடி நழுவி விழுந்துவிட்டது. இது நாளும் யாணர் (புது வருவாய்) தரும் நிலம். – இது பாடல் தரும் செய்தி.
- ↑ தமாலம் என்பது வெற்றிலை. இதனை இக்காலத்தில் தாம்பூலம் என வழங்குகிறோம்.
- ↑ வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலைக் கொடியை ஆத்தி மரத்தில் படரவிடுகின்றனர்.
- ↑ கோவலன் பிரிந்தபோது மாதவி அவனுக்குக் முடங்கல்(கடிதம்) எழுதி அனுப்பினாள். முடங்கல் தாழைமடலில் எழுதப்பட்டது. அந்த முடங்கலை நடுவில் வைத்து ஒப்பனை செய்வதற்கு பல மலர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை கழுநீர் சண்பகம், மாதவி, தமாலம், கருமுகை, மல்லிகை, கத்திகை என்பன சிலப்பதிகாரம் 8-45 எழுதிய தாழைமடலோடு மலர்களை வைத்து ஒப்பனை செய்யும்போது சுற்றுவதற்கு வெற்றிலைக் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறாள்.