ஆறாம் வேற்றுமை

இலக்கணம்

ஆறாம் வேற்றுமை என்பது பெயரின் எழுவாய்ப் பொருளைக் கிழமைப் பொருளாக (உரிமை)வேற்றுமைப் படுத்துவது ஆகும். கிழமைப் பொருள் தற்கிழமை , பிறிதின் கிழமை என இரு பொருளில் வரும் நூற்பா

" ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும்
பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்க மாம்தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே " [1]

ஆறாம் வேற்றுமை உருபுகள்

தொகு

அது , ஆது, என்பன ஆறாம் வேற்றுமைக்குரிய உருபுகளாகும். இவற்றுள் 'அது', 'ஆது' உருபுகள் ஒருமைக்கும் 'அ' உருபு பன்மைக்கும் வரும். 'அது' உருபு ஒருமைக்கு உரியதாயினும் சிறுபான்மை பன்மைக்கும் வரும்

சான்று

  • எனது புத்தகம்,உனது வண்டி.
  • எனாது கை, நினாது வரவு, தனாது பொருள்
  • என கைகள், நின வீடுகள், தன பொருள்கள்

தற்கிழமைப் பொருள்கள்

தொகு

தற்கிழமை ஐந்து வகைகளில் வரும் அவை,

  1. குணமும் தொழிலுமாகிய பண்பு
  2. உறுப்பு
  3. ஒன்றன் கூட்டம்
  4. பலவின் ஈட்டம்
  5. திரிபின் ஆக்கம்

சான்று:

  • காக்கையது கருமை- குணம்(பண்புத்தற்கிழமை)
  • மன்னனது வரவு - தொழில்( பண்புத்தற்கிழமை)
  • எனது கை,மரத்தினது கிளை- உறுப்புத் தற்கிழமை
  • மாந்தரது கூட்டம், நெல்லது குப்பை - ஒன்றன் கூட்டத் தற்கிழமை( ஒரே வகைக் கூட்டம்)
  • பறவையது கூட்டம்,விலங்கினது கூட்டம் - பலவினீட்டத் தற்கிழமை( விலங்குகள்,பறவைகளில் பல வகை)
  • நெல்லினது பொரி,மஞ்சளது பொடி- திரிபினாக்கத்தற்கிழமை( அதே பொருள் வேறாக மாறுதல்)

பிறிதின் கிழமைப் பொருள்

தொகு

பிறிதின் கிழமைப் பொருள் மூன்று வகையில் வரும்

  • பொருள்
  • இடம்
  • காலம்

ஆகியவை ஆகும்

சான்று:

  1. வேலனது பசு- பொருள் பிறிதின் கிழமை
  2. கண்ணனது வீடு - இடப் பிறிதின் கிழமை
  3. வள்ளியது நாள்- காலப் பிறிதின் கிழமை

சொல்லுருபு

தொகு

ஆறாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபு உடைய என்பதாகும். இச் சொல்லுருபு ஒருமை, பன்மை ஆகிய இரண்டிற்கும் வரும்.

சான்று.

  • என்னுடைய வீடு
  • அவர்களுடைய வீடு
  • உண்ணுடைய வீடு

மேற்கோள்கள்

தொகு
  1. நன்னூல். வேற்றுமையியல்,நுற்பா. 300

உசாத்துணை

தொகு

நன்னூல் சொல்லதிகாரம். வேற்றுமையியல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்_வேற்றுமை&oldid=3452903" இலிருந்து மீள்விக்கப்பட்டது