ஆறுமுகசாமி சித்தர்

ஆறுமுகசாமி சித்தர் என்பவர் தென்காசி வட்டத்தில் வாழ்ந்த ஒரு சித்தராவார். இவருடைய கோயில் ஒன்று தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது.

ஆறுமுகசாமி சித்தர் கோயில்

தென்காசி செங்கோட்டை பகுதிகளில் இவரை பற்றிய செவிவழிக்கதை தற்போதும் கூறப்பட்டு வருகிறது. அது,

இவர் ஆங்கிலேயர் காலத்தில் செங்கோட்டை பகுதியில் கணக்கராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அவ்வேலைக்காக தன் ஊரான தென்காசியில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் மாட்டுவண்டியில் சென்றுகொண்டிருந்தார். அந்த மாட்டுவண்டியை ஓட்டிய சிவச்சாமி என்பவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது. தினமும் மாட்டுவண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போது இடையில் வண்டியை நிறுத்திவிடுவார். ஆறுமுக சாமியிடம் நான் உடனே வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வண்டிக்கு வருவார். ஒரு நாள் ஆறுமுக சாமிக்கு இவர் செய்கை விசித்திரமாகப்பட இவரை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார். அப்போது சிவச்சாமி பத்மாசன நிலையில் ஆற்று நீரில் மிதந்து கொண்டிருந்தார். இச்செய்கையால் கவரப்பட்ட ஆறுமுகசாமி சிவச்சாமியை தன் குருவாக ஏற்று சித்திகள் பல பெற்று சிவஞான உபதேசியாக மாறி அதன் பிறகு சித்தராக மாறிவிட்டார் என கூறப்படுகிறது. இவரின் சமாதி மேலேயே இவருக்கு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுமுகசாமி_சித்தர்&oldid=4131830" இலிருந்து மீள்விக்கப்பட்டது