ஆழ்கடல் மீன்கள்

ஆழ்கடல் மீன்கள் என்பவை கடலின் நீர்மட்டத்திற்குக் கீழே பல நூறு அடி ஆழத்தில் வாழும் பலவகை மீன்கள் ஆகும். ஆழ்கடல் மீன்கள் தாம் வாழும் ஆழத்திற்கு ஏற்ப பல்வேறு நிறங்களைக் கொண்டிருக்கின்றன. ஒளி எட்டும் ஆழத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் நீலம் அல்லது பச்சை நிறத்தில் உள்ளன. 600 அடிக்குக் கீழ் வாழும் மீன்களில் பல வெண்ணிறமும், சிவப்பு நிறமும் கொண்டவை. 1000 அடிக்குக் கீழ் வசிக்கும் மீன்கள் பெரும்பாலும் கறுப்பாக இருக்கும். ஆழ்கடல் மீன்களில் பெரும்பாலானவை தம்மினுஞ் சிறிய மீன்களையோ வேறு பிராணிகளையோ பிடித்துத் தின்று வாழும் புலாலுண்ணிகள் ஆகும். ஆகவே, இரையைக் கவ்விப் பிடிப்பதற்கு ஏற்றவாறு இவற்றின் வாய் பெரியதாக இருக்கிறது. சில மீன்களுக்கு நீண்ட வால் உண்டு. இவை இரையைத் தம் வாலினால் வளைத்துப் பிடித்துத் தின்னும். மற்றும் சில மீன்களுக்கு பெய தாடைகளும், பற்களும் உண்டு. விரியன் என்னும் மீனுக்கு நீண்ட பற்கள் உள்ளன. இந்தக் காரணத்தால் இந்த மீன் வாயை மூடாமல் எப்பொழுதும் திறந்தவாறே வைத்திருக்கும். இதன் பல்லும், கண்களும் இருட்டில் பளிச்சிடும். இந்த ஒளியின் உதவியால் ஆழ்கடல்களில் இது உலவி வருகிறது. ஆழ்கடல் மீன்களுக்குப் போதிய அளவு உணவு கிடைப்பதில்லை. மேலும் இம்மீன்கள் கடல் ஆழத்தில் தண்ணீரின் பெரும் அழுத்தத்தைத் தாங்க வேண்டி உள்ளன. ஆகவே ஆழ்கடல் மீன்களில் பல சிறியவையாகக் காணப்படுகின்றன.[1]

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. குழந்தைகள் களைக்களஞ்சியம் முதல் தொகுதி
  2. Jordan, D.S. (1905). A Guide to the Study of Fishes. H. Holt and Company.
  3. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2009). "Chiasmodon niger" in FishBase. August 2009 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்கடல்_மீன்கள்&oldid=3725078" இலிருந்து மீள்விக்கப்பட்டது