ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
சங்கப்பாடல்களில் இவரது பாடல் ஒன்றே ஒன்று காணப்படுகிறது.[1] இவரது தந்தை ஆவூர் கிழார் என்பரும் ஒரு புலவர்.
ஆவூர் தஞ்சை மாவட்டதில் உள்ளதோர் ஊர்

அகம் 202 தரும் செய்தி தொகு

நிகழிடம் தொகு

அவன் இரவில் வந்து அவளோடு இருந்துவிட்டு செல்கிறான். இந்தப் பழக்கம் நீடிக்கிறது. இது நீடிக்கக் கூடாது அவளை மணந்துகொள்ளவேண்டும் என்று தோழி அவனுக்குப் பக்குவமாக எடுத்துரைக்கும் பாடல் இது.

அவன் நாடு தொகு

வெண்ணிறத்துடன் ஒளி வீசும் அருவிகள் கொண்டது அவன் குன்றம். குட்டிகளுடன் வரும் பெண்யானைக்குப் பாதுகாவல் வேண்டி ஆண்யானை புலியுடன் போராடி வென்று புண்பட்டு தன் கையை உயர்த்தி உயிர்க்கும்.(பிளிறும்). அதன் ஒலி பெரும் பாறைகள் மேல் மோதும் அதிர்வால் அங்கே பூத்திருக்கும் வேங்கைப் பூக்கள் உதிரும். அந்த உதிர்வு கொல்லன் உலைக்களத்தில் தீப்பொறி சிதறுவது போலத் தோன்றும். சிறிய பல மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் காணப்படும். நீலமணி நிறத்தில் அடர்ந்துள்ள புதர்களுக்கு மேல் அவை தாவி உதிரும். இப்படிப்பட்ட நாட்டை உடையவன் அவன்.

அவன் வரும் வழி தொகு

இப்பபடிப்பட்ட அவனது நாட்டைக் கடந்து வரும்போது இடி முழங்கும். அந்த இடியின் ஒலி கேட்டு நச்சுப்பையை உடைய நாகம் தன் தூக்கிய தலையைத் தரையில் போட்டுச் சுருண்டு விழும். அந்த அகன்ற வெளியில் கற்களை சுற்றிவரும் இடுக்கு வழியில் கையில் இருக்கும் எஃகம் என்னும் வேல் ஒன்றையே துணையாகக் கொண்டு அவன் வருகிறான்.

அவள் படும் அஞர்(துன்பம்) தொகு

இவற்றையெல்லாம் நினைத்து அவளும் தோழியும் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்லித் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதைத் தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.

மேற்கோள் குறிப்பு தொகு

  1. வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
    கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
    புலிப் பகை வென்ற புண் கூர் யானை
    கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்,
    நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் 5
    குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
    சிறு பல் மின்மினி போல, பல உடன்
    மணி நிற இரும் புதல் தாவும் நாட!
    யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
    உத்தி அரவின் பைத் தலை துமிய, 10
    உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
    தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
    கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
    தேராது வரூஉம் நின்வயின்
    ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? 15
    இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் அகம் 202