ஆ. மு. சி. வேலழகன்

சின்னத்தம்பி வேல்முருகு பிறப்பு: மே 12, 1939 ஆ. மு. சி. வேலழகன், ஆதிநாராயணன், முத்து, சின்னத்தம்பி ஆகிய பெயர்களிள் எழுதிவரும் ஓர் ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், பன்னூலாசிரியருமாவார்.

ஆ. மு. சி. வேலழகன்
பிறப்புமே 12, 1939
திருப்பழுகாமம், மட்டக்களப்பு
பெற்றோர்ஆதிமுத்து சின்னத்தம்பி, வேலாயுதர் வள்ளியம்மை

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மட்டக்களப்பு மாவட்டம்,‘சிங்காரக்கண்டி’ என்று வரலாற்றுப் பெயர் பெற்ற திருப்பழுகாமத்தில் ஆதிமுத்து சின்னத்தம்பி, வேலாயுதர் வள்ளியம்மை தம்பதியினரின் மகனாகப் பிறந்த சி.வேல்முருகு எனும் இயற்பெயர் கொண்ட ஆ. மு. சி. வேலழகன திருப்பழுகாமம் மெதடிஸ்தமிசன் பாடசாலையில் கல்வி கற்றார். இவரின் பிள்ளைகள் கலாநற்குணம், உதயகுமார், கருணாநிதி, உதயசூரியன், சிற்றரசு, மணிமேகலா, வாசுகி, வேல்விழி, இளவழகன்

சீர்த்திருத்தங்கள்

தொகு

1952 காலப்பகுதிகளில் தந்தை ஈ.வெ.ரா. பெரியார், ப.ஜீவானந்தம், சிங்காரவேலர், பேரறிஞர் அண்ணாதுரை போன்றோரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டும், அவர்களது சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களால் கவரப்பட்டும் அவற்றைத் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்து முகமாக பல சீர்த்திருத்தங்களைச் செய்ததன் காரணமாக சமூகத்தின் எதிர்ப்புகளுக்கும், குடும்பத்தார் சுற்றம் என்போரின் வசை, வம்புகளுக்கும் ஆளானார். தன்னம்பிக்கையும், கொள்கைப் பற்றும் கொண்ட இவர் தான் பிறந்த ஊரை விட்டு 1963ல் வெளியேறினார். மட்டக்களப்பு அமிர்தகழியிலே நிரந்தரமாக வாழ்வமைத்துக் கொண்டார். காலசூழ்நிலை சிறையிலும் தள்ளியது.

தொழில்

தொகு

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஓர் பஸ் சாரதியாக இணைந்து 32 வருடங்கள் சபைக்கு பெருமை சேர்த்தார். தன் கடமையை கொள்கைப் பிடிப்போடு செய்து வந்த இவர் போக்குவரத்துச்சாலைகளில் இளைஞர்கள், தொழிலாளி, நிருவாகிகள் மத்தியில் இலக்கியம் சம்பந்தமான கவிதை, கட்டுரை, கையெழுத்துப் பத்திரிகை போன்றவற்றை எழுத வைத்தும் கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்தி தனது ஆர்வத்தை வெளிக்காட்டி வந்தார்.

பஸ்சாலையில் படிப்பகம்

தொகு

இலங்கையில் எந்த பஸ் டிப்போக்களிலும் இல்லாத வகையில் மட்டக்களப்பு பஸ்சாலையில் [1985 காலப்பகுதியில் கிழக்குப் போக்குவரத்துச் சபைத் தலைவர் ஜனாப் தௌபீக் (முஹம்மட் அலி) அவர்களைக் கொண்டு அவரது விருப்பத்தின் பேரில்] ஓர் படிப்பகத்தினைத் திறந்து 5ற்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகளும், ஆங்கில, சிங்கள பத்திரிகைகளும் பல நூறு நூல்களையும் உள்ளடக்கிய 'படிப்பகத்'தினை ஆரம்பிக்க காரணகர்த்தாவாக இருந்தார்.

‘செண்பகம்’

தொகு

இக்கட்டத்தில் ‘செண்பகம்’ எனுமோர் கையெழுத்துப் பத்திரிகையினையும் மாதாமாதம் தனது முயற்சியினால் நடத்தி வந்தார். ஆண்டுதோறும் தான் கடமையாற்றும் சாலைகளில் வாணிவிழா, தைப்பொங்கல் விழாக்களையும் பெரும் இலக்கிய விழாக்களாக நடத்திச் சிறப்புசெய்தார். இவருக்கு உயர்பதவியான தரம் 6 சாரதிப் பயிற்றுனர் பதவி கிடைத்தது.

சிறப்பம்சம்

தொகு

1972ம் ஆண்டிலிருந்து எழுத்துத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட கவிதை, சிறுகதை, உரைச்சித்திரம், நாவல்களை எழுதியுள்ளார். இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டும் 13, 14, 15ஆவது நூல்களை வெளியிட ஆயத்தமாயிருக்கும் இவர், இது நாள்வரை (2010) எந்தவொரு பத்திரிகைக்கும் தனது ஆக்கங்களை அனுப்பியதில்லை.

நூல்களின் விபரம்

தொகு

இவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் விபரம் வருமாறு:

  • "தீயும் தென்றலும்", (1972), கவிதைத் தொகுப்பு, பக்கம் 50, பாக்கியம் பதிப்பகம்.
  • "சாதியா? சாதியா”, 1973), உரைச்சித்திரம், பக்கம் 70, பாக்கியம் பதிப்பகம்.
  • "உருவங்கள் மானிடராய்", (1994), கவிதைத் தொகுப்பு, பக்கம் 63, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு .
  • "கமகநிலா”, (1996), சிறுகதைத் தொகுப்பு, பக்கம் 96, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு.
  • "வேலழகன் அரங்கக் கவிதைகள்", (1996), பக்கம் 96, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு.
  • “மூங்கில் காடு" (2001) சிறுகதைத் தொகுப்பு, பக்கம் 272, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு.
  • “விழியும் வழியும்" (2001), கவிதைத் தொகுப்பு, பக்கம் 96, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, தமிழ்நாடு.
  • “சில்லிக்கொடி ஆற்றங்கரை" (2004) வரலாற்று நாவல், பக்கம் 166, மட். மாவட்டத் தமிழ் எழுத்தாளர் பேரவை.
  • “கோடாமை சான்றோர்க்கனி" (2004) வரலாற்று நாவல், பக்கம் 160, பாக்கியம் சிவசோதி பதிப்பகம், திருப்பழுகாமம்.
  • “செங்காந்தள்" (2006), கவிதைத் தொகுப்பு, பக்கம் 100, பாக்கியம் சிவசோதி பதிப்பகம், திருப்பழுகாமம்.
  • “இவர்கள் மத்தியிலே" (2006) குறுநாவல், பக்கம் 80, பாக்கியம் சிவசோதி பதிப்பகம், திருப்பழுகாமம்.
  • “கேட்டுப் பெற்ற வரம்" (2007), சிறுகதை, பக்கம் 160, மணிமேகலைப் பிரசுரம், தமிழ்நாடு.

மேலும் "தேரான்தெளிவு" என்ற சிறுகதைத் தொகுதியையும், "திருப்பழுகாமம்" வரலாறு எனும் வரலாற்று நூலினையும், "காடும் கழனியும்" எனும் நாவலையும் தமிழ்நாடு மணிமேகலைப் பிரசுர வெளியீடாக் வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

விருது பெற்ற நூல்கள்

தொகு
  • செங்காந்தன் (கவிதைத் தொகுதி – 2006) தேசிய சாகித்திய விருது.
  • கோடாமை சான்றோர்க்கதை (நாவல் - 2004) மாகாண, தேசிய விருது.
  • சில்லிக்கொடி ஆற்றங்கரை (நாவல் - 2004) யாழ். இலக்கியவட்ட விருது.

நூல் ஆய்வுகள்

தொகு

இவரது “மூங்கில் காடு” நூலினை தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் சோ.இளங்கோ அவர்கள் ஆய்வுசெய்து M.Phil பட்டம் பெற்றுள்ளார். பேராசிரியர் திரு. இரா. கோவிந்தன் அவர்கள் இவரது நூலான “சில்லிக்கொடி ஆற்றங்கரை” நாவலினை தமிழ்நாடு தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து M.Phil பட்டம் பெற்றுள்ளார். இதுபோல் இவருடைய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளை முறையே மூவர் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் M.A. பட்டத்திற்கென ஆய்வு செய்வதும் குறிப்பிடத்தக்கது

இலக்கிய சேவைகள்

தொகு

இவர் 1952 காலப்பகுதியில் இருந்து சமூக சீர்த்திருத்தப் பணிக்கெனத்தம்மை அர்ப்பணித்து, 1958இல் 'திருப் பழுகாமம் கண்ணகி கலைகழகத்தினை'யும், 1963இல் அமிர்தகழி புன்னைச்சோலையில் 'முரசொலி நாடக மன்றத்தினை'யும், 1965இல் 'திருக்குறள் முன்னணிக் கழகத்தினையும்', 1970இல் மட்டுநகரில் 'தமிழர் கலாசார மன்றத்தினை'யும், 1971இல் மட்டுநகரில் 'திருக்குறள் முன்னணிக் கழகத்தினையும்', 1981இல் 'திருப்பழுகாமம் திருக்குறள் முன்னணிக் கழகத்தினை'யும், 1985இல் மட். இ.போ.ச.சாலையில் 'கிழக்குப் போக்குவரத்து கலாசார மன்றத்தினை'யும், 1988இல் 'படுவான்கரை விவசாயிகள் அபிவிருத்திக் கழகத்தினை'யும், 1989இல் அம்பாறை மகிந்தபுரயில் 'திருக்குறள் முன்னணிக் கழகத்தினை'யும், 1997இல் மட்டுநகரில் 'மட். மாவட்டத் தமிழ் எழுத்தாளர் பேரவையினை'யும், 2004இல் வாழைச்சேனையில் 'திருக்குறள் முன்னணிக் கழகத்தினை'யும், தனது சொந்தச்சிந்தனை முயற்சியால் தொடங்கி பல இளைஞர்களை இலக்கியத்துறையில் ஈடுபட வைத்தும் பல அறிஞர்களைக் கொண்டு விழாக்கள் நடத்திப் பேருரையாற்ற வைத்தும் பல எழுத்தாளர்கள், கலைஞர்கள்,அறிஞர்களைக் கௌரவித்தும் வந்துள்ளார்.

கௌரவங்களும், விருதுகளும்

தொகு

ஆ.மு.சி. வேலழகனின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்கொண்டு அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் இவருக்குப் பல கௌரவங்களை வழங்கியுள்ளன.

  • தமிழ்நாட்டு கல்விமையச்சரும், பேராசிரியருமான க.அன்பழகன் அவர்களினால் 1996 மே 09ஆம் திகதி காந்தி காமராஜ் நினைவு மண்டபத்தில் பத்திற்கும் மேற்பட்ட நாட்டு அறிஞர்கள் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
  • இலங்கை அரசினால் 2006இல் கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
  • 2007ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண சாகித்திய விழாவின் போது (12.11.2007) கௌரவிக்கப்பட்டார்.

மேலும், மட். அரசாங்க அதிபர் வே.சண்முகம் அவர்களினாலும், புண்ணியமூர்த்தி அவர்களினாலும் முறையே 2003, 2004 ஆகிய காலப்பகுதிகளில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, யாழ். இலக்கிய வட்டத்தின் விருதுக்கும் (2008.01.06) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் யாழ். இலக்கிய வட்டத்தின் விருதினையும், பரிசினையும் போக்குவரத்துச் சிரமத்தினால் பெறமுடியாத நிலையில் இருந்தார். 12.09.1998 இல் கொழும்பு CEYLIN UNITED and STAGE யினரால் இலக்கியத்திற்கான விருதும் இவருக்குக் கிடைத்தது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._மு._சி._வேலழகன்&oldid=3232605" இலிருந்து மீள்விக்கப்பட்டது