இசநகி (Izanagi) சப்பானியத் தொன்மவியல் மற்றும் சின்டோ மதத்தின் படி ஏழாவது தெய்வீக பரம்பரையை சார்ந்த ஒரு ஆண் தெய்வம் ஆவார். இவருடைய பெயருக்கு கொஜிக்கியில் அழைப்பவன் என பொருள் கூறப்பட்டுள்ளது. இசநமி என்பவர் இவரது சகோதரியும் மனைவியும் ஆவார்.[1][2][3]

天瓊を以て滄海を探るの図.கையில் ஈட்டியுடன் இசநாகி

பிறப்பு

தொகு

ஆதி கடவுள்களான குனிதோ-கொடாசி மற்றும் அமெ-னோ-மினா-கனுஷி ஆகியோர் இசநாகி மற்றும் இசநமி என்ற இரண்டு தெய்வீக பிறவிகளை உருவாக்கினர். அவர்கள் இருவருக்கும் சக்தி வாய்ந்த அமெ-னோ-ருபுகோ (விண்ணுலக ஈட்டி) வழங்கப்பட்டது. பிறகு இருவரும் அமெ-னோ-உகிகாசி (விண்ணுலக மிதக்கும் பாலம்) மூலம் மண்ணுலகம் வந்தனர். அங்கிருந்த கடலில் ஈட்டியை முக்கி எடுத்தனர். அப்போது ஈட்டியிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் மூலம் ஓனகோரோசிமா (தானாக உருவான தீவுகள்) உருவாயின. அந்த தீவுகளை இருவரும் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டனர்.

இசநாமியின் இறப்பு

தொகு

அவர்கள் இருவரும் சேர விரும்பினர். அதனால் அமெ-னோ-மிகாசிரா என்ற தூணை உருவாக்கி அதைச் சுற்றி யாகிரோ-தோனோ என்ற அரண்மனையை உருவாக்கினர். அவர்கள் இருவரும் எதிர் திசையில் தூணை சுற்றி வந்தனர். இறுதியில் ஒன்றாக சந்தித்த போது இசநாமி முதலில் அழைத்தார். பிறகு இருவரும் சேர்ந்து உறவாடினர். இதன் மூலம் ஹிருகோ மற்றும் அவாசிமா ஆகியோர் பிறந்தனர். இவர்கள் தீய கடவுள்களாய் இருந்ததால் வருத்தமடைந்த இசநாமி மற்றும் இசநகி அவர்களை படகில் வைத்து கடலில் அனுப்பிவிட்டனர். பிறகு இருவரும் சென்று ஆதி கடவுள்களிடம் தாங்கள் செய்த தவறு பற்றி கேட்டனர். அதற்கு அவர்கள் திருமணத்தின் போது முதலில் ஆண் கடவுள் தான் அழைக்க வேண்டும் என்றனர்.

இதனால் மீண்டும் இருவரும் தூணை சுற்றி வந்தனர். இந்த முறை சந்தித்த போது இசநாகி முதலில் அழைத்தார். இதனால் அவர்களது திருமணம் வெற்றிகரமாக முடிந்தது. அவர்களது சேர்க்கை மூலம் ஓயசிமா (எட்டு பெரும் தீவுகள்) பிறந்தன. பிறகு அவர்கள் சேர்க்கை மூலம் மேலும் ஆறு தீவுகள் மற்றும் பல கடவுள்கள் தோன்றினர். இறுதியாக நெருப்பு கடவுள் காக-சுச்சி பிறந்த போது இசநமி எரிந்து சாம்பலானார். அவரது உடல் இபா மலைச்சிகரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இசநமியின் இறப்புக்கு காரணமான காக-சுசியின் மேல் இசநாகி கோபம் கொண்டு அவரை தன் வாளால் பல துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். அந்த துண்டுகள் சப்பானில் பல பகுதிகளில் விழுந்து எரிமலைகளாக மாறின.

இசநமியை பிரிந்த இசநாகி

தொகு

இசநாகி இசநமியை சந்திக்க யோமி (பாதாளம்) சென்றான். அங்கு அவருக்கு இசநாமியின் நிழல் மட்டுமே தென்பட்டது. அவர் இசநமியிடம் தன்னுடன் திரும்பி வந்துவிடுமாறு அழைத்தார். ஆனால் இசநமி அவரிடம் தான் ஏற்கனவே பாதாள உணவை தின்று விட்டதால் இனி நிரந்தரமாக இங்கேயே இருந்தாக வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இசநாகி அவரை விட்டுச் செல்ல மறுத்தார். .பிறகு இசநமி தூங்கிய போது இசநாகி தன் சீப்பை எடுத்து அதன் மூலம் ஒளியை உருவாக்கி அவரது முகத்தை பார்த்தார். ஒரு காலத்தில் மிக அழகாக இருந்த இசநமியின் உடல் இப்போது அழுகிப் போய் அருவருக்கத்தக்கதாக இருந்தது. அதைக் கண்ட இசநாகி சத்தமாக அழுதார். பிறகு யோமியை விட்டு வேகமாக ஓடினார்.

அந்த சத்தத்தால் இசநமி எழுந்தார். இசநாகியைக் கொன்று அவரை மீண்டும் யோமிக்கு அழைத்து வருமாறு இருவரை அனுப்பினார். பிறகு இசநாகி பாதாள வாயிலை உடைத்துக் கொண்டு வெளியேறினார். இதைக் கண்ட இசநமி நீ என்னை விட்டுச் பிரிந்து சென்றதால் நான் தினமும் மண்ணுலகில் உள்ள 1000 மனிதர்களைக் கொல்வேன் என்று இசநாகியிடம் கூறினார். அதற்கு பதிலாக இசநாகியும் நான் 1500 மனிதர்களுக்கு வாழ்வளிப்பேன் என்று கோபமாகக் கூறினார்.

பாதாளத்திற்கு சென்று திரும்பியதால் இசநாகி சுத்தப்படுத்தும் சடங்கு செய்தார். அவர் இடது கண்ணைக் கழுவிய போது கதிரவ கடவுள் அமதெரசுவும் வலது கண்ணைக் கழுவிய போது நிலா கடவுள் சுக்குயோமியும் மூக்கைக் கழுவிய போது புயல் கடவுள் சுசானவோவும் பிறந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Encyclopedia of Shinto - Home : Kami in Classic Texts : Omodaru, Ayakashikone". eos.kokugakuin.ac.jp. Archived from the original on 2021-04-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
  2. Kadoya, Atsushi. "Izanagi". Encyclopedia of Shinto. Kokugakuin University. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Phillipi, Donald L. (1969). Kojiki. Tokyo: University of Tokyo Press. p. 482.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசநாகி&oldid=3768844" இலிருந்து மீள்விக்கப்பட்டது