இசைவின்மைப் பழக்கங்கள்
இசைவின்மைப் பழக்கங்கள்:
துன்பம் தரும் சூழ்நிலையில் உணர்ச்சி வசப்படுத்துதலும் அதன் காரணமாகப் பொருந்தாச் செயல்களில் ஈடுபடுதலும் மனித இயல்பு. வாழ்வின் எல்லாப் பருவங்களிலும் ஏற்பட வாய்ப்புண்டு. துன்பச் சூழ்நிலைக்கு வளைந்து தரும் மனப்பாங்கு இருந்தால் அச்சூழ்நிலையின் அழுத்தம் குறையும்போது பொருந்தாச் செயல்களும் இயல்பாகவே மறைந்து விடும். ஆனால் சிலரிடம் சூழ்நிலை அபத்தம் குறைந்தாலும் கூட இப்பொருந்தாச் செயல்கள் மறைய சில வாரமோ அல்லது மாதங்களோ ஆகலாம். நகம் கடித்தல், விரல் சூப்புதல், அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தல், சுய இன்பம் காணுதல் போன்றவை இசைவின்மைப் பழக்கங்களில் முக்கியமானவை.
நகம் கடித்தல்:
சிறுவர்களுக்குச் சுமார் ஒரு வயதில் ஏற்படும் இப்பழக்கம் பத்து முதல் பன்னிரண்டு வயது வரை நீடிக்கும். பகைமை, பதற்றம், பாதுகாப்பின்மை முதலிய உணர்வுகளை ஏற்படுத்தும் சூழ்நிலையில் இப்பழக்கம் உருவாகிறது. மன அழுத்தம் குறைவதற்கு இது வடிகாலாக இருப்பதால் நாளடைவில் இது நிரந்தரப் பழக்கமாகி விடுகிறது. எனவே, குழந்தைக்கு மன அழுத்தம் உருவாகும் சூழ்நிலையைப் பெற்றோர் அறிந்து அன்பும், அனுசரணையும் காட்டி, நிதானத்தைக் கடைப்பிடித்து இப்பழக்கத்தை மாற்ற முயல வேண்டும். அவ்வாறின்றிக் கோபத்துடன் குழந்தையைத் தண்டித்தால் இப்பழக்கம் மாறாமல் நிலைத்துவிடும்.
விரல் சூப்புதல்:
விரல் சூப்புதல் ஒரு வயதில் ஆரம்பித்த போதிலும்3 முதல் 5 வயது வரை தொடரலாம். ஐந்து வயதிற்கு மேலும் தொடர்ந்தால் குழந்தையின் மன வளர்ச்சிக் குறையை அது காட்டுகிறது. தாய்ப்பால் அருந்தும் வாய்ப்பற்ற குழந்தைகள், பால் குடியை மறக்காத குழந்தைகள், சவலைக் குழந்தைகள், நிராகரிக்கப்பட்ட குழந்தைகள் போன்றோரிடம் இப்பழக்கம் ஏற்படுகிறது. அது மட்டுமின்றித் தவறான குழந்தைப் பராமரிப்பு முத்லியனவும் இப்பழக்கம் ஏற்பட அடிகோலுகின்றன. இப்பழக்கத்தை மாற்றுவதற்காக விரலில் கசப்பான பொருளைத் தடவுதலும், கண்டிப்பதும் தவறாகும். குழந்தையின் மனநிலை அறிந்து பெற்றோர்கள் பக்குவமாகவும், அன்புடனும், ஆதரவுடனும் நடந்து இதனை மாற்ற முயல வேண்டும் இவை தவிர அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தல், சுய இன்பம் காணுதல், பொருட்களை உடைத்தல் போன்றவையும் இசைவின்மைப் பழக்கங்களே ஆகும். இவைகளுக்கும் அடிப்படைக் காரணங்களை மன நல மருத்துவரின் உதவியோடு கண்டறிந்து குணப்படுத்த முயல வேண்டும்.
மன நோயும் இன்றைய மருத்துவமும்- டாக்டர். ஓ. சோமசுந்தரம், டாக்டர். தி. ஜெயராம கிருஷ்ணன் ஶ்