இதய அடைப்பிதழ் நோய்

இதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இதய அடைப்பிதழ் நோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇதயவியல்
ம.பா.தD006349

அடைப்பிதழ் நோய்களின் வகை

தொகு
அடைப்பிதழ் குறுக்கம் (stenosis) குறைதிறன் (Insufficiency) / பின்னொழுக்கு (regurgitation)
பெருந்தமனி அடைப்பிதழ் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் பெருந்தமனி அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு
இருகூர் அடைப்பிதழ் இருகூர் அடைப்பிதழ்க் குறுக்கம் இருகூர் அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு
முக்கூர் அடைப்பிதழ் முக்கூர் அடைப்பிதழ்க் குறுக்கம் முக்கூர் அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு
நுரையீரல் அடைப்பிதழ் நுரையீரல் அடைப்பிதழ்க் குறுக்கம் நுரையீரல் அடைப்பிதழ்க் குறைதிறன்/ பின்னொழுக்கு

ஒவ்வொரு அடைப்பிதழிலும் குறுக்கம், குறைதிறன் என இருவகையான குறைபாடுகள் ஏற்படலாம்:

குறுக்கம்

தொகு

அடைப்பிதழின் இதழ்கள் திறக்கும்போது உருவாகும் துவாரமானது சுருக்கம் அடைதல் குறுக்கம் எனப்படுகிறது. அடைப்பிதழ்களின் இதழ்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பதால் இந்த நிலைமை ஏற்படலாம். இதன் போது ஒரு பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்குச் செல்லும் குருதியின் அளவு மட்டுப்படுத்தப்படுவதோடு குருதி தேங்கி குறிப்பிட்ட இதயவறையில் அழுத்தம் அதிகரிக்கிறது.[1]

குறுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்:[2]

  • பிறப்புக் குறைபாடு
  • வாத இதயவழற்சி (rheumatic carditis)
  • வாதக்காய்ச்சல் (rheumatic fever)
  • கல்சியம் அல்லது நாரிழையத்தால் இதழ்கள் தடிப்படைதல் [3] (பிறப்புக்குறைபாட்டில் அல்லது வயது முதிர்ச்சியில் காணலாம்)
 
பிணக் கூறாய்வில் வாத இதய நோய்களின் சிறப்பம்சத்தைக் காட்டும் இதயத்தின் படம்.(காண்க: தடிப்பான இருகூர் அடைப்பிதழ், தடிப்படைந்த இதயவாயிணான்கள், மிகை வளர்ச்சியான இடது கீழ் இதயவறைத் தசை).

குறைதிறன்

தொகு

அடைப்பிதழின் இதழ்கள் உரியமுறையில் மூடப்படாமை இதற்குக் காரணமாகிறது. குறைதிறன் என்பது இதழ்களின் செயல்திறன் இழப்பு ஆகும், இதனால் குருதியை ஒருவழியே செலுத்தும் செயற்பாடு பாதிக்கப்பட்டு, வந்த வழியே குருதி பின்னோக்கிச் செல்கிறது, இது பின்னொழுக்கு எனப்படும்.

குறைதிறனை அல்லது பின்னொழுக்கை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்:

  • பிறப்புக் குறைபாடு
  • வாத இதயவழற்சி
  • இதய உள்ளுறை அழற்சித் தொற்று (Infective endocarditis)
  • சிபிலிசு பெருந்தமனி அழற்சி (Syphilitic aortitis)
  • விரிவு இதயத் தசைநோய் (dilated cardiomyopathy)
  • வயது முதிர்ச்சி
  • காயங்களினால் அடைப்பிதழ் கிழிபடுதல்
  • இதயவாயினாண்கள், நுண்காம்புத்தசை பாதிப்புக்குள்ளாதல்

பெருந்தமனி, இருகூர் அடைப்பிதழ் நோய்கள் இடது இதய நோய்கள் பிரிவுக்குள் அடங்குபவை ஆகும். இடது இதயத்தில் காணப்படும் மிகையான அழுத்தம் காரணமாக வலது இதய அடைப்பிதழ் நோய்களைக் காட்டிலும் இவை ஏற்படும் வீதம் அதிகமாக இருக்கின்றது.

இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி (dysplasia)

தொகு

இதய அடைப்பிதழ் இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி எனப்படுவது முளைய வளர்ச்சியின் போது அடைப்பிதழ்களின் உருவாக்கத்தில் ஏற்படும் குறை ஆகும். எடுத்துக்காட்டாக, ஃபாலோவின் நாலியம் (Tetralogy of Fallot ) நான்கு வகையான பிறப்புக்குறைபாட்டை இதயத்தில் கொண்டுள்ளது, இதில் ஒன்றாக நுரையீரல் அடைப்பிதழ்க் குறுக்கம் அடங்குகிறது. எப்சுதெய்னின் இயல்புப் பிறழ்வு (Ebstein's anomaly) முக்கூர் அடைப்பிதழில் ஏற்படும் குறைபாடாகும்.

உசாத்துணைகள்

தொகு
  1. Guyton, Arthur C. Textbook of medical physiology. 11. s.l. : Elsevier Inc., 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7216-0240-1.
  2. Nicholas A. Boon MA MD FRCP(Ed) FESC Dr. (Author), Nicki R. Colledge BSc FRCP(Ed) Dr. (Author), Brian R. Walker BSc MD FRCP(Ed) Professor (Author), John A. A. Hunter OBE BA MD FRCP(Ed) Professor (Author) . Davidson's Principles & Practice of Medicine. 20. s.l. : Churchill Livingstone, 15 Jun 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0443100578.
  3. Anthony S. Fauci, MD, Dennis L. Kasper, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17. s.l. : The McGraw-Hill Companies, Inc., 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-159991-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_அடைப்பிதழ்_நோய்&oldid=2695944" இலிருந்து மீள்விக்கப்பட்டது