இந்தியப் பெருங்கடல் திமிங்கலச் சரணாலயம்
இந்தியப் பெருங்கடல் திமிங்கலச் சரணாலயம் ( Indian Ocean Whale Sanctuary) என்பது இந்தியப் பெருங்கடலில் இருக்கும் திமிங்கலப் பாதுகாப்புப் பகுதியாகும். அனைத்துலக திமிங்கிலம் பிடித்தல் ஆணையம் இப்பகுதியில் திமிங்கிலம் பிடித்தல் உள்ளிட்ட அனைத்துவகையான திமிங்கிலம் சார்ந்த வணிக நடவடிக்கைகளையும் தடை செய்திருக்கிறது. அனைத்துலகத் திமிங்கிலம் பிடித்தல் ஆணையம் தற்பொழுது இரண்டு திமிங்கிலச் சரணாலயப் பகுதிகளை வரையறை செய்துள்ளது. தென்முனைப் பெருங்கடல் திமிங்கிலச் சரணாலயம் என்பது மற்றொரு திமிங்கிலச் சரணலாயமாகும். தென் அட்லாண்டிக் சரணாலயம் மற்றும் தென் பசிபிக் சரணாலயம் என்ற இரண்டு திமிங்கிலச் சரணாலயங்களை வரையறை செய்து அங்கீகரிக்கக் கோரும் திட்ட முன்மொழிவுகள் திரும்பத் திரும்ப அனைத்துலக திமிங்கிலம் பிடித்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றை அங்கீகரிப்பதறகுத் தேவையான 75% பெரும்பான்மை இதுவரையிலும் கிடைக்கவில்லை.
வரலாறு
தொகுசிறிய சீசெல்சு தீவு நாட்டின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியப் பெருங்கடல் சரணாலயம் 1979 ஆம் ஆண்டில்,அனைத்துலக திமிங்கிலம் பிடித்தல் ஆணையத்தால் நிறுவப்பட்டது. தங்கள் இனப்பெருக்க இடங்களிலாவது திமிங்கலங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை ஆணையத்தின் ஒரு உறுப்பினராக முதல் கூட்டத்தில், சீசெல்சு தீவு வைத்தது.
திமிங்கிலச் சரணாலயங்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் மீள்பார்வை செய்யப்ப்பட வேண்டும் என்பது அனைத்துலக திமிங்கிலம் பிடித்தல் ஆணையத்தின் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறையாகும். இதன்படி, இந்திய பெருங்கடல் திமிங்கலச் சரணாலயம் இதுவரை 1989, 1992 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகளில் மீள்நோக்கு செய்யப்பட்டு திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது.[1]
சரணாலயப் பரப்பு
தொகுஇந்திய பெருங்கடல் திமிங்கலச் சரணாலயம் தெற்கில் 55°தெற்கு அட்சம் வரையிலும், மேற்கு எல்லையாக ஆப்பிரிக்காவுடன் 20°கிழக்கு தீர்க்கம் வரையிலும், கிழக்கு எல்லையாக ஆத்திரேலியாவுடன் 130°கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. இச்சரணாலயத்தின் தெற்கு எல்லையில் தென்முனைப் பெருங்கடல் திமிங்கிலச் சரணாலயம் அமைந்துள்ளது.