இந்தியாவில் சட்ட உதவி பெறும் உரிமை

இந்தியக் குடியரசில் சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்றும் ஏழைகள், எழுத்தறிவு இல்லாதாவர்கள், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்குத் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள இலவச சட்ட உதவி (free legal aid) அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 39A மூலம் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றி வைக்க இந்திய அரசு தேசிய சட்ட பணிகள் ஆணையத்தை 1987 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட பணிகள் ஆணைய சட்டத்தின் மூலம் ஏற்படுத்தியது.

சட்ட உதவி பெறக்கூடியவர்கள் தொகு

  1. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர்
  2. பிச்சையெடுப்போர் அல்லது தன்னையே வியாபார பொருளாய் கொண்ட அடிமை நபர்
  3. பெண் அல்லது குழந்தை
  4. ஊனமுற்றோர்
  5. பேரழிவாலோ அல்லது இனக் கலவரங்களாலோ வெள்ளம்,பூகம்பம் இவற்றால் பாதிக்கப்பட்ட நபர்
  6. ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளி
  7. பாதுகாப்பு இல்லங்களில் வைக்கப்பட்ட நபர்
  8. மேற்கண்ட வரிசையில் வரும் நபருக்கு மட்டுமல்லாது வருட வருமானம் ரூ.9000க்கு குறைவான நபருக்கு உச்சநீதிமன்றம் அல்லாத இதர நீதிமன்றங்களிலும் வருட வருமானம் ரூ.12000க்கு குறைவான நபருக்கு உச்சநீதிமன்றத்திலும் இந்த அமைப்பு மூலம் சட்ட உதவி உண்டு.

சட்ட உதவி அமைப்புகள் தொகு

அனைத்து மாநிலத் தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் எங்கெல்லாம் நீதிமன்றங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் சட்ட உதவி குழுக்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு குழுவிலும், ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன. இவை தவிர மாவட்டங்களில் நீதிமன்றங்கள் இல்லாத ஊர்களிலும் சமரச மையங்கள் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் சில குறிப்பிட்ட ஊர்களிலும் பெண்களுக்கான தனி மையங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

மக்கள் நீதிமன்றங்கள் தொகு

இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முடிக்க உதவுவதற்கும் வழக்குகளில் விரைவில் நிவாரணம் பெறுவதற்கும் லோக் அதாலத்துகள் (மக்கள் நீதிமன்றங்கள்) என்ற அமைப்பை சட்ட பணிகள் ஆணையம் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 1986 முதல் நடத்திவருகிறது. சட்டபிரச்சனை எழாத வழக்குகளை நீதிமன்றங்களில் இருந்து பிரித்து எடுத்து விவரங்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் இருவரின் வழக்குரைஞர்களின் சம்மதத்துடன் மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. இருதரப்பினரையும் வைத்து அவர்கள் ஒரு உடன்பாடுக்கு வருவதற்கு உதவி செய்து வழக்கு உடனடியாக முடிக்கப்படுகிறது. இது உடன்பாட்டு தீர்வு என்பதால் இதற்கு மெல் முறையீடு கிடையாது.