இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேர்தல்கள்
தேர்தல்கள் (Elections ) குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 54, 66, 325, 326 மற்றும் சில பிரிவுகள் குறிப்பிடுகின்றன. [1]இப்பிரிவுகள் மூலம் தேர்தல்கள் எவ்வாறு யாரால் நடத்தப்படவேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு நடைபெற வேண்டிய தேர்தல் குறித்த நடைமுறைகளை பிரிவு 54-லிலும் துணைக்குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து பிரிவு 66-லிலும் குறிப்பிடுகின்றது. மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் நடைபெற வேண்டிய தேர்தல் குறித்து வழிமுறைகளும் கோட்பாடுகளும் பிரிவு 325, 326 போன்றவைகளில் விளக்கப்பட்டுள்ளது
சட்டமன்ற நாடுளுமன்ற தேர்தல்கள்
தொகுசட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் தேர்தல்கள் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டம் சில கோட்பாடுகளை விதித்துள்ளது. அவை பின்வருமாறு.
- ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இதில் சாதி மத இன அடிப்படையில் வேறுபாடு காண்பிக்கக் கூடாது (பிரிவு 325)
- 18 வயது நிறைந்த அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை உண்டு. இந்தியாவில் குடியில்லாமல் இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் அல்லது சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது (பிரிவு 326)
- இந்த மற்றும் இதர கோட்பாடுகளுக்குட்பட்டு, பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தேர்தல் தொடர்பான சட்டங்களை இயற்றலாம் (பிரிவு 327, ஏழாவது அட்டவணை முதல் பட்டியல் பதிவு 72)
- பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தில் இடம் பெறாத பொருள்கள் குறித்தும், சட்டசபை தேர்தல்களுக்கும், சட்டசபைகள் சட்டம் இயற்றலாம் (பிரிவு 328)
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951, தொகுதி வரையறை சட்டம் 1952, 1962, 2002, 2003 ஆகியவைகளை பாராளுமன்றம் ஏற்கனவே இயற்றியுள்ளது.
தேர்தல் குறை தீர்வு வழிமுறை
தொகு- தேர்தல் குறித்து யாருக்கு என்ன குறை இருந்தாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிட்டபடி, அந்தந்த உயர்நீதிமன்றங்களில் தான் வழக்குத் தொடர வேண்டும். மற்ற சாதாரண வழக்கு மன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மேல் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம்.(பிரிவு 329)
- அரசியலமைப்பின் 42-வது திருத்தச் சட்டத்தின் படி, புதிய பிரிவு 323-B அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சம்மந்தப்பட்ட சட்டமன்றங்கள், தேர்தல் வழக்குகளை கையாள, தனியாக ஆணையங்களை நிறுவலாம். அவ்வாறு நிறுவினால் தேர்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்காது ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
- அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 71-ன்படி, குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் குறித்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தான் விசாரிக்க முடியும்.
தேர்தல் ஆணையம்
தொகுதேர்தல் நடைமுறைகளை மேற்பார்வையிடவும், தேர்தல்களை சுமூகமாக நடத்தவும் தேர்தல் ஆணையத்தை நிறுவ பிரிவு 324-வகை செய்கிறது. தேர்தல் ஆணையர்கள் சுயமாக செயல்படவும், ஆணையம் சுய அதிகாரத்துடன் செயல்படவும், வகை செய்யும் வண்ணம், தேர்தல் ஆணையா்களை, சட்ட மன்றங்களோ, நிர்வாகமோ கட்டுப்படுத்தாத வகையில் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.[2]