இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14

இந்திய அரசியலமைப்புச் சட்டதின் 14ஆம் உறுப்பு இந்திய குடிமக்களின் சமத்துவத்தை கூறுகிறது.[1][2]

உறுப்பு

தொகு

இந்திய நிலப்பரப்பிற்குள் எவரொருவருக்கும் சட்டத்தின் முன் சம நிலையையோ அல்லது சட்டங்களின் சம பாதுகாப்பையோ அரசு மறுக்கலாகாது.

சம நிலை மற்றும் சம பாதுகாப்பு

தொகு

"சட்டத்தின் முன் சம நிலை" மற்றும் "சட்டங்களின் சம பாதுகாப்பு" என்ற இரண்டு வரிகளும் ஒன்றையே குறிப்பதை போல் தோன்றினாலும், உண்மையில் இரு வேறு பொருளை சொல்கிறது.

ஆனால், "சட்டங்களின் சம பாதுகாப்பு" என்பது சூழ்நிலைகள் சமமாக இருக்கும்போது, சட்டத்தால் சமமாக நடத்தப்படுவதற்கான ஒருவரின் உரிமையை நேர்மறையாக எடுத்து இயம்புகிறது.

இந்த இரண்டு கருத்துக்களும், ஒரு அரசியல் மக்களாட்சியில் சமூக மற்றும் பொருளாதார நியதியை உள்ளடக்கியது (டால்மியா சிமென்ட் (பாரத்) லிட். எதிர். இந்திய அரசு, 1996, 10 எஸ்.சி.சி. 104)

சட்டத்தின் ஆட்சி

தொகு

"சட்டத்தின் முன் சம நிலை" என்ற கோட்பாடானது "சட்டத்தின் ஆட்சி" (பேராசிரியர் டைசியின் "அரசியலைப்புச் சட்டம்", 1885) என்ற கருத்தின் இயற்கையான விளைவாகும். எந்த ஒரு மனிதனும் நாட்டின் சட்டத்திற்கு மேலானவன் அல்ல, ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டவரே, என்பதையே "சட்டத்தின் ஆட்சி" என்ற கருத்து குறிக்கிறது. ஆனால், இத்தகைய சமத்துவமானது கட்டுப்பாடற்ற ஒன்று அல்ல, சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டதே ஆகும்.

வகைப்படுத்தும் சட்டங்கள்

தொகு

உறுப்பு 14 ஒரு வகுப்பிற்காக சட்டம் இயற்றுவதை தடை செய்யும் அதே நேரத்தில், அறிவார்ந்த காரணங்களுக்காக வகைப்படுத்துவதை தடை செய்யவில்லை. மக்களை, சொத்துக்களை அல்லது பணிகளை வகைப்படுத்தி தனித்தனியான மற்றும் தகுதியான சட்டங்களுக்கு உட்படுத்துவது பொது நலனுக்கு கட்டாயமான ஒன்றாகும்.

ஏற்கத்தக்க வகைப்பாடுகள்

தொகு

ஒரு வகைப்பாடானது ஏற்கத்தக்கதா என்பதை கண்டறிய இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு சோதனைகளை உருவாக்கியது (மேற்கு வங்க மாநிலம் எதிர். அன்வர் அலி சர்கார், ஏ.ஐ.ஆர். 1952 எஸ்.சி. 75):

(1) அறியக் கூடிய வேறுபாடு சோதனை: எந்த நபர்களோ அல்லது பொருட்களோ அடங்கிய குழுவை வேறுபடுத்த விரும்புகிறோமோ அதற்கும் விடுபட்ட குழுவிற்கும் இடையே உள்ள அறியக்கூடிய வேறுபாட்டின் அடிப்படையில் வகைப்பாடானது அமைந்திருக்கிறதா?

(2) தொடர்பு சோதனை: சோதனைக்கு உள்ளாகியுள்ள சட்டத்தின் நோக்கத்திற்கும், மேற்சொன்ன அறியக் கூடிய வேறுபாட்டிற்கும் அறிவார்ந்த தொடர்பு இருக்கிறதா?

உதாரணத்திற்கு, இந்திய ஒப்பந்த சட்டம், 1872 -ன் பிரிவு 11 -ன் படி இளவர்கள் ஒப்பந்தம் மேற்கொள்ள இயலாது. இங்கு இளவர்கள், வயது வந்தோர் என்ற வகைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. வயதின் அடிப்படையிலான இந்த வகைப்பாடு அறியக் கூடிய ஒரு தகுதியான வேறுபாடாகும். வயதிற்கும் ஒருவரின் ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடிய தகுதிக்கும் அறிவார்ந்த தொடர்பு இருக்கிறது. ஆகவே இந்த வகைப்பாடு செல்லத்தக்கது.

ஆனால், கருப்பு நிற தலைமுடி உள்ளவர் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால், அது ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில் அத்தகைய வகைப்பாட்டிற்கும் சட்டத்தின் நோக்கத்திற்கும், அதாவது ஒப்பந்தம் மேற்கொள்பவரின் தகுதிக்கும் எந்தவொரு அறிவார்ந்த தொடர்பும் இல்லை.

புதிய அணுகுமுறை

தொகு

1970 -ல் இருந்து உறுப்பு 14 -ற்கு ஒரு புதிய அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் கொடுக்கத் தொடங்கியது. இ.பி. ராயப்பா எதிர். தமிழ்நாடு மாநில அரசு (ஏ.ஐ.ஆர். 1974 எஸ்.சி. 555) என்ற வழக்கில் நீதியரசர் பகவதி சமத்துவம் என்பது ஒரு துடிப்பான கருத்து, அதனை விதிகளுக்குள் கட்டுப்படுத்த இயலாது என்றும் எந்தவொரு செயல் தன்னிச்சையானதாக இருக்கிறதோ அது உறுப்பு 14 -ஐ மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரே, மேனகா காந்தி எதிர். இந்திய அரசு (ஏ.ஐ.ஆர். 1978 எஸ்.சி. 597) என்ற வழக்கிலும் உறுப்பு 14 அரசின் தன்னிச்சையான செயல்பாட்டை தாக்குவதாகவும் நியாயத்தையும், சமமாக நடத்தப்படுவதையும் கட்டிக் காப்பதாகவும் உள்ளது என்கிறார்.

ஆகவே அரசின் செயல்பாடுகளில் நியாயத் தன்மை அமைந்திருக்க வேண்டும் என்பதே உறுப்பு 14 -ன் தேவையாகும்.

சமத்துவக் கொள்கையின் புதிய வளர்ச்சிகளில் ஒன்றாக அரசின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தலும் திகழ்கிறது. சமத்துவம் ஒரு ஆக்கப்பூர்வமான உரிமை, சமமற்ற நிலையை குறைத்து சமமற்றோருக்கும் வாய்ப்பில்லாதோருக்கும் சிறப்பு கவனம் செலுத்த அது அரசை பணிக்கிறது (இந்திரா சானி எதிர். இந்திய அரசு ஏ.ஐ.ஆர். 1992 எஸ்.சி. 477)

மேற்கோள்கள்

தொகு
  1. "Mamata's allowance for Imams, Muezzins unconstitutional: High Court". The Hindu. 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
  2. "Article 14 in The Constitution Of India 1949". Indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.