இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனம் (INSTITUTE OF COMPANY SECRETARIES OF INDIA - ICSI) வர்த்தக நிறுவனங்கள் பொது மக்களின் நலனுக்கு எந்தவிதமான ஊறும் விளைவிக்காமல் பார்த்துக்கொள்வதற்காகவும் அவற்றை சரியாக வழி நடத்துவதற்காகவும் மேலும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களுக்காகவும் இந்திய அரசாங்கம் பல சட்டங்களை இயற்றி அமல்படுத்தி வருகிறது.
உதாரணம்: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், தொழிலாளர் நலனுக்காக இயற்றப்பட்டுள்ள தொழில் தகராறுகள் சட்டம் (1947), குறைந்த பட்ச ஊதியச் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் (1948) போன்றவை. வர்த்தக நிறுவனங்களை மேலாண்மை செய்து வரும் இயக்குனர்கள் பொதுவாக தங்களது வர்த்தகப் பணிகளில் திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற வர்த்தகச் சட்டங்களைப் பற்றியோ அல்லது அவற்றின் கீழ் தங்களது நிறுவனம் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தோ அவர்கள் முற்றிலும் அறிந்திருப்பதில்லை. இந்நிலையில் வர்த்தக நிறுவனங்கள் சட்டப்படி ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து தவறி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சட்டப்படி செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல் விட்டுவிட்டால் நிறுவனத்தின் இயக்குனர்கள் தண்டம் செலுத்துவதுடன் சில சமயங்களில் சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும். இத்தகைய நிலையைத் தவிர்க்க வேண்டுமெனில் வர்த்தக நிறுவனங்கள் கடைப் பிடிக்க வேண்டிய சட்டங்கள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றில் புலமை உடைய ஒருவரைத் தங்கள் உதவிக்காக நியமித்துக் கொள்வது நன்மை பயக்கும். இத்தகைய திறன்களைக் கொண்டவரை நிறுமச் செயலர் என்கிறோம். இவருக்குத் தேவையான கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றை அளிப்பதற்காக இந்திய நடுவண் அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புச் சட்டம் மூலம் இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனத்தை உருவாக்கியது.