இந்திய மணிப்புறா
இந்திய மணிப்புறா (Indian Spotted Dove) (உயிரியல் பெயர்: Spilopelia chinensis suratensis) என்பது மணிப்புறாவின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை பாக்கித்தான், தீபகற்ப இந்தியா, மேற்கு நேபாளம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. இது இந்தியா, பாக்கித்தான், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுஇப்பறவை புறாவை விட அளவில் சற்று சிறியது. சுமார் 20 செ.மீ. நீளம் கொண்டது. அலகு கறுப்பாகவும், விழிப்படலம் இளஞ்சிவப்பாகவும், கால்கள் ஆழ்ந்த ஊதா கலந்த சிவப்பாகவும் இருக்கும். சற்று மெலிந்த தோற்றம் கொண்ட பறவை இது ஆகும். உடலின் மேற் பகுதி உறஞ்சிவப்புக் கலந்த பழுப்பாகவும், சாம்பல் நிறமாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதியில் வெள்ளைப் புள்ளிகள் பரவலாக காணப்படும். கழுத்தில் வெள்ளையும் கறுப்புமான சதுரங்க பலகைக் கட்டங்களைப் ஒத்த புள்ளிகள் இருக்கும். வால் கரும்புழுப்பாகவும், சிலேட் நிறத்திலும் அகன்ற வெள்ளை விளிம்போடும் காணப்படும். பறவை தரையிறங்கும்போது வால் இறகுகளின் வெள்ளை விளிம்புகள் தெளிவாக காணலாம். தொண்டை இளஞ்சிவப்பாகவும், வயிறு, வாலடி, வால் கீழிறகுகள் போன்றவை வெள்ளையாகவும், மார்பு இளஞ்சிவப்புக் கலந்த சாம்பல் நிறமாகவும் இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தொகுஇப்பறவை இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியா, பாக்கித்தான், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும் மலைகளில் 1500 மீட்டர் உயரம் வரைக் காணலாம். நீர் வளமிக்க காடுகளையும், தோட்டங்களையும், விளை நிலங்களையும், ஈரம் மிக்க இளையுதிர் காடுகளையும் அடுத்து திரியும்.[2]
நடத்தை
தொகுஇப்பறவை நீர்வளம் மிக்க இடங்களை சார்ந்து வாழக்கூடியது. இணையாகவோ அல்லது கூட்டமாகவோ காட்டுப் பாதையிலிலும், அறுவடை முடிந்த வயல்களில் மேயும். மனிதர்கள் நெருங்கினால் இறக்கைகள் விர்ரெனப் படபடக்க எழுந்து பக்க வாட்டில் வளைந்து பறந்து செல்லும். உயர இருந்து பறந்துவந்து படிப்படியாக தாழ்ந்து இறக்கையை விரித்து மரங்களில் அமரும். தானியங்கள், விதைகள் போன்றவற்றை முதன்மையாக உண்ணும்.[2]
இனியதாக துயரம் தோய்ந்த குரலில் க்ருஉ ஓக்ரூஉக், க்ரூஊக் ஒஉ.. க்ரூஊஓ என கத்தும். மேலும் பலவகை குரல்களில் ஒலி எழுப்பக்கூடியது.
இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியன. மரங்களின் கீழீகவும், பாறை இடுக்குளிலும், வீட்டுத் தாழ்வாரங்களிலும் சிறு குச்சிகள் ,உற்கள் போன்றவற்றைக் கொண்டு சற்று குழுவான மேடை அமைத்து இரண்டு வெள்ளை முட்டைகளை இடும். சில சமயங்களில் மூன்று முட்டைகளை இடுவதும் உண்டு. 13 நாட்கள் அடைகாக்கும். கூடுகட்டுதல் அடைகாத்தல் போன்றவற்றில் ஆண், பெண் என இரு பறவைகளும் பணியை பகிர்ந்து கொள்ளும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 221–222.