இனவரைவியல்

இனவரைவியல் (Ethnography) என்பது, கள ஆய்வுகளின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். ஒரு முறைமையின் பகுதிகளைத் தனித்தனியாக அணுகுவதன்மூலம் அம்முறைமையை அச்சொட்டாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணக்கருத்தின் அடிப்படையில் உருவான ஒரு முழுதளாவிய ஆய்வு முறையின் விளைவுகளை இனவரைவியல் முன்வைக்கிறது. இனக்குழுபற்றிய முழுமையான ஆய்வு என்பதனால் இதனை இனக்குழுவியல் என்றும் குறிப்பிடலாம். இது, பயண எழுத்தாக்கம், குடியேற்றவாத அலுவலகங்களின் அறிக்கைகள் ஆகியவற்றுடன் முறைசார்ந்ததும், வரலாற்றுரீதியானதுமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில், பயணிகளும், புத்தாய்வாளரும், சமயம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த குருமாரும், குடியேற்றவாத அலுவலருமே இனக்குழுக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தனர். இவர்கள் குறிப்பிட்ட துறையில் பயிற்சியற்றவர்கள் ஆதலால் இவர்களுடைய தொகுப்புக்கள் முழுமையானவையாகவோ அல்லது போதுமானவையாகவோ அமையவில்லை. பிற்காலத்தில் முறைப்படி பயிற்சிபெற்ற மானிடவியலாளர்கள் இதற்கெனவே மக்களிடம் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.[1][2][3]

பண்பாட்டு மானிடவியலும், சமூக மானிடவியலும்

தொகு

பண்பாட்டு மானிடவியலும், சமூக மானிடவியலும் பெரும்பாலும் இனவரைவியல் ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவையே. இத்துறைகள் சார்ந்த நூல்களும் பெரும்பாலும் இனவரைவியல் நூல்களே. புரொனிஸ்லோ மலினோவ்ஸ்கி எழுதிய மேற்குப் பசிபிக்கின் ஆர்கோனெட்டுகள் என்னும் நூல், ஈ, ஈ. இவான்ஸ் பிரிச்சாட் (E. E. Evans-Pritchard) என்பவரின் நியுவர் (The Nuer), மார்கிரட் மீட் (Margaret Mead) என்பவரின் சமோவாவின் முதிர்ச்சி என்னும் நூல், கிரெகரி பட்டெசன் (Gregory Bateson) என்பவரின் நாவென் என்பன இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பண்பாட்டு மானிடவியலில், பல இனவரைவியல் துணைத் துறைகள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Dench, Emma (2017-09-12). "Ethnography and History". A Companion to Greek and Roman Historiography. Oxford, UK: Blackwell Publishing Ltd. pp. 471–480. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781405185110.ch51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405185110.
  2. "CHAPTER SIX. Tacitus on the Germans". Rethinking the Other in Antiquity. Princeton University Press. 2010-12-31. pp. 159–178. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/9781400836550.159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400836550.
  3. Vermeulen, Han F., 2008, Early History of Ethnography and Ethnology in the German Enlightenment, Leiden, p. 199.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனவரைவியல்&oldid=3769060" இலிருந்து மீள்விக்கப்பட்டது