இரயில்வே பணியாளர் குடியிருப்பு, பொன்மலை

பொன்மலை இரயில்வே பணியாளர் குடியிருப்பு (Railway Colony, Golden Rock) என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியின், பொன்மலையில் இரயில்வே பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்காக உள்ள ஒரு குடியிருப்பு ஆகும்.

பொன்மலை இரயில்வே பணியாளர் குடியிருப்பில் ஒரு வீடு
பொன்மலை பணியாளர் குடியிருப்பு துவக்கப்பள்ளி

வரலாறு

தொகு

நாகப்பட்டினத்தில் செயல்பட்டுவந்த ரயில்வே பணிமனையானது 1926 இல் திருச்சி பொன்மலைக்கு மாற்றப்பட்டது. அப்போது, இங்கு 11 லட்சத்து 12 ஆயிரத்து 460 சதுர அடியில், ரயில்வே பணியாளர் குடியிருப்பு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய நான்காயிரம் வீடுகளுடன் உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில், பணியாளர்களின் பதவிக்கேற்ப வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான 8 வகையான வீடுகள் இங்கு கட்டப்பட்டன. அனைத்து வீடுகளுக்கும் புதைச் சாக்கடை, குடிநீர் குழாய் வசதிகளுடன் பூமிக்கடியில் செல்லும் கம்பிவழியாக மின்சாரமும் வழங்கப்பட்டது. எட்டு வகை குடியிருப்புக்கும் தனித்தனியாக பூங்கா, சிறிய விளையாட்டு திடல், தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

தொடக்கப் பள்ளிகள் தவிர, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் படிக்க இந்தக் குடியிருப்புக்குள் இரண்டு மேல் நிலைப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன. குடியிருப்பின் நடுவில் வாரச்சந்தைக்கு இடம் விடப்பட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை கூடியது. பிள்ளைகள் விளையாட இரண்டு பெரிய மைதானங்களும் உண்டு. கலை நிகழ்ச்சிகளுக்காக, நடன அரங்கமும் நாடக அரங்கமும் செயற்கை நீருற்றுகளுடன் அமைக்கப்பட்டன. நாடக அரங்கம் பின்னர் திரையரங்கமாக மாறியது. இரண்டு அரங்கங்களுமே இப்போது செயல்படவில்லை. இவற்றின் ஒரு பகுதியில் படிப்பகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் மட்டும் இயங்கி வருகின்றன தற்சமயம் இங்கு 750 வீடுகள் மட்டுமே ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளன. மற்றவீடுகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. அ. சாதிக் பாட்சா (5 ஆகத்து 2017). "ஆங்கிலேயர் உருவாக்கிய அதிநவீன நகரம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2017.