இரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்


27 நட்சத்திரங்களைக் கொண்டு இரவில் மணி அறிவதற்கு, தமிழ் மரபில் ஓர் ஒற்றைப்பாடல் உண்டு. இதற்கு ஏடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பாடல் கீழே கொடுக்கப்படுகிறது.

பாடல்

தொகு

சித்திரைக்குப் பூசமுதல் சீராவணிக் கனுஷமாம்

அத்தனுசுக் குத்திரட்டாதியாம்; நித்த நித்தம்

ஏதுச்சமானாலும் இரண்டேகாலிற் பெருக்கி

மாதமைந்து தள்ளி மதி.

பயனும் பொருளும்

தொகு

இப்பாடலைக்கொண்டு ஒரு தோராயமான முறையில், இரவில் நட்சத்திரங்கள் உச்சத்தில் வருவதைப் பார்த்து, அப்போதைய நேரத்தைச் சொல்லிவிடலாம். ஆனால் 27 நட்சத்திரங்களை அவைகளுடைய வரிசையில் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், வானத்தில் அவைகளை அடையாளம் காட்டவும் தெரிய வேண்டும்.

பொருள்: சித்திரையிலிருந்து நான்கு மாதங்களுக்கு (இது முதல் சுற்று) பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணு; ஆவணியிலிருந்து நான்கு மாதத்திற்கு (இது இரண்டாவது சுற்று) னு நட்சத்திரத்திலிருந்து எண்ணு. மார்கழி மாதத்திலிருந்து நான்கு மாதத்திற்கு (இது மூன்றாவது சுற்று) உத்திரட்டாதியிலிருந்து எண்ணு. ஒவ்வொரு நேரமும் எந்த நட்சத்திரம் உச்சத்தில் காணப்படுகிறதோ அந்த எண்ணிக்கையை இரண்டேகாலால் பெருக்கி, வரும் தொகையிலிருந்து, 5m ஐக்கழிக்கவேண்டும். இங்கு m என்பது, நாம் பார்க்கும் மாதம் எதுவோ அது எந்தச் சுற்றில் வருகிறதோ அந்தச் சுற்றில் அது எத்தனையாவது மாதம் என்ற எண்ணிக்கை. இப்படி கணிக்கப்படும் எண் தான் சூரியன் அஸ்தமித்ததிலிருந்து எத்தனை நாழிகைகள் ஆகியிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் எண்.(1 நாழிகை = 24 நிமிடங்கள்).

எடுத்துக்காட்டுகள்

தொகு

எ.கா. 1: வைகாசி 2ம் தேதியன்று இரவில் நாம் சுவாதி (Arcturus: Alpha-Bootis) நட்சத்திரத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். மாதம் முதல் சுற்றில் இரண்டாவது மாதம். அதனால் 5m = 10.பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணினால் சுவாதி எட்டாவது நட்சத்திரம். 8 x 2 1/4 = 18. ஆக நமக்குக் கிடைக்கும் எண்ணிக்கை 18-10 = 8. 8 நாழிகைகள் = 3 மணி 12 நிமிடம். இதனால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 9.12 p.m.

எ.கா. 2: மாசி மாதம் 30ம் தேதியன்று இரவில் சித்திரை (Spica)யை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். மாசி மாதம் மூன்றாவது சுற்றில் மூன்றாவது மாதம். அதனால் 5m = 5x3 = 15. இப்பொழுது உத்திரட்டாதியிலிருந்து எண்ணவேண்டும். உத்திரட்டாதியிலிருந்து சித்திரை 16வது நட்சத்திரம். இதை இரண்டேகாலால் பெருக்க, கிடைப்பது 36. 36 - 15 = 21. சூரியாஸ்தமனத்திலிருந்து 21 நாழிகை கணக்கிட்டால், இரவு 2.24 A.M. என்பது அப்போதைய நேரத்தின் தோராயமான கணிப்பு.

வாய்பாடின் சிறப்புகளும் குறைகளும்

தொகு

சிறப்புகள் மூன்று.

  • ஒரே பாடலில் அத்தனையும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • கணிப்பு முறை வெகு எளிது.
  • ஒரே வாய்பாட்டை ஆண்டு முழுவதற்கும் பயன்படுத்தாமல், வெவ்வேறு மாதங்களுக்கு அததற்குரிய திருத்தங்கள் பாடலுக்குள்ளேயே பொருத்தப்பட்டிருக்கின்றன.

குறைகளும் மூன்று.

  • கணிப்பு மிகத் தோராயமானது. வடமொழியில் இருக்கும் 27 வாய்பாடுகளும், தமிழிலேயே வேறு மரபில் உள்ள அதே போன்ற 27 வாய்பாடுகளும் இதைவிட நேரத்தை மிகவும் துல்லியமாகச் சொல்லக்கூடியவை.
  • ஒவ்வொரு மாதத்திற்குள் உள்ள வெவ்வேறு நாட்களை இந்த வாய்பாடு வேறுபடுத்தாதது இதன் இரண்டாவது குறை.
  • நட்சத்திரங்களை அடையாளம் காட்டத் தெரியாவிட்டால் வாய்பாட்டினால் பயனில்லை.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

இரவில் மணி அறிதல்: வடமொழியில் 27 வாய்பாடுகள்

இரவில் மணி அறிதல்: தமிழில் 27 வாய்பாடுகள்

துணைநூல்கள்

தொகு

V. Krishnamurthy. The Clock of the Night Sky.1998. UBS Publishers. New Delhi.